சீரற்ற வானிலையால், இதுவரையிலும் 9,817 குடும்பங்களைச் சேர்ந்த 38,048 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறான அனர்த்தங்களினால் இதுவரையிலும் 8 பேர் மரணமடைந்துள்ளனர். இதேவேளை 7 பேர் காயமடைந்துள்ளனர். 19 வீடுகள் முழுமையாகவும், பகுதியளவில் 918 வீடுகளும் சேதமடைந்துள்ளனவென தெரிவித்துள்ள அந்த நிலையம்,1,625 குடும்பங்களைச் சேர்ந்த 6,090 பேர், 80 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.
சீரற்ற வானிலையின் காரணமாக புத்தளம் மாவட்டத்தில் பாரியளவு வௌ்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. லுணு ஓயா பெருக்கெடுத்துள்ளதன் காரணமாக சிலாபம் – தங்கொட்டுவ வீதி மற்றும் களனி கங்கை பெருக்கெடுத்துள்ளதன் காரணமாக, மல்வானை ஆகிய பிரதேசங்கள் வௌ்ளத்தால் நிரம்பியுள்ளன.
கினிகத்தேன நாவலப்பிட்டி பிரதான வீதியின் கினிகத்தேன பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக உள்ள பகுதியில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதால், 52 வர்த்தக நிலையங்களை குறித்த இடத்திலிருந்து அப்புறப்படுத்துமாறு கினிகத்தேன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மகாவலி ஆற்றின் பிரதான கிளை ஆறான ஹட்டன் ஓயா ஆற்றுக்கு மேலாக அமைந்துள்ள குறித்த 52 வர்த்தக நிலையங்கள் அமைந்துள்ள இடமானது தேசிய கட்டட ஆய்வு மையத்தால் மண்சரிவு ஏற்படுமென அடையாளங் காணப்பட்ட பகுதி என்பதுடன், கடந்த 2004ஆம் ஆண்டிலிருந்தே குறித்த வர்த்தக நிலையங்களை அகற்றுமாறு வர்த்தகர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.