ஆந்திராவில் போய் நீங்கள் ‘ரெட் ஸ்டார்’ என்று
ஒரு குழந்தையைக் கேட்டாலும் ,
“எவரு? மாதலா ரங்காராவ்காரு?”
என்று திரும்பக் கேட்கும்.
ஆமாம். எழுபதுகளில் தொடங்கி
எண்பதாம் ஆண்டுகளில் தெலுகு சினிமாவில் –
என்டிஆர் மிளிர்ந்தகாலங்களிலேயே –
படத்துக்குப் படம் சிவப்புக்கொடியை ஏந்தி நடித்த
‘சிவப்பு நட்சத்திரம்’ மாதலா ரங்கா ராவ்.
யுவதரம் கதிலிந்தி – எர்ர மல்லிலு –
மரோ குருஷேத்ரம் – விப்ளவ சங்கம் –
மஹா பிரஸ்தானம் – பிரஜாசக்தி என்று
வரிசையாக சூப்பர் ஹிட் கொடுத்து –
அத்தனை படங்களிலும் செங்கொடியை ஏந்தி –
‘எர்ர சினிமா’ (சிவப்பு சினிமா) என்று
தனியே ஓர் அத்தியாயத்தைத் தொடங்கி வைத்தவர் மாதலா.
அவரது ‘விப்ளவ சங்கம்’ சென்சாரால்
தடை செய்யப்பட்டபோது,
அதைக் கண்டித்து உரிமைக்குரல் எழுப்பி –
சென்னை அண்ணா சாலையில்
உண்ணாவிரதம் இருந்தார் மாதலா.
கம்யூனிஸ்ட் தலைவர் கல்யாணசுந்தரம்
அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தியைத்
தலையிடச் செய்து அப்படத்தை வெளியிட உதவிய நன்றியை என்னிடம் பன்முறை வெளிப்படுத்தியிருக்கிறார் அவர்.
அந்தப்படம் வெளியாகி ‘ஒரு வருடம்’ ஓடி
சாதனை படைத்தது.
அவரது ‘எர்ர மல்லி’தான் தமிழில்
சிவப்பு மல்லி ஆனது.
அவரது ‘யுவதரம் கதிலிந்தி’
சங்கநாதம் என்ற பெயரில் தமிழில் உருவாக்கப்பட்டது.
கமல் நடித்த ‘உன்னால் முடியும் தம்பி’ அவரது கதைதான்.
ஆனால் அதை கோர்ட்டில் சென்று நிலைநாட்டவேண்டிய
அவசியம் மாதலாவுக்கு நேர்ந்தது.
அவரது படங்கள் நக்ஸலிசத்தை பரப்புரை செய்கின்றன
என்கிற செய்தி பரப்பப்பட்டபோது –
‘ ஒருபோதும் இல்லை. சமூக மாற்றத்தைக் கொண்டு வருவதே
என் நோக்கம்’ என்று பதிலளித்தார் அவர்.
வாரங்கல் மாவட்டம் என்று ஞாபகம்?
ஒரு தொழிற்சாலை மூடப்பட்டு – தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டபோது – தன்னந்தனி ஆளாக உண்ணாவிரதப்போராட்டம் மேற்கொண்டு மூடிய
ஆலையைத் திறக்கச் செய்தவர் மாதலா.
அரசியலில் இருந்தும் – தன் சினிமா முழுக்க
மக்கள் பிரச்சனைகளையே பேசியும்கூட…
இந்த மனுஷனுக்கு ஏன் முதலமைச்சர் ஆசை வரவில்லை
என்று தெரியவில்லை.
அவர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்.
அதன் ஆந்திர மாநிலக் கலை இலக்கிய அமைப்பான
ப்ரஜா நாட்டிய மண்டலியில் இணைந்து பணியாற்றியவர்.
ஆனால், கம்யூனிஸ்ட் கட்சிகள் பிளந்து நிற்காமல்
ஒரே கட்சியாகப் பார்ப்பதே
தனது வாழ்நாள் லட்சியம் என்றார். இதற்காக
சிபிஐ, சிபிஎம், யூசிபிஐ, பல நக்சல் குழுக்களின் தலைவர்கள்
என்று தேடித் தேடிப்போய் பேசிப் பார்த்தார்.
புரட்சியாளர்கள் அசைந்து கொடுக்கவில்லை.
அதேபோல காங்கிரசுக்கு மாற்று கம்யூனிஸ்டுகள் மட்டுமே – அடுத்தவன் வருவது பேராபத்து என்றும் மொழிந்தார்.
ரெண்டுமே நடக்கவில்லை.
உடல் நலிவுற்றிருந்த அந்த சிவப்பு நட்சத்திரத்துக்கு
கடந்த மே 25ஆம் தேதி பிறந்தநாள்.
27ஆம் தேதி மரணமடைந்து
எரிநட்சத்திரமாக வீழ்ந்துபட்டார் மாதலா.
கண்ணீர் வழிய
புரட்சி வணக்கங்கள் காம்ரேட்!
(Rathan Chandrasekar)