சொந்த மாநில மக்கள் தூசுப்புயலால் மடிந்து கிடக்க கர்நாடகத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த உ.பி. முதல்வர் ஆதித்யநாத் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. இதனால் தேர்தல் பிரச்சாரத்தை பாதியிலேயே முடித்து உபி புறப்பட்டார்.உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் நேற்றுமுன்தினம் இரவு பலத்த காற்றுடன், தூசுப்புயல் ஏற்பட்டு இடிமின்னலுடன் கூடிய மழை பெய்தது. இதில் உ.பியில் மரங்கள் வேறோடு பெயர்ந்து விழுந்தனர், வீடுகள் பல இடிந்தன, மின்கம்பங்கள் சாலையில்சாய்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த தூசுப்புயலில் சிக்கி 73 பேர் பலியானார்கள். அடுத்த இரு நாட்களுக்கு இந்த தூசுப்புயலும், மழையும் இருக்கும என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
சொந்த மாநிலத்தில் மக்கள் மழையிலும் புயலிலும் சிக்கி மடிந்து கிடக்கும் நிலையில், கர்நாடக மாநிலத்தில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருந்தார். மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளையும், மீட்புப்பணிகளையும் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.
ஆனால், மண்ணின் மைந்தர்களுக்கு பாதிப்பு ஏற்படும் போது அது குறித்து கவலைப்படாத முதல்வர் ஆதித்யநாத்தை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கின.
கர்நாடக தேர்தலில் இருந்த ஆதித்யநாத்தை முதல்வர் சித்தராமை ட்வீட் மூலம் வெறுப்பேற்றினார். அவரின் பதிவில் மன்னிக்கவும் உ.பி. மக்களே உங்களின் முதல்வரின் பணி இப்போது கர்நாடகத்துக்கு தேவைப்படுகிறது. விரைவில் அங்கு வந்துவிடுவார், அவரின் பணியில் ஈடுபடுவார் எனத் தெரிவித்திருந்தார்.
சமாஜ்வாதி கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் விடுத்த ட்வீட்டில், முதல்வர் ஆதித்யநாத் கர்நாடகத் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துவிட்டு, உடனடியாக உத்தரப்பிரதேசத்துக்கு திரும்ப வேண்டும். மக்கள் அவரை முதல்வராகத் தேர்வு செய்தது மாநிலத்தின் பிரச்சினைகளை தீர்த்துவைப்பதற்காகத்தான், கர்நாடகாவில் அரசியல் செய்ய அல்ல. மாநிலத்தில் நிலவும் இதுபோன்ற சூழலில் அவர் திரும்பவிட்டால், அவர் கர்நாடகத்திலேயே சொந்தமாக மடம் அமைத்து அங்கேயே தங்கிகொள்ளட்டும் எனத் தெரிவித்தார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி கூறுகையில், மோடியும், ஆதித்யநாத்தும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக இருக்கிறார்கள். சுயநலத்தோடு தேர்தல் ஆதாயத்துக்காக பணியாற்றுகிறார்கள். ஆதித்யநாத் அரசிடம் இருந்து எதையும் மனிதநேயத்தோடு அதிகமாக ஈடுபட முடியாது. பொறுப்பற்ற முதல்வராக திகழ்கிறார் எனத் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச காங்கிரஸ் தலைவர் ராஜ் பப்பார் கூறுகையில், நாட்டிலேயே மிகவும் பொறுப்பற்ற முதல்வர் ஆதித்யநாத். இவர் முதல்வர் பணியை பகுதிநேரப்பணியாகவே பார்க்கிறார். மாநிலத்தின் பிரச்சினைகளைப் தீர்க்க அவரை முதல்வராக மக்கள் ஆக்கியிருக்கிறார்கள். ஆனால்,முதல்வரும், அவரின் அமைச்சர்களும் மற்றொரு மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள். தூசுப்புயலில் இறந்தவர்களுக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்கவேண்டும் என்று தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனம் செய்ததைத் தொடர்ந்து கர்நாடகவில் இருந்து உ.பி. முதல்வர் ஆதித்யநாத் இன்று புறப்பட்டார். அவரின் திட்டப்படி சனிக்கிழமை மாலை வரை ப பிரச்சாரம் செய்துவிட்டு அதன்பின் புறப்படுவதாக ஆதித்யநாத்முடிவு செய்து இருந்தார். ஆனால், எதிர்க்கட்சிகள் விமர்சனத்தை தாங்காமல் கர்நாடகாவில் இருந்து ஆதித்யநாத் புறப்பட்டுவிட்டார்.
நாளை காலை கான்பூர் உள்ளிட்ட தூசிப்புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்யும் ஆதித்யநாத் மக்களுக்கு ஆறுதல் தெரிவிக்க உள்ளார்.