பாஜகவின் பணிவான ஊழியர் கர்நாடக ஆளுநர் வாஜுபாய் வாலா. மோடிக்கு விசுவாசமாகச் செயல்படுவதால்தான், பாஜகவைப் பதவி ஏற்க அழைத்துள்ளார். அறமற்ற வழியில் அதிகாரத்தைப் பறிப்பதுதான் பாஜகவின் புதிய கொள்கையா என்று சிவசேனா கட்சி கேள்விகளால் விளாசியுள்ளது.
கர்நாடகத்தில் நடந்த தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 104 இடங்களில் வென்ற பாஜக ஆளுநர் அழைப்பின் பெயரில் ஆட்சி அமைத்து புதிய முதல்வராக எடியூரப்பா பதவி ஏற்றுள்ளார். அதேசமயம், கூட்டணி அமைத்து பெரும்பான்மை பலத்துடன் இருக்கும் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியை ஆளுநர் அழைக்கவில்லை. இது தொடர்பாக காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடர்பட்ட வழக்கில், நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த எடியூரப்பா அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் பாஜகவின் செயல்பாடுகள் குறித்து கடுமையாக விமர்சித்து சிவசேனா கட்சி தனது அதிகாரப்பூர்வ பத்திரிகையான ‘சாம்னா’வில் தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:
பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா வாய் தவறி பிஎஸ். எடியூரப்பாவை மிகப்பெரிய ஊழல்வாதி எனத் அழைத்தார். இதனால், பாஜக எடியூரப்பாவை மீண்டும் ஒருமுறை முதல்வராக மிகப்பெரிய அவமானத்தைச் சந்தித்தது.
கர்நாடகத்தில் எடியூரப்பா முதல்வராகப் பதவி ஏற்க அழைத்ததன் பேரில் அரசு அமைத்துள்ளார். இதில் வியப்படைவதற்கு ஒன்றுமில்லை.
ஏனென்றால் இந்தப் பதவி ஏற்பு சட்டப்படியும் நடக்கவில்லை, அரசியலமைப்புச் சட்டத்தின்படியும் நடக்கவில்லை. அரசியல் விதிகளின்படி நடந்துள்ளது.
கர்நாடக ஆளுநர் வாஜுபாய் வாலா பாஜகவின் பணிவான ஊழியர். குஜராத் அரசில் அமைச்சராக 14 ஆண்டுகள் செயல்பட்டவர். மோடியால்தான் அவர் கர்நாடகாவில் ஆளுநராக நியமிக்கப்பட்டார். அதனால்தான் பாஜகவை ஆட்சி அமைக்க வாஜுபாய் அழைத்தார்.
ஒருவேளை காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம் கூட்டணியை பதவிஏற்க அழைத்து இருந்தால்தான் நாம் வியப்படைந்திருக்க வேண்டும்.
சட்டத்தைப் பின்பற்றுவதற்காக யாரும் நீதித்துறையில் இருந்து ஆளுநராக வரவில்லை. காங்கிரஸ் ஜேடிஎஸ் கூட்டணி தங்களுக்கு 116 எம்எல்ஏக்கள் ஆதரவு இருக்கிறது என்று கூறி கையொப்பம்இட்டு கடிதம் அளித்தார்கள். ஆனால், 104 எம்எல்ஏக்கள் கொண்ட பாஜகவுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஆளுநர் பாஜக சிந்தனைகளும், சித்தாந்தங்களும் கொண்டவர் நல்லவர் என்பதால், அவர் செய்த செயலை நாம் ஏற்க வேண்டும். ஏனென்றால், அவர் எதையும் தவறவாகச் செய்யவில்லை, சட்டப்படிதான் செய்துள்ளார்.
பாஜக ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு விதமான கொள்கைகளை பின்பற்றுகிறது. கோவா, மணிப்பூர், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ஆட்சி அமைக்க ஒவ்வொரு விதமான சட்டங்கள், விதிகளை பாஜக பின்பற்றுகிறது. சட்டங்களும், விதிகளும் மற்றவர்கள் பின்பற்றத்தான் வகுக்கப்பட்டுள்ளது. அறத்துக்கு மாறான வழியில் செயல்பட்டு, அதிகாரத்தைப் பறிப்பதுதான் பாஜகவின் புதிய கொள்கையா.
கர்நாடகத்தில் காங்கிரஸை நீக்கிவிட்டு, பாஜக ஆட்சியில் இருக்கிறது. சித்தராமையாவுக்கு பதிலாக, ஊழல்கறை படித்த எடியூரப்பா அந்த இடத்தை நிரப்பிவிட்டார்.
வெளிநாடுகளில் இருந்து கறுப்புப்பணத்தை கொண்டுவருவேன் என்று மோடி உறுதியளித்துள்ளார். ஆனால், உண்மையில், கறுப்புப்பணம் கர்நாடகாவில்தான் அரசியல் காரணங்களுக்காகப் புழங்குகிறது,
காங்கிரஸை ஆட்சியில் இருந்து நீக்கிவிட்டு அந்த பாஜக அந்த இடத்துக்கு வருவதால் என்ன பயன் ஏற்படப்போகிறது. பிரதமர், முதல்வர், ஆளுநர் அனைவரும் செயல்படும் விதம் காங்கிரஸின் கலாச்சாரத்தின்படியேதான் இருக்கிறது. மக்களின் இன்னல்கள் மட்டும் குறையவில்லை.
இவ்வாறு சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது.