இன்று மே 19. தலைவர் பிரபாகரனின் உடல் இன்றுதான் சிறிலங்கா மற்றும் சர்வதேச ஊடகங்களில் காட்டப்பட்டது. சிதைக்கப்பட்டிருந்த தலையின் மேற்பகுதி துண்டு போட்டு மூடப்பட்டிருந்தது. அளவற்ற புலிச் சீருடை ஒன்று அணிவிக்கப்பட்டிருந்தது. தெளிவற்ற கமெரா (அனேகமாக கைத்தொலைபேசி) ஒன்றின் ஊடாக அந்தக் காட்சி எடுக்கப்பட்டிருந்தது.
இதற்கு ஒரு நாள் முன்னர்தான் ‘சிறிலங்காப் படைகளின் முற்றுகையை உடைத்து தேசியத் தலைவர் வெளியேறினார்’ என்கின்ற செய்தியை என்னுடைய ‘வெப்ஈழம்’ தளத்திற்காக எழுதியிருந்தேன். அந்தச் செய்தியை அன்றைக்கு பல செய்தித் தளங்களும் மறுபிரசுரம் செய்திருந்தன.
நான் அந்தக் காட்சியை கவனமாக ஊன்றிப் பார்த்தேன். அது தலைவர்தான் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் ஏற்படவில்லை. அன்றைய காலப் பகுதியில் அனைத்துப் போர்ச் செய்திகளையும் சிறிலங்கா அரசின் ஊடாகவே அறிய முடியும் என்கின்ற சூழ்நிலை உருவாகியிருந்தது. போர்ச் செய்திகளையும், நிலங்கள் இழக்கப்படுவதையும் தமிழ் ஊடகங்களில் அறிய முடியாத ஒரு நிலை பல மாதங்களாகவே உருவாகிவிட்டிருந்தது..
ஆனந்தபுரத்தில் ஒரு பெரும் சமர் நடந்ததையும், அங்கே தீபன், கடாபி, விதுசா, துர்க்கா போன்ற முக்கிய தளபதிகளை நாம் இழந்ததையும் கூட சிறிலங்காவின் பாதுகாப்புத் தரப்பின் இணையங்களின் ஊடாகவே அறிய வேண்டி இருந்தது. அப்பொழுதும் புலம்பெயர் நாடுகளில் உள்ள சிலர் தளபதி தீபனின் படத்தைக் காட்டி ‘இது தீபனே இல்லை’ என்று வாதிட்டார்கள். சில வாரங்கள் கழித்து தமிழ்நாட்டின் சஞ்சிகை ஒன்றுக்கு பேட்டி அளித்த நடேசன் இந்த இழப்பை ஒத்துக் கொண்டார்.
தொடர்ச்சியாக வீரச்சாவடைந்த விடுதலைப் புலித் தளபதிகளின் படங்கள் வெளிவந்தபடி இருந்தன. தலைவருடைய மகன் சார்ள்ஸ் அன்ரனியின் படமும் வந்தது. முடிவு உறுதியாகத் தெரிந்து போயிருந்தது. மனதைக் கல்லாக்கிக் கொண்டேன்.
தலைவருக்கு என்ன ஆனது என்பது தெரியவில்லை. மே 17 அன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய மகிந்த போரின் வெற்றியை அறிவித்தார். ஆனால் தலைவர் பிரபாகரன் பற்றி எதுவும் பேசவில்லை. இந்த நிலையில் முற்றுகையை உடைத்து தலைவர் வெளியேறி விட்டதாக சிங்கள ஊடகங்கள் சிலவற்றில் கதை ஒன்று பரவியது. ஆனால் அடுத்த நாள் ஆம்புலன்ஸ் ஒன்றில் தப்பிச் செல்ல முயன்ற தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக செய்தி ஒன்று வெளியாகியது. பின்னர் இது பொய்யென்று சொல்லப்பட்டது.
இப்படி மாறி மாறி செய்திகள் வந்து, பின்னர் மே 19இல் சிறிலங்கா அரசு தலைவர் பிரபாகரனின் இறந்த உடலைக் காட்டியது. என்ன நடந்தது, எப்படி நடந்தது என்று எதுவும் சரியாகத் தெரியவில்லை. ஆனால் அவர் இல்லை என்பது மட்டும் தெரிந்தது. நான் இதை மற்றவர்களுக்கு சொன்ன போது, அவர்கள் நான் எழுதிய செய்தியையே வேறு தளங்களில் எடுத்து எனக்கு வாசித்துக் காட்டி ‘தலைவர் தப்பி விட்டார்’ என்றார்கள்.
அது தலைவரின் உடலே இல்லை என்று அந்தத் தெளிவற்ற படத்தை வைத்துக் கொண்டு புலம்பெயர் நாடுகளில் தமிழர்கள் வாதிடத் தொடங்கினார்கள். தமிழ்நாட்டிலும் ஈழ ஆதரவுத் தலைவர்கள் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்று அறிக்கை விட்டார்கள்.’எம் தலைவர் சாகவில்லை’ என்று தேனிசை செல்லப்பா அதை பாட்டாகவே பாடினார்.
இதையெல்லாம் மறுப்பதற்கான சான்றுகள் சிறிலங்கா அரசின் கையில் இருந்தன. ஆனால் ‘தமிழர்கள் காலாகாலத்திற்கும் இப்படி குழப்பத்துடனேயே இருக்கட்டும்’ என்று அது விட்டு விட்டது. இந்தக் குழப்பம் தமிழர்களை பிளவுபடுத்தும் என்று சிறிலங்கா அரசு சரியாகவே கணக்குப் போட்டது. இது அவர்கள் முற்கூட்டியே திட்டமிட்டுச் செய்த ராஜதந்திர நகர்வா, அல்லது தமிழர்களே சிறிலங்கா அரசுக்கு எதிர்பாராமல் உருவாக்கிக் கொடுத்த வாய்ப்பா என்பது சரியாகத் தெரியவில்லை.
9 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதே மே மாதத்தில் இராஜிவ்காந்திக்கு அஞ்சலி செய்யப்படுகிறது. சிறிசபாரத்தினத்திற்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது. இதைத் தவறு என்று சொல்லவில்லை. அந்த அந்த தலைவர்களின் ஆதரவாளர்கள் இதைச் செய்வார்கள்தான். ஆனால் உலகத் தமிழர்களின் மாபெரும் தலைவராக விளங்குகின்ற எமது தலைவருக்கு இந்த வஞ்சனையை வரலாறு ஏன் செய்தது என்று நினைக்கின்ற போது மனம் கனக்கிறது.
(V. Sabesan)