காங்கிரஸ் அல்லாத பாஜக எதிர்ப்பு கூட்டணியை உருவாக்குவது என்பது சாத்தியமில்லை என மதச் சார்பற்ற ஜனதாதளத்தின் தலைவர் தேவே கவுடா தெரிவித்திருக்கிறார். 2019 மக்களவைத் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்ற முனைப்பில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் இருக்கும் சூழலில் தேவே கவுடாவின் இந்த கருத்து அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
தி இந்து ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியிலிருந்து..
பாஜகவை எதிர்க்கும் அத்தனை கட்சிகளையும் குமாரசாமியின் பதவியேற்பு விழாவுக்கு அழைத்திருப்பதன் நோக்கம் என்ன?
எனது அழைப்புக்கு பல்வேறு அர்த்தங்கள் கற்பிக்கப்படுகின்றன. ஆனால், பாஜகவை எதிர்க்கும் அத்தனை கட்சித் தலைவர்களையும் நான் இந்த பதவியேற்பு விழாவுக்கு அழைத்திருக்கிறேன். அவர்களில் சிலர் காங்கிரஸுக்கு எதிரானவர்களாகக்கூட இருக்கலாம். ஆனால், எல்லோருடைய ஒரே திட்டமும் 2019-ல் மத்தியில் பாஜக ஆட்சி அமையக்கூடாது என்பது மட்டுமே.
எனவே, பாஜக எதிர்ப்பு கட்சித் தலைவர்கள் அனைவரையும் ஒரே தளத்தில் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே எனது ஆசை. ஆனால், இது சற்றே கடினமான பணியாக இருக்கிறது. இருந்தாலும், பாஜக எதிர்ப்பு முன்னணி அமைப்பது குறித்து எதிர்க்கட்சிகள் அனைத்தும் நல்ல முடிவு எடுக்கும் என நான் நம்புகிறேன். எனவே, எனது மகனின் பதவியேற்பு விழா பாஜக எதிர்ப்பு அணிகளின் சங்கமமாக அமைந்து பாஜகவுக்கு வலுவான சமிக்ஞையை அனுப்பும் என நம்புகிறேன்.
காங்கிரஸ் இல்லாமல் பாஜக எதிர்ப்புக் கூட்டணியை உருவாக்க முடியும் என நினைக்கிறீர்களா?
நான் நேர்மையாக பதில் சொல்ல விரும்புகிறேன். கர்நாடகாவில் தற்போது காங்கிரஸுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்கும் நிலையில் காங்கிரஸை தவிர்த்து பாஜக எதிர்ப்பு அணியை உருவாக்குவது சாத்தியமே இல்லை என்றுதான் நினைக்கிறேன். இந்தியா முழுவதும் வியாபித்திருக்கும் ஒரு கட்சி என்ற முறையில், காங்கிரஸ் எப்படியும் முன்னணியில் நிற்கும். காங்கிரஸ் அதிக இடங்களை வென்றால் பாஜக எதிர்ப்புக் கூட்டணியின் இயற்கையான அங்கமாகிவிடும்.
மஜத-வுக்கு காங்கிரஸ் நிபந்தனையற்ற ஆதரவு அளித்தது ஆச்சரியமாக இருந்தது. இது எப்படி சாத்தியமாயிற்று?
தேர்தல் வேளையில் காங்கிரஸ் என் மீது முன்வைத்த விமர்சனங்கள் என்னை வேத்னைப்படுத்தியது. நாங்கள் எதிர்க்கட்சியாக செயல்படுவோம் என்றுதான் நினைத்தேன். ஆனால், தேசத்தின் நலன் கருதி எல்லா அவமானங்களையும் பொறுத்துக் கொண்டேன்.
சட்டப்பேரவையில் சனிக்கிழமை அரங்கேறிய அரசியல் நாடகங்கள் குறித்து உங்கள் கருத்து என்ன?
அது நீதித்துறைக்கு கிடைத்த வெற்றி. குதிரை பேரத்தை ஒடுக்கி ஜனநாயக மாண்பை உயர்த்திப் பிடிக்கும் வகையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இரவு நேரம் எனக்கூட பாராமல் உச்ச நீதிமன்றம் முக்கியமான வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கியது நீதித்துறை மீதான மக்கள் நம்பிக்கையை வலுப்படுத்தியிருக்கிறது.
காங்கிரஸ் – மஜத கூட்டணி இன்னும் நீண்ட காலம் பிணைப்பில் இருக்கும் என நீங்கள் நம்புகிறீர்களா?
பழைய காயங்களை நினைவுப்படுத்திக் கொள்ளும் நேரம் இதுவல்ல. நானோ அல்லது எனது மகன் குமாரசாமியோ கடந்த காலத் தவறுகளை இப்போது தோண்ட விரும்பவில்லை. இந்நாட்டின் முன்னாள் பிரதமர் என்ற முறையில் மதச்சார்பின்மை கொள்கைகளுக்காக நிற்க வேண்டிய தருணம் இது. தேசத்தின் குரலுக்கு செவி சாய்க்க வேண்டிய தருணம் இது