பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மஜத தேசிய தலைவர் தேவகவுடா, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், பீஹார் முதல்வர் நிதிஷ் குமார், பாஜக ஆளும் 22 மாநிலங்களின் முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், முன்னாள் முதல்வர்கள்..!
ஓட்டுவேட்டைக்காக கர்நாடகாவுக்குப் படையெடுத்திருக்கும் அரசியல்வாதிகளின் பட்டியல் இது. மே 15-ம் தேதி தேர்தல் முடிவு வரும்போது தெரியப்போவது, ‘கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார்?’ என்கிற கேள்விக்கான விடை மட்டுமல்ல… ‘இந்தியாவின் அடுத்த பிரதமர் யார்?’ என்பதற்கான உத்தேச பதிலும்தான்! அதனால்தான், அரக்கப்பரக்க ஓடி வந்து இங்கே ஓட்டு வேட்டை நடத்துகிறார்கள்.
சித்தராமையாவுக்கு செக்
கர்நாடக மாநிலத்தில் மொத்தமுள்ள 224 தொகுதிகளுக்கும் வருகிற மே 12-ல், ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதில், எதிர்க்கட்சியான பாஜக 224 தொகுதிகளிலும், ஆளும் காங்கிரஸ் 222 தொகுதிகளிலும், மஜத கூட்டணி 221 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. கர்நாடகாவில் பெரும்பான்மையாக வசிக்கும் தலித், லிங்காயத், ஒக்கலிகா ஆகிய சமூகத்தவரின் வாக்குகளைக் கவர, ஒவ்வொரு கட்சியும் இந்த மூன்று சமுதாயத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கின்றன. காங்கிரஸுக்கும், மஜத – பகுஜன் சமாஜ் கூட்டணிக்கும் தலித், முஸ்லிம் வாக்குகளைப் பெற கடும் போட்டி! பாஜக-வோ முழுக்க நனைந்த கதையாக, ஒரு முஸ்லிம் வேட்பாளரைக்கூட நிறுத்தவில்லை.
‘பாக்யா’க்கள் பயன் தருமா?
தேவகவுடா தனது மகன் குமாரசாமிக்கு முக்கியத்துவம் கொடுத்ததை எதிர்த்ததால்தான், சித்தராமையா 2005-ல் மஜத-வில் இருந்து நீக்கப்பட்டார். காங்கிரஸில் இணைந்து 2008 தேர்தலில் வென்று, எதிர்க்கட்சித் தலைவர் ஆனவர், 2013 தேர்தலில் வென்று முதல்வராகவும் ஆனார். வெளியே இருந்து வந்த சித்தராமையாவுக்கு முதல்வர் நாற்காலி கொடுத்ததால், காலங்காலமாக காங்கிரஸில் இருந்தவர்கள் கடுப்பானார்கள். கட்சிக்குள்ளும், ஆட்சிக்குள்ளும் சித்தராமையாவுக்கு எதிராக உள்ளடி வேலைபார்த்தார்கள். இன்னொரு பக்கம், ‘விரட்டப்பட்ட தன் சிஷ்யன் முதல்வராகி விட்டானே’ என தேவகவுடாவும் விடாது தொல்லை கொடுத்தார்.
பெங்களூரு பலாத்கார சம்பவங்கள், அதிகாரிகளின் துர் மரணங்கள், சில அமைச்சர்களின் ஊழல் என எல்லாவற்றுக்கும் சித்தராமையாவின் தலையைப் போட்டு உருட்டினார்கள். அவரோ, தன்னை நோக்கி வந்த அத்தனை அக்னிப் பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டி, 5 ஆண்டுகால ஆட்சியை நிறைவுசெய்திருக்கிறார். கர்நாடகாவில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு தன் பதவிக்காலத்தை முழுமையாக நிறைவுசெய்த முதல்வர் இவர்தான். அப்படி ஒரு ராசி கர்நாடக முதல்வர் நாற்காலிக்கு!
அமித் ஷா வியூகம் பலிக்குமா?
கடந்த ஆண்டு கர்நாடகாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டதில் இருந்தே, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தேர்தல் வேலையைத் தொடங்கிவிட்டார். பிரிந்திருந்தவர்களையும், மோதிக்கொண்டிருந்தவர்களையும் கைகோத்துவிட்டு கட்சி வேலையில் மட்டும் கவனம் செலுத்தச் சொன்னார். கடந்த நவம்பர் 2-ம் தேதி, ‘மாற்றத்துக்கான யாத்திரை’ என்கிற பெயரில் பாஜகவின் தேர்தல் பிரச்சாரத்தை அதிகாரபூர்வமாகத் தொடங்கி, முதல்வர் வேட்பாளராக எடியூரப்பாவின் பெயரையும் அறிவித்தார் அமித் ஷா. கர்நாடகாவில் உள்ள 30 மாவட்டங்களிலும் 7 கட்டங்களாகக் கூட்டம் நடத்தி, வாக்கு மையங்கள் வாரியாக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள முக்கியமான மடாதிபதிகளைச் சந்தித்து பாஜகவுக்கு ஆதரவு கேட்டார்.
ராகுல் காந்தியின் ஆலய தரிசனம்
பாஜகவின் இந்த கடும் போட்டியைச் சமாளிக்கும் வகையில் காங்கிரஸ் நவம்பர் 27-ம் தேதி, ‘டோர் டூ டோர்’ பிரச்சாரத்தைத் தொடங்கியது. ஜனவரி இறுதிவாரத்தில் கர்நாடகா வந்த ராகுல் காந்தி ‘மக்கள் ஆசி பயணம்’ என்கிற பெயரில் 6 கட்டங்களாக 30 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். மோடியின் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள், பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி வரி விதிப்பு, கறுப்புக் பணம் ஒழிப்பு, எடியூரப்பாவின் ஊழல், ரெட்டி சகோதரர்களின் சுரங்க மோசடி உள்ளிட்ட விவகாரங்களை வெளுத்து வாங்கினார். பாஜக ஆட்சியில் தலித்துகள் மீதான தாக்குதல், சிறுபான்மையினருக்கு எதிரான கலவரம், பெண்களுக்கு எதிராகத் தொடரும் வன்முறைச் சம்பவங்கள் என ராகுல் பேசிய விஷயங்களுக்கு கர்நாடகாவில் நல்ல வரவேற்பு. ‘‘திரு. மோடி அவர்களே, மக்களவைத் தேர்தலின் போது சொன்ன 15 லட்ச ரூபாயை எப்போது அக்கவுன்ட்டில் போடுவீர்கள்?”என ராகுல் கேட்டபோது எழுந்த மக்களின் ஆரவாரம் டெல்லிக்கே கேட்டிருக்கும்.
கவுடா கணக்கு
கர்நாடகாவில் காங்கிரஸ், பாஜகவுக்கு அடுத்த பெரிய கட்சியான மஜத, அடுத்த ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கும் தன் மகன் குமாரசாமியை முதல்வராக்க, தேவகவுடா துடிக்கிறார். இதற்கு ஒக்கலிகா, சிறுபான்மையினர், விவசாயிகளின் வாக்குகளை நம்பி இருக்கிறார். மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைத்ததன் மூலம் தலித்துகளின் வாக்குகளையும் எதிர்பார்க்கிறார். 20 முதல் 26 சதவீத வாக்கு வங்கியைக் கொண்டுள்ள மஜதவுக்கு மாயாவதியின் ஆதரவால் 35 சதவீதம் வரை வாக்கு கிடைக்கும். இதன் மூலம் 113 இடங்களைக் கைப்பற்றி, தனித்து ஆட்சி அமைக்க கணக்கு போடுகிறார் தேவகவுடா.
தமிழா… தமிழா..!
இதெல்லாம் ஒருபுறம் இருக்க, கர்நாடகாவில் சுமார் 40 தொகுதிகளின் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் தமிழர்களுக்கு பாஜக ஒரு தொகுதி கூட வழங்கவில்லை. அங்கிருந்த தமிழ் நிர்வாகிகள் காங்கிரஸில் இணைந்துவிட்டனர். தமிழரான சம்பத்ராஜுக்கு பெங்களூரு மாநகராட்சி மேயர் பதவியைக் காங்கிரஸ் அளித்தது. அதோடு, இப்போது தேர்தலிலும் வாய்ப்பு அளித்திருப்பதால், தமிழர்கள் கை மீது கொஞ்சம் காதலாகத்தான் இருக்கிறார்கள். அதேவேளையில் மஜத கோலார் தங்கவயலில் தமிழரான பக்தவசலத்துக்கு வாய்ப்பு கொடுத்திருப்பதால், அங்கு தமிழர்களின் வாக்குகள் சிதறும் எனத் தெரிகிறது.
அடுத்த பிரதமர்?
கர்நாடக தேர்தல் முடிவு, 2019 தேர்தலை எதிர்பார்த்திருக்கும் ராகுல் காந்தியின் தலை எழுத்தை மட்டுமல்ல, மோடியின் தலை எழுத்தையும் தீர்மானிக்கும். ஒரு வேளை இந்தத் தேர்தலில் பாஜக தோற்றால், ‘அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலிலும் தோற்று விடும். அதனால் பிரதமர் வேட்பாளரை மாற்ற வேண்டும்’ என ஆர்எஸ்எஸ் பேச ஆரம்பித்துவிடும். எனவே, கர்நாடகாவில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் மோடி படை இருக்கிறது!
(The Hindu)