இலங்கையில் இறந்தவர்களின் பிணத்தை வைத்து ஆதாயம் தேடும் நடவடிக்கைகளை அரசியல்வாதிகள் நிறுத்த வேண்டும் என்றும், இலங்கையில் புரையோடிப்போயிருக்கும் இனப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஒன்றைக் காண்பதில் அவர்கள் அக்கறை செலுத்த வேண்டும் என்றும் இலங்கையின் மூத்த செய்தியாளர்களும், ஆய்வாளர்களும் கருத்து வெளியிட்டுள்ளனர்.இலங்கையை பொறுத்தவரை, மே மாதம் இங்கு போர் முடிவுக்கு வந்த காலம். தமிழ் மக்களை பொறுத்தவரை மே 18 ஆம் தேதியை அவர்கள் முள்ளிவாய்க்கால் தினம் என்ற பெயரில், இறுதிப்போரில் இறந்த தமது உறவுகளை நினைவுகூர பயன்படுத்துகிறார்கள்.
போரில் இறந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் ஏனைய தமிழ் மக்கள் என அனைவரையும் நினைவுகூரும் தினமாக அது அனுசரிக்கப்படுகின்றது.
கடந்த அரசாங்கம் இந்த தினத்தை அனுசரித்த நிலையில், அன்றைய தினத்தில் நினைவு விளக்குகளை ஏற்ற அனுமதி மறுத்தது. ராணுவத்தினர் அதனை தடுத்து வந்தனர். ஆனால் புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர் அந்தத் தினத்தை மட்டுப்படுத்தப்பட்ட அளவிலாவது அனுசரிக்க அனுமதி வழங்கப்படுகின்றது.
ஆனால், அதற்குப் பிறகுதான் பிரச்சனையே ஆரம்பமாகியிருக்கின்றது. அதாவது தமிழர் பகுதிகளில் இந்த நிகழ்வுகளை யார் நடத்துவது அல்லது ஏற்பாடு செய்வது என்பது ஒரு சர்ச்சையாகவே மாறிவிட்டது.
இப்படியான நினைவு நிகழ்வுகளில் தமிழ் அரசியல்வாதிகள் கலந்துகொண்டு பேசமுற்பட்டபோது, அதனை மக்கள் தடுத்த நிகழ்வுகள் எல்லாம் கடந்த காலங்களில் நடந்தேறியிருக்கின்றன.
இதனைப் பயன்படுத்தி தமிழ் தேசியம் பேசும் அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும் ஆதாயம் தேட முனைவதாக மக்கள் குற்றஞ்சாட்டுகின்றார்கள்.
இலங்கை: மே 18-ஐ துக்க தினமாக கடைபிடிக்க வட மாகாண சபை தீர்மானம்
இந்தத் தடவை முள்ளிவாய்க்கால் நிகழ்வை தாமே நடத்துவோம் என்றும், வடமாகாண சபைக்கே அதற்கான அதிகாரம் இருக்கிறது என்றும் வடமாகண முதல்வர் விக்கினேஸ்வரன் அறிவித்திருந்தார்.
அரசியல்வாதிகள் தலையிடக் கூடாது
ஆனால், அவருடன் முரண்பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்கள், தாம் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுடன் சேர்ந்து அதனை அனுசரிக்கப்போவதாகவும், இதில் அரசியல்வாதிகள் தலையிடக் கூடாது என்றும் கூறியிருந்தார்கள்.
அரசியல்வாதிகள் இதனைப் பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேடுவதாக அவர்கள் குற்றஞ்சாட்டினார்கள்.
அண்மையில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்திய விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் அந்த அமைப்பில் இருந்து உயிரிழந்த உறுப்பினர்களின்(மாவீரர்) தந்தைமார், ‘அரசியல்வாதிகள் இந்த நிகழ்வில் தலையிட்டு இதனை சர்ச்சையாக்கக் கூடாது’ என்று கூறியுள்ளனர்.
பசீர் காக்கா, திருகோணமலை ரூபன் மற்றும் மட்டக்களப்பு யோகன் பாதர் ஆகியோர் இந்தக் கருத்தை கூறியுள்ளனர்.
“இது இறந்தவர்களுக்கான அஞ்சலி நிகழ்வு. இதனை அவர்களது உறவினர்களே நடத்தட்டும், அரசியல்வாதிகள் இதில் தலையிட்டு சர்ச்சையாக்க வேண்டாம்” என்று அவர்கள் கேட்டிருந்தனர்.
அநாகரீகமான அரசியல் கலாசாரத்துக்கு முடிவு கட்டவேண்டும்
கடந்த ஆட்சிக்காலத்தில் இல்லாவிட்டாலும், தற்போதைய ஆட்சியிலாவது ஏற்பட்டிருக்கும் ஒரு ஜனநாயக இடைவெளியை பயன்படுத்தி, பொதுமக்கள் போரில் இறந்த தமது உறவுகளை நினைவுகூர்வதற்கான கண்ணியமான வாய்ப்பை அரசியல்வாதிகள் தட்டிப்பறிக்ககூடாது என்கிறார் மூத்த செய்தியாளரும், எழுத்தாளருமான வீ. தனபாலசிங்கம்.
“தமிழ் தேசியம்” என்னும் அடையாளத்தை தம்வசம் வைத்திருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும், அவர்களுக்கு போட்டியான ஏனைய அமைப்புக்களும் குறைந்தபட்சம் மக்கள் ஐக்கியத்துடன் கண்ணியமாக தமது உறவுகளை நினைவுகூரவாவது அனுமதிக்க வேண்டும் என்கிறார்.
“மக்களை இறக்கவிட்டு அரசியல் செய்தது போக, இனிமேல் இறந்தவர்களின் ஆவிகளை வைத்து அரசியல் செய்வதை அரசியல்வாதிகள் நிறுத்த வேண்டும்” என்றும் அவர் கூறுகிறார்.
இந்த அநாகரீகமான அரசியல் கலாசாரத்துக்கு முடிவு கட்டவேண்டும் என்கிறார் அவர்.
“அரசியல்வாதிகளே நீங்கள் இதில் தலையிடாதீர்கள், முடிந்தால் நியாயமான ஒரு நிரந்தர அரசியல் தீர்வைப் பெற்றுத்தர உதவுங்கள்” என்று அவர் கண்டிப்பாக கூறுகிறார்.
இறுதிநேரப் போரின்போது வன்னியில் இருந்தவர் சிவராசா கருணாகரன். விடுதலைப்புலிகள் அமைப்பின் கடந்த மாவீரர் தின நிகழ்விலும், இதேபோன்ற பிரச்சினை எழுந்ததை சுட்டிக்காட்டும் கருணாகரன், அது மீண்டும் இந்தத் தடவை அரங்கேறியிருப்பதை குறிப்பிடுகிறார். எல்லாத் தமிழ் கட்சிகளும் இந்த விஷயத்தில் ஏதோ ஒரு வகையில் போட்டி போடுவதாக குற்றஞ்சாட்டும் அவர், இறந்தவர்களை முன்வைத்து அரசியல் செய்யும் இந்தக் கலாசாரம் மிகவும் மோசமான ஒரு முன்மாதிரி என்கிறார்.
போரை வைத்து அரசியல் செய்தவர்கள் இப்போது போரில் இறந்தவர்களை வைத்து அரசியல் லாபம் தேடுகிறார்கள் என்று கூறும் அவர், அவரவர் தமது உறவுகளுக்கு நிம்மதியாக அஞ்சலி செலுத்த அரசியல்வாதிகள் அனுமதிக்க வேண்டும் என்கிறார்.
நவமணி பத்திரிகையின் ஆசிரியரான என். எம் அமீன் ஒரு மூத்த செய்தியாளர். முஸ்லிம் கவுன்ஸிலின் தலைவரும் கூட. இறந்தவர்களுக்கு அவர்களது குடும்பத்தினர் அஞ்சலி செலுத்துவது யதார்த்தமே என்று கூறும் அவர், அரசியல்வாதிகள் இதில் தலையிடக் கூடாது என்கிறார்.
இதில் அரசியல் நுழைந்து தீவிரமாக பேசப்படும்போது, அதுபற்றிய தவறான சமிக்ஞைகளே சிங்கள பெரும்பான்மை மக்களிடம் போய்ச் சேரும் என்று அவர் கூறுகிறார்.
மிதவாத அரசியல் கருத்துக்களை வளர்த்து, அதன் மூலம் ஒரு நல்ல செய்தியை சிங்கள மக்கள் மத்தியில் கொண்டு சென்று, தமிழ் மக்களுக்கு நல்ல நிரந்தர தீர்வை அடைய வேண்டிய முயற்சிகளுக்கான தருணத்தில், சிங்கள கடும்போக்கு அரசியல்வாதிகளும், இனவாதம் கக்கும் ஊடகங்களும் தவறான தகவல்களை அவர்களிடம் கொண்டு செல்ல அரசியல்வாதிகளின் இந்த சர்ச்சையாக்கும் நடவடிக்கை வழி செய்துவிடும் என்று அவர் அச்சம் தெரிவித்தார்.
தமிழ் அரசியல்வாதிகளின் இந்த நடவடிக்கைகளுக்கு சில தமிழ் செய்தி ஊடகங்களும் பொறுப்பற்ற வகையில் செயல்பட்டு தீனி போடுவதாகவும் இந்த மூன்று மூத்த செய்தியாளர்களும் கவலை தெரிவிக்கின்றனர். உண்மையில் ஊடகங்கள் இந்த விஷயத்தில் மிகுந்த பொறுப்புணர்வுடன் நடந்து உணர்ச்சியை தூண்டும் வகையில் செயல்படுவதை தவிர்க்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
அதுமட்டுமின்றி, அரசியல் கட்சிகள் போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புனர்வாழ்வை ஏற்படுத்தி தருவதில், நிரந்தர தீர்வை ஏற்படுத்தித் தருவதில் அதிகம் அக்கறை காட்ட வேண்டும் என்றும் இந்த மூவரும் வலியுறுத்துகிறார்கள்.
ஜனாதிபதி மைத்திரி கவலை
இதற்கிடையிலே, போரில் இறந்தவர்களை வைத்து பெரும்பான்மையின அரசியல் கட்சிகள் சில, அரசியல் செய்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
குருநாகல் மாவட்டத்தில் ஒரு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், சில அரசியல் கட்சிகள் போரில் சாதித்த கதாநாயகர்களை (இலங்கை இராணுவத்தினர்) வைத்து அரசியல் ஆதாயம் தேட முனைவதாக குற்றஞ்சாட்டினார்.
அண்மையில் சில ராணுவத்தினர் சட்ட மீறல்களுக்காக கைது செய்யப்பட்டனர். அதற்கு உடனடியாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கட்சியினரிடம் இருந்து கண்டனங்கள் எழுந்திருந்தன. முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டாபாய ராஜபக்ஷவும் அதனை கண்டித்திருந்தார்.
இந்த நிலையிலேயே ஜனாதிபதியிடம் இருந்து இந்தக் கருத்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.