ராகுலுக்கு கைகொடுத்த சமூக நீதியும், கைகொடுக்காத‌ சாஃப்ட் இந்துத்துவாவும்!

(இரா.வினோத்)

காங்கிரஸ் தேசிய‌த் தலைவர் ராகுல் காந்தி கர்நாடக தேர்தலில் சமூக நீதி, சாஃப்ட் இந்துத்துவா இரண்டையும் கூட்டி ‘வெற்றி’க் கணக்கு போட்டார். குஜராத் தேர்தலின்போது பின்பற்றிய அதே ‘ஆலய தரிசனம்’ பாணியை கொஞ்சம் மாற்றி, கர்நாடகாவில் இந்து கோயில்கள் மட்டுமல்லாமல் மற்ற மத வழிபாட்டுத் தளங்களும் படையெடுத்தார். கர்நாடக அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் லிங்காயத்து, ஒல்லிகர், பிராமணர் உள்ளிட்ட சாதிகளின் மடங்களுக்கும் சென்று ஆசிபெற்றார். ஆனால் ராகுல் போட்ட கணக்கு தேர்தலில் பலிக்காமல் போய்விட்டது.

கர்நாடக தேர்தலைப் பொறுத்தவரை ராகுல் காந்தி சித்தராமையாவை மலையாக நம்பினார். சித்தராமையாவின் கடந்த 5 ஆண்டுகால ஆட்சியும், செயல்படுத்திய நலத்திட்டங்களும் மீண்டும் ஆட்சியைக் கொடுத்துவிடும் என நினைத்தார். இதனாலே கடந்த நவம்பரில் பாஜக தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கிய போது, ராகுல் கண்டுகொள்ளாமல் இருந்தார். பாஜகவின் பிரச்சாரம் சூடுபிடித்த போது சுதாரித்த காங்கிரஸ், நவம்பர் 27-ம் தேதி, ‘வீடுதோறும் பிரச்சாரம்’ மூலம் வியூகத்தை அமைத்தது.

பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா டிசம்பரில் பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரை அழைத்துவந்து அக்கட்சியின் ‘மாற்றத்துக்கான யாத்திரையில்’ முத்திரை பதித்தார். பாஜகவின் தேர்தல் பணி அனல் பறப்பதைக் கண்ட காங்கிரஸ் மாநிலத் தலைவர் பரமேஷ்வரும், முதல்வர் சித்தராமையாவும் விழித்துக் கொண்டனர். மாவட்டந்தோறும் காங்கிரஸ் பேரணியை ஒருங்கிணைத்து, சாதனை விளக்கக் கூட்டத்தை நடத்தினர். பாஜகவின் மாற்றத்துக்கான யாத்திரை முடிந்த நிலையிலே, ராகுல் காந்தி கர்நாடகாவில் பிரச்சாரத்தைத் தொடங்கினார்.

கூட்டம் வாக்காக மாறியதா?

‘மக்கள் ஆசி பயணம்’ என்ற பெயரில் ராகுல் 6 கட்டங்களாக 30 மாவட்டங்களில் வலம் வந்தார். பெங்களூரு, ஹூப்ளி, மங்களூரு, பெல்லாரி, மைசூரு என 10க்கும் மேற்பட்ட பிரமாண்டப் பேரணிகளில் பேசினார். ராகுலின் கூட்டங்களில் மக்கள் வெள்ளம் கரை புரண்டோடியது. மோடியின் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள், பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி வரி விதிப்பு, கறுப்புப் பணம் ஒழிப்பு, எடியூரப்பாவின் ஊழல் உள்ளிட்ட விவகாரங்களை கடுமையாக விமர்சித்தார்.

கடந்த நான்காண்டுகளில் நிகழ்ந்த வகுப்புவாதக் கலவரங்கள், பாஜகவின் இந்துத்துவ நிலை, ஆர்எஸ்எஸ் செயல்பாடு, இந்துத்துவ அமைப்புகளின் தலையெடுப்பு ஆகியவற்றை ராகுல் விளாசினார். இடையிடையே பசவண்ணரின் வசனங்களைப் பேசி, சமத்துவம் மலர்ந்த இந்தப் பூமியில் இந்துத்துவம் மலரலாமா? என கேள்வி எழுப்பினார். ஆனால் அதற்கு முன்பும், பின்பும் அங்குள்ள பெரிய மடங்கள், கோயில்கள் ஆகியவற்றுக்கு சென்று சிறப்பு பூஜை செய்தார். , மடாதிபதிகள், கோயில் நிர்வாகிகள் உள்ளிட்டோரை சந்தித்து, ‘தானும் இந்து தான்’ எனக் காட்டிக் கொண்டார்.

மக்கள் ஆசி பயணத்தின் மூலம் 3500 கி.மீ. தூரம் பயணித்த ராகுல் வழக்கம் போல, ரோட்டோரக் கடையில் பஜ்ஜி, மசாலா தோசை சாப்பிட்டு டீ குடித்து ஏழைகளுக்குத் தூண்டில் போட்டார். சென்ற இடமெல்லாம் திரண்ட மக்கள் கூட்டம் ஓட்டாக மாறும் என ராகுல் நினைத்தார். ஆனால் அது நடக்காமல் போனது ஆச்சரியம் தான்.

கைகொடுத்த சமூக நீதி

ஏப்ரல் கடைசி வாரத்தில் மீண்டும் இறுதிக்கட்டப் பிரச்சாரத்தை தொடங்கிய ராகுல் லிங்காயத்து விவகாரத்தை முழுமையாகக் கையிலெடுத்தார். லிங்காயத்து வாக்குகளைக் கவர மேடைதோறும் பசவண்ணரின் தத்துவத்தைத் தட்டுத்தடுமாறிப் பேசினார். ‘சொல்வதைச் செய். செய்வதைப் போல நடந்துகொள்’ என பசவண்ணரின் வசனத்தை மோடிக்கு அறிவுரையாக‌ வழங்கினார். இதனால் கோபமடைந்த மோடி முதல் கூட்டத்திலே, பசவண்ணரின் தத்துவங்களை முதலில் சரியாக உச்சரிக்குமாறு ராகுலுக்குப் பதில் கொடுத்தார்.

முதலில் பிரம்மாண்ட கூட்டங்களை நம்பிய ராகுல் காந்தி கடைசிக் கட்டத்தில் 2-ம்கட்ட நகரங்கள், சிறு நகரங்கள், கிராமங்கள் என தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். மக்களை கூட்டத்துக்கு அழைத்து வராமல் அவர்களது இடத்தை தேடிப்போய் வாக்கு சேகரித்தார். ராகுலின் இந்த அணுகுமுறைக்கு மக்களிடம் கிடைத்த அணுகுமுறையே காங்கிரஸூக்கு வாக்குகளாக மாறின. இதற்கிடையில் துப்புரவுத் தொழிலாளர்கள், விவசாயிகள், கார்மெண்ட்ஸ் ஊழியர்கள், மென்பொருள் பொறியாளார்கள் என பலதரப்பினரிடமும் கலந்துரையாடலில் ஈடுபட்டார். பாஜகவை வீழ்த்த சமூக நீதி ஆயுதத்தைக் கையில் ஏந்தினார்.

பாஜக ஆட்சியில் தலித்துகள் மீதான தாக்குதல், சிறுபான்மையினர் மீதான அடக்குமுறை, நாட்டில் அதிகரிக்கும் கலவரம், பெண்கள் மீதான வன்முறை ஆகியவற்றை மோடிக்கு எதிராகத் திருப்பினார். ‘காங்கிரஸ்தான் தலித்துகளின் நண்பன்’ என ராகுல் பேசிய போது, அது செயலில் இல்லையே என தலித்துகள் நினைக்கத் தொடங்கினர். அந்த நேரத்தில் மோடி, ‘மல்லிகார்ஜூன கார்கே தலித் என்பதால் காங்கிரஸ் அவருக்கு முதல்வர் பதவி தரவில்லை’ என கூறியதற்கு ராகுலால் பதில் சொல்ல முடியவில்லை. இருப்பினும் அவரது சமூக நீதி கருத்துகளுக்காகவே தலித்துகள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில் 20 இடங்களில் கை ஓங்கி இருக்கிறது.

ஆலயங்களை வலம் வந்த ராகுல் சிறுபான்மையினரின் வாக்குகளைக் குறிவைத்து மசூதி, கிறிஸ்துவ ஆலயம் ஆகியவற்றுக்குச் சென்று வழிபட்டார். தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி நாளில் மட்டும் பெங்களூருவில் 5 வழிபாட்டுத் தளங்களுக்குச் சென்று வந்தார். அவ்வப்போது சாலையோர ஏழைகளோடும், பாட்டிகளோடும், குழந்தைகளோடும் புகைப்படம் எடுத்துக்கொண்டார். பிரச்சாரத்தின் நடுவே திடீரென பாத‌ யாத்திரை, மாட்டுவண்டி பயணம், சைக்கிள் பேரணி என ராகுல் காட்டிய‌ வித்தியாசங்களுக்கு வரவேற்பு கிடைத்தது.

எடுபடாத ஊழல் எதிர்ப்பு

ராகுல் காந்தி ‘ஊழல் எதிர்ப்பு’ நிலையை முக்கிய அஸ்திரமாகக் கையிலெடுத்தார். ஊழல் வழக்கில் எடியூரப்பா சிறைக்குப் போனது, ரெட்டி சகோதரர்களின் ரூ.35 ஆயிரம் கோடிக்கும் அதிகமான சுரங்கக் கொள்ளை, அமித் ஷா மகனின் சொத்து மதிப்பு திடீரென‌ உயர்ந்தது, வங்கிக் கொள்ளை ஆகியவற்றை மேடைதோறும் பேசினார். ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களிலும் மோடி, அமித் ஷா, எடியூரப்பா, ரெட்டி சகோதரர்கள் ஆகியோருக்கு எதிராக வேகமாகச் செயலாற்றினார். ஆனால் வாக்காளர்கள் காங்கிரஸில் ஊழல் புகாருக்கு ஆளானவர்களுக்கு தேர்தலில் வாய்ப்பு கொடுத்திருப்பதையும், ராகுலின் ஊழல் எதிர்ப்பையும் முரணாகப் பார்த்தனர். அதனாலேயே எடியூரப்பாவையும், ரெட்டி சகோதரர்களையும் வெற்றிபெற வைத்து, ‘ஊழல் எதிர்ப்பு’ நிலையை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர்.

சித்தராமையாவின் தவறுகள்

காங்கிரஸ் தற்போது ஆளும் மாநிலங்களில் பெரிய மாநிலமான கர்நாடகாவை தக்கவைக்க வேண்டும் என்பதில் ராகுல் உறுதியாக இருந்தார். இதனால் 20-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்த பாஜகவைத் தடுக்க பல்வேறு வியூகங்களை வகுத்தார். ஆனால் சொந்தக்கட்சியில் இருந்த தலைவர்களின் குறைபாடுகளை கண்டுகொள்ளாமல் போனார். குறிப்பாக சித்தராமையாவின் எதேச்சதிகாரம், இரு தொகுதிகளில் போட்டியிட்டது, மகனுக்கு சீட் கொடுத்தது, மல்லிகார்ஜூன‌ கார்கே, வீரப்ப மொய்லி உள்ளிட்ட மூத்த தலைவர்களை ஓரங்கட்டியது, ஆதரவாளர்களுக்கு அளவுக்கு மீறி சலுகை காட்டியது, பாரம்பரிய காங்கிரஸார் மீது அதிருப்தி காட்டியது என எல்லாம் ராகுலின் கனவை பொய்யாக்கின.

மேடைகளில் இந்துத்துவத்தை விமர்சித்துவிட்டு, கோயில் கோயிலாகச் சென்றதை மக்கள் நம்பவில்லை. லிங்காயத்து விவகாரத்தில் சித்தராமையாவின் செயலை அங்கீகரித்ததால், லிங்காயத்துகளின் கோபத்துக்கு ராகுல் பலியானார். ஒக்கலிகா தலைவர்களான எஸ்.எம்.கிருஷ்ணா, அம்பரீஷ் ஆகியோரை காங்கிரஸில் தக்க வைத்துக்கொள்ளாததால் மைசூர், மண்டியா, ராம்நகர் உள்ளிட்ட மாவட்டங்களில் காங்கிரஸ் பெரும் பின்னடைவைச் சந்தித்திருக்கிறது. சீனிவாச பிரசாத் போன்ற மூத்த தலித் தலைவர்களைப் பாதுகாக்காததாலும், பரமேஷ்வர் போன்ற தலித் தலைவருக்கு முதல்வர் பதவி தராததாலும் தலித்துகளின் அதிருப்திக்கும் ராகுல் ஆளானார்.

இத்தகைய ஒட்டுமொத்த கூட்டு விளைவின் காரணமாகவே, கர்நாடகாவில் ராகுல் காந்தியின் கணக்கு பலிக்காமல் போய் இருக்கிறது. கடந்த தேர்தலில் 122 இடங்களைப் பிடித்த காங்கிரஸ் இந்த முறை 78 இடங்களை மட்டுமே பெற்றிருக்கிறது. காங்கிரஸின் வாக்கு சதவீதம் கடந்த தேர்தலைக் காட்டிலும் அதிகரித்திருந்தாலும், குறைவான இடங்களைப் பிடித்ததால் வெற்றி பறிபோய் இருக்கிறது.