(Shanmugan Murugavel)
ரஷ்யாவில் இவ்வாண்டு ஜூன் மாதம் 14ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள கால்பந்தாட்ட உலகக் கிண்ணத் தொடருக்கான அணிகளை அறிவிப்பதற்கு முன்னராக இறுதிச் சுற்று சிநேகபூர்வ கால்பந்தாட்ட போட்டிகள் இவ்வாரம் முடிவடைந்திருந்தன. இந்நிலையில், ஏறத்தாழ உலகக் கிண்ணத்தில் தாம் களமிறக்கப் போகும் அணிகளையே இவ்வார, கடந்த வார போட்டிகளில் அணிகள் களமிறக்கியிருந்தன.
அந்தவகையில், யார் யார் உலகக் கிண்ண அணிகளில் தமது இடங்களை உறுதி செய்துள்ளார்கள், யார் யாரின் இடங்கள் சந்தேகத்துக்குரியதாக இருக்கின்றன என்பதை இப்பத்தி ஆராய்கின்றது.
தற்போதைய நிலையில், எந்த அணியினதும் விளையாடும் பதினொருவரில் இடம்பெறக்கூடிய பிரேஸிலின் நட்சத்திர முன்கள வீரர் நேமர், உலகக் கிண்ணத்தில் விளையாடுவது சந்தேகத்துக்குரியதாகவே காணப்படுகின்றது.
இம்மாத ஆரம்பத்தில் சத்திர சிகிச்சையை மேற்கொண்ட உலகக் கிண்ணத்துக்கு தயாராகி விடுவார் எனக் கூறப்படுகின்றபோதும் நேமர் களத்துக்குத் திரும்பிய பின்னரே உலகக் கிண்ணத்தில் அவரது பங்களிப்பை உறுதிப்படுத்தக் கூடியதாகவிருக்கும்.
எவ்வாறெனினும், கடந்த காலங்களைப் போலல்லாது நேமரிடம் தனித்து தங்கியிருக்காத பிரேஸில் அணியில், உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியின் இறுதிப் பகுதியில் பிரகாசித்த கப்ரியல் ஜெஸூஸ், பிலிப் கோச்சினியோ, றொபேர்ட்டோ பெர்மினோ, டனி அல்விஸ், தியாகோ சில்வா, மார்ஷெல்லோ, கஸேமீரோ, வில்லியன், பெர்ணான்டின்ஹோ, எடெர்ஸன், போலின்ஹோ உள்ளிட்ட வீரர்கள் தமது இடங்களை உறுதிப்படுத்தியிருக்கின்றனர்.
இவ்வாறாக முக்கியமான வீரர்கள் தமது இடங்களை உறுதிப்படுத்தியிருக்கின்ற நிலையில், காயமடைந்துள்ள இடது பின்கள வீரரான பிலிப் லூயிஸ் அணியில் இடம்பெறமாட்டார் எனத் தெரிகின்றது.
இதேவேளை நடப்பு சம்பியன்களான ஜேர்மனியில் டொனி க்றூஸ், மற்ஸ் ஹம்மெல்ஸ், மார்க் அன்ட்றே டியர் ஸ்டீகன், ஜெரோம் போட்டாங், ஜோஷுவா கிம்மிச், சமி கெதீரா, மெசுட் ஏஸில், இல்கு குன்டோகன், எம்ரே கான், தோமஸ் முல்லர், லெரோய் சனே, மார்கோ றெயுஸ், ஜூலியாட் ட்ரெக்ஸ்லர், டிமோ வேர்னர் ஆகியோர் தமது இடங்களை உறுதிப்படுத்தியிருக்கிறதோடு சிரேஷ்ட முன்கள வீரரான மரியோ கோமிஸும் அணியில் எதிர்பார்க்கப்படுகிறது.
ஜேர்மனிக்குரிய முக்கிய பிரச்சினையாக அவ்வணியின் தலைவரான கோல் காப்பாளர் மனுவல் நோயர் காணப்படுகின்றார். கடந்தாண்டு செப்டெம்பருக்குப் பின்னர் போட்டியெதிலையும் விளையாடியிருக்காத மனுவல் நோயர், ஜேர்மனியின் முதலாவது போட்டியில் விளையாடக் கூடிய உடற்றகுதியை அடைவாரெனின் மாத்திரமே அணியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்பெய்னில், அன்றே இனியஸ்டா, சேர்ஜியோ றாமோஸ், டேவிட் டி கியா, பிகே, ஜோர்டி அல்பா, சேர்ஜியோ புஷ்கட்ஸ், டேவிட் சில்வா, இஸ்கோ, டியகோ கொஸ்டா ஆகியோர் தமது இடங்களை உறுதிப்படுத்தியுள்ள நிலையில், முன்கள வீரர் அல்வரோ மொராட்டா, தனது கழகமான செல்சிக்காக எதிர்வரும் போட்டிகளில் பிரகாசித்தாலே அணியில் இடம்பெறுவார் எனக் கூறப்படுகிறது.
பெல்ஜியத்தில், கெவின் டி ப்ரூனே, ஈடின் ஹஸார்ட், றொமேலு லுக்காக்கு, ட்ரைஸ் மேர்ட்டன்ஸ், ஜான் வெர்டொங்கன், டொபி அல்டர்வெய்ல்ட், வின்செட் கொம்பனி, மிச்சி பச்சுவார் ஆகியோர் தமது இடங்களை உறுதிப்பத்திய நிலையில், கிறிஸ்டியான் பென்டெகே அணியில் இடம்பெறுவாரா என்பது சந்தேகத்துக்கிடமானதாகவேயுள்ளது.
போர்த்துக்கல்லில், கிறிஸ்டியானோ ரொனால்டோ, பெப்பே, றிக்கார்டோ குவார்ஸ்மா, பெர்னார்டோ சில்வா உள்ளிட்டோர் தமது இடங்களை உறுதிப்படுத்தியுள்ள நிலையில், அண்மைய காலத்தில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திவரும் இளம் முன்கள வீரரான றெனோட்டோ சஞ்சேஸ் அணியில் இடம்பெறமாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரான்ஸில், ஹியூகோ லோரிஸ், ரபேல் வரானே, சாமுவேல் உம்டிட்டி, போல் பொக்பா, என்கலோ கன்டே, பிளெய்ஸி மத்தியூடி, அட்ரியன் றபியோட், அன்டோனி கிறீஸ்மன், கிலியான் மப்பே, ஒலிவர், லோரன்ட் கொஷியென்ஸி உள்ளிட்ட வீரர்கள் தமது இடங்களை உறுதிப்படுத்தியுள்ளனர்.
மறுபக்கம், அன்டோனி மார்ஷியல், பெஞ்சமின் மென்டி, அலெக்ஸான்ட்ரே லகஸ்ரே, உஸ்மான் டெம்பிலி, கிங்ஸ்லி கோமன், நபில் பெகிர், பக்காயோ உள்ளிட்ட வீரர்கள் தங்களது கழகங்களுக்காக அண்மைய காலங்களில் சிறப்பாக விளையாடியுள்ளபோதும் ஏற்கெனவே தமது இடங்களை உறுதிப்படுத்திய வீரர்களுடனும் இதிலுள்ள சக வீரர்களுடனும் ஏறத்தாழ ஒரே மாதிரியான விளையாடும் பாணியைக் கொண்டிருக்கின்ற நிலையில் இவர்களின் இடங்கள் சந்தேகத்துக்குரியவையாகவே காணப்படுகின்றன.
இங்கிலாந்து அணியில், ஹரி கேன், ரஹீம் ஸ்டேர்லிங், மார்க்கஸ் றஷ்போர்ட், எரிக் டயர், டெலே அல்லி, கைல் வோக்கர், ஜக் புட்லன்ட், ஜேமி வார்டி, ஜெஸி லிங்கார்ட் ஆகியோர் தத்தமது இடங்களை உறுதிப்படுத்தியுள்ள நிலையில், ஜக் வில்ஷையர், அடம் லலானா, டனி றோஸ், கரி காகில், ஜோன் ஸ்டோன்ஸ், அலெக்ஸ் ஒக்ஸ்லேட் சம்பர்லின், றொஸ் பார்க்லி ஆகியோர் எஞ்சியுள்ள இங்கிலாந்து பிறீமியர் லீக் பருவகாலத்தில் எவ்வாறு செயற்படுகின்றனர் என்பதைப் பொறுத்தே அணியில் இவர்களின் இடங்கள் தீர்மானிக்கப்படவுள்ளன. ஜொஸே மொரின்யோவுடனான முரண்பாட்டால் மன்செஸ்டர் யுனைட்டெட் அணியில் தொடர்ச்சியாக இடம்பெறாமலிருக்கும் லுக் ஷா அணியில் இடம்பெறுவது சந்தேகத்துக்கிடமானதாகவேயிருக்கின்றது.
ஆர்ஜென்டீனாவில், லியனல் மெஸ்ஸி, கொன்ஸலோ ஹியூகைன், சேர்ஜியோ அகுரோ, ஸ்கேவியர் மஷரானோ, சேர்ஜியோ றொமேரோ, போலோ டிபாலா, நிக்கொலஸ் ஒட்டமென்டி, எவர் பனீகா ஆகியோரின் இடங்கள் அணியில் தவிர்க்கமுடியாததாக காணப்படுகின்றன.
இவ்வாறாக முன்னணி அணிகளின் உலகக் கிண்ணத்துக்கான தெரிவுகள் காணப்படுகின்ற நிலையில், இம்மாதம் முதல் மே மாதத்துக்கிடையில் அணிகள் அறிவிக்கப்படவுள்ளன