தூத்துக்குடியிற்கான அறுவடைக்கு சொல்லும் சேதி……?

வறுமையும் பஞ்சமும்
தலைவிரித்தாடிய ரஷ்யா.

1905. ஜனவரி 9.
ஞாயிற்றுக்கிழமை.

“ஜார் மன்னருக்கு நடப்பது எதுவும் தெரியாது.
அவரிடம் முறையிடுவோம் வாருங்கள்”
என்று…
மக்களை – தொழிலாளர்களைத் திரட்டினார்
கப்பான் என்கிற கிருஸ்துவ பாதிரியார்.

“வேண்டாம்.பயனில்லை” என்றார்கள் கம்யூனிஸ்டுகளாகிய போல்ஷிவிக்குகள்.

ஆனால் பேரணி திரண்டது.

வேறு வழியின்றி கோரிக்கை மனுவில்
மேலும் சில கோரிக்கைகளை சேர்க்கச் சொல்லி போல்ஷிவிக்குகளும் அதில்
பங்கேற்க வேண்டி வந்தது.

நூறல்ல. ஆயிரமல்ல.
ஏறத்தாழ ஒன்றரை லட்சம் பேர்.

ஜார் மன்னனின் குளிர்கால அரண்மனை நோக்கி
ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாய்….

அவர்கள் கைகளில் கொடி மட்டுமல்ல.
ஜார் மன்னனின் படமும். மேரி மாதாவின் படமும்.

ஆனால் ஜார் என்ன செய்தான் தெரியுமா?

தனது ராணுவத்தை ஏவி –
அந்த மக்களைக் கொன்று குவிக்க ஆணையிட்டான்.

துப்பாக்கிகள் சுட்டுக் பொசுக்க-
குதிரைப்படையோ வாள்களால் வெட்டிச் சாய்த்தது.

ஆயிரக்கணக்கில் மக்கள் செத்து விழுந்தார்கள்.

அரண்மனை முற்றமெங்கும்
குருதியின் வீச்சம்…
பிணங்களின் குவியல் …

வரலாற்றில் ‘ரத்த ஞாயிறு’ என்று குறிப்பிடப்படும்
அந்தக் கொடிய நிகழ்வினால்தான்….

ரஷ்யப் புரட்சியே விளைந்தது .
ஜார் மன்னன் பரம்பரையே
அடியோடு இல்லாமல் கொன்றொழிக்கப்பட்டது.

தூத்துக்குடியின்
‘ரத்தச் செவ்வாய்’ என்ன செய்யும்?

கொடுமதி ஆட்சியாளர்களின்
கூற்றுவனாக
அறம் காத்துக்கொண்டிருக்கிறது.

சுட்டவனே….
சுடச் சொன்னவனே….

அரசியல் கோபம்
உன் ஆட்சியைத்தான் கவிழ்க்கும்.

ஆனால், கண்ணீரும் சாபங்களும்…
உங்கள் குலத்தின் கருவறுக்கும்.

(Rathan Chandrasekar)