சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான மறைந்த மாதுலுவாவே சோபித்த தேரரின் 76ஆவது பிறந்தநாள் வைபவத்தில் கலந்துகொண்டு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆற்றிய உரைக்கு, எவ்வகையிலும் பதிலளிப்பதற்கு முயல வேண்டாமென, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கட்டளையிட்டுள்ளார்.
கொழும்பு – 7இல் அமைந்துள்ள இலங்கை மன்றக் கல்லூரியில், புதன்கிழமை (30) மாலை நடைபெற்ற அந்த வைபவத்தில் கலந்துகொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, “தான் ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்னர், முதலாவது காரியமாக, நாடாளுமன்றத்தைக் கலைத்திருக்க வேண்டும். பிரதமர் தலைமையிலான அரசாங்கம், 100 நாட்கள் வேலைத்திட்டத்தைக் கொண்டுவந்தமையால், அது தவறவிடப்பட்டது. அந்த 100 நாட்கள் வேலைத்திட்டம், முட்டாள்தனமான வேலையாகும்” என்றும், ஜனாதிபதி தனதுரையில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டம், கட்சியின் தலைமையகத்தில், நேற்று (31) இடம்பெற்றது. இதன்போது, கட்சியின் சிரேஷ்ட தலைவர்களுடனான பிரத்தியேகச் சந்திப்பின் போது, பிரதமர் மேற்கண்டவாறு கட்டளையிட்டுள்ளார்.
ஜனாதிபதியின் சர்ச்சைக்குரிய உரைக்கு பதிலளிக்காமல், மக்களின் பதில்களுக்கு அமையவே, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்கள் வேலைசெய்ய வேண்டுமென்றும், பிரதமர் இதன்போது குறிப்பிட்டுள்ளார். மறைந்த மாதுலுவாவே சோபித்த தேரரின் 76ஆவது பிறந்தநாள் வைபவத்தில் கலந்துகொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உரை தொடர்பில், நாட்டு மக்களுக்கே தாம் பதிலளிக்க வேண்டுமென, கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
அந்த உறுப்பினர்களின் கோரிக்கைக்கு செவிசாய்த்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, “ஜனாதிபதியின் உரைக்கு பதிலளிப்பதற்கு, எவ்வகையிலும் முயற்சிக்க வேண்டாம்” என்று, கடுமையாகக் கட்டளையிட்டுள்ளார்.
“நாட்டு மக்களின் ஆணை, பிரதமர் என்றவகையில் தனக்கும் அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களான உங்களுக்கும் கிடைத்துள்ளன. ஆகையால், அரசாங்கம் என்றவகையில், நாட்டுக்கும் மக்களுக்கும் சேவையாற்ற வேண்டும்” என்றும், இதன்போது பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
“நான், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை ஏற்றமையால், நல்லாட்சி ரொட்டி கருகிவிட்டதென, வாழ்த்துரைத்த தேரர் கூறியிருந்தார். கருகிவிடவில்லை. கருக்கப்பட்டுவிட்டது” என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அந்த பிறந்தநாள் வைபவத்தில் ஆற்றிய உரையில், பதிலளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
“பொதுவேட்பாளரை ஜனாதிபதியாக்கி, அரசாங்கத்தை நிறுவி, மத்திய வங்கியில் கொள்ளையடிக்குமாறு, சோபித்த தேரர் கூறவில்லை” என்றும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது குறிப்பிட்டிருந்தமையும் தெரிந்ததே.