மழைப் பேரிடரில் இப்படியும் நடக்கின்றது

’உதவும் நண்பர்களே,
உங்கள் மீது எனக்குள்ள அக்கறையினால் கூறுகிறேன்!’

(ம.செந்தமிழன்)

சென்னைக்குப் பொருட்கள் அனுப்புவோர், புதிதாக எழுந்துள்ள ஒரு சிக்கலை அறிந்துகொள்வதற்காக இதை எழுதுகிறேன். கடலூர் மற்றும் அதன் சுற்றுப் புறச் சாலைகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக நின்று கொண்டு வாகனங்களை மறித்து, பொருட்களைப் பறிக்கும் சம்பவங்கள் ஏராளமாக நடக்கின்றன. நாங்கள் நேற்று இச்சம்பவங்களை நேரில் கண்டோம். இந்த மக்கள் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல, சாலையோரங்களில் வாழ்பவர்கள்.

குடும்பம் குடும்பமாக சேர்ந்து இச்செயலில் ஈடுபடுகின்றனர். சிறுவர்கள் கூட வாகனங்களை மறிக்கின்றனர். வெறும் பிஸ்கட் பாக்கெட்டுகளைக் கூடப் பறித்துச் செல்கின்றனர். பாதிக்கப்பட்ட மக்கள் சாலையிலிருந்து வெகு தொலைவில் இருக்கிறார்கள். அவர்களுக்குப் பொருட்களைத் தரக் கூடாது என சாலையோர மக்கள் தடுக்கின்றனர்.

சென்னைக்குள்ளும் இச்சம்பவங்கள் நிகழத் துவங்கிவிட்டன. பொருட்களை இருப்பு வைக்கும் வீடுகளைத் தேடிவரும் பலர் ஒருவகையாக மிரட்டத் துவங்கியுள்ளனர். குடிநீரை வாங்கிச் சென்று சாராயத்தில் கலந்து குடிப்போரும் பெருகிக்கொண்டுள்ளனர்.

அரசியல் கட்சி பிரமுகர்களின் அடாவடிகள் சொல்லி மாளாது. ஒரு பகுதிக்குள் பொருட்கள் சென்றால் அந்த வாகனத்தை மறித்து, தங்கள் கட்சிக் கொடியுடன் அவற்றைக் கொடுக்கிறார்கள் அவர்கள். சென்னை குழுவினரின் பொருள் இருப்பகம் ஒன்றை அந்தப் பகுதி கவுன்சிலர், கைப்பற்ற முயற்சித்தார். நமது குழுவினரின் உறுதிமிக்க எதிர்ப்பு அவரை விலகச் செய்தது.

பொருட்கள் வைக்க இடம் அளித்த ஒரு வீட்டு உரிமையாளர், ‘இனி இந்தப் பொருட்களை நீங்கள் எடுத்துச் செல்லக் கூடாது’ என மறுத்தார். செம்மை சமூகம் சென்னை தலைவர் திரு.ராஜராஜனின் சகோதரரிர்ன் ஏற்பாட்டில் வந்த இளைஞர்கள் நமது பொருட்களைக் கைப்பற்றி கொண்டு வந்தனர்.

மறியல் என்ற பேரில் சாலையில் செல்லும் மக்களிடம் பணம் பறிக்கும் சம்பவங்கள் ஆங்காங்கு நடக்கின்றன.

நான் உறுதியாகச் சொல்வேன், இங்கே பொருட்களுக்குத் தட்டுபாடு இல்லவே இல்லை. பொருட்கள் குவிகின்றன. தேவைப்படும் மக்கள் எண்ணிக்கையும் மிகுதியாகிறது. இடையில் உள்ள பெருங்கூட்டம் கொள்ளைக்கு நிகரான வேலைகளில் ஈடுபடுகிறது. காவல்துறையினரால் இந்த நிலையைச் சமாளிக்க முடியாது. அந்தளவு பறிப்போரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

செம்மை மீட்புக் குழுவிடம் போதுமான பொருட்கள் உள்ளன. ஆகவே, செம்மைக்கென பொருட்களை இப்போதைக்கு அனுப்பாதீர்கள். இருக்கும் பொருட்களை முறையாகப் பகிர்ந்து தருவதற்காகவே நமது குழுவினர் சொல்ல முடியாத வேதனைகளை அனுபவிக்கிறார்கள்.
இப்போதும் செம்மை குழுவினரிடம், ‘என்ன ஆனாலும் தேவையிலிருப்போருக்கு மட்டும் பொருட்களைத் தாருங்கள்’ என்றுதான் கூறிக்கொண்டுள்ளேன். நமது குழுவினர் இதில் உறுதியாக இருக்கிறார்கள்.

மேலும் அடுத்த கட்ட மழையின் தாக்கம் மிகுதியாக இருக்கும் என்ற அறிவிப்புகள் வருகின்றன. அந்த அடிப்படையில் பார்த்தாலும், நமது ஆற்றலை நாம் சேமிக்க வேண்டும்.

பலன் எதிர்பாராமல் உதவும் நண்பர்களே,
உங்கள் அனைவரது உணர்வுகளையும் போற்றுகிறேன். உங்கள் மீது எனக்குள்ள அக்கறையினால் கூறுகிறேன், ‘சென்னைக்குப் பொருட்கள் அனுப்புவதாக இருந்தால், மிகுந்த எச்சரிக்கையுடன் இருங்கள். செம்மை மீட்புக் குழுவிற்கென ஒரு பொருளையும் நான் அறிவிக்கும் வரை, அனுப்பாதீர்கள்’