(Saakaran)
நாளை ஒன்றாறியா மாகாணத் தேர்தல். கடந்த கால் நூற்றாண்டு காலத்து தேர்தல்களில் இது முக்கியத்துவம் வாய்ந்தது என்றே என்னால் உணரப்படுகின்றது. பொப் ரே இன் உழைக்கும் விளிம்பு நிலை மக்களின் நலன்களை முன்னிலைப்படுத்தி செயற்பட்ட காலகட்டத்திற்கு பின்னர் மீண்டும் இதற்கான ஒரு வாய்ப்பு ஏற்பட்டிருக்கும் சூழல் இப்போது.
பொப் ரே இன் ஆட்சி இன்னொரு தடவையாவது தொடர்ந்திருந்தால் விளிம்பு நிலை மக்களின் இன்னும் பல நலன்கள் பாதுகாக்கப்பட்டிருக்கும் இதனை அகதிநிலையில் ஆரம்ப வாழ்கையை ஆரம்பித்த எம்மில் பலரும் என்றும் ஏற்றுக் கொள்வர். இதனாலே எம்மில் பலர் இன்றும் என்டிபி ஆதரவு நிலைப்பாட்டில் உள்ளோம். அகதிகளாக இடமபெயர்ந்த முதல் தலைமுறையினராகிய எம்மில் மிகப் பெரும்பான்மையினர் அடிப்படைச் சம்பளத்தில் வேலைகளைச் செய்தே எமது பிள்ளைகளை உயர்கல்வி வரைக்கும் வளர்த்தெடுத்து வீடு வளவும் வாங்கும் ஒரு வகை கூலி வாழ்வையே எமது அகதி வாழ்வின் பெரும்பகுதியை கழித்தும் வந்திருக்கின்றோம்.
என்டிபி யின் ஆட்சியை தொடர்ந்து உருவான தீவிர வலதுசாரிக் கட்சியின் முதலவர் மைக் ஹரிஸ் ஆட்சியில் விளிம்பு நிலை மக்களுக்கான பல அடிப்படை வசதிகள் இல்லாமல் ஆக்கப்பட்டதும் அல்லது இதற்கான கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டதும் தொழிலாளர் விரோத செயற்பாடுகளை முன்னெடுத்ததும் யாவரும் அறிவோம்.
இதனைத் தொடர்ந்து மக்களின் தெரிவாக உருவான லிபறல் கட்சியின் ஆட்சியில் பல நல்ல விடயங்கள் நடந்தேறின. தீவிர வலதுசாரி முதலாளிகளின் நலன்களை மட்டும் பாதுகாத்த அரசின் செயற்பாட்டில் இருந்து பெரும்மையாக இருக்கும் தொழிலாளர்களுக்கான நலன்சார்ந்த செயற்பாட்டிற்கு இந்த ஆடசி 15 வருடங்கள் எடுத்துக் கொண்டு எமது மிகவும் அடிப்படையான உழைப்பு ஊதியத்தை 15 டாலர் வரை உயர்த்திய சிறப்பு செயற்பாட்டை யாரும் மறுக்க முடியாது.
லாப நோக்கை மட்டும் கருத்தில் கொண்டு செயற்படும் காப்பரேர் நிறுவனங்கள் இந்த ஊதிய உயர்விற்கு எதிரான எதிர் வினையாக பொருட்களின் விலையை அதிகரித்து சம்பள அதிகரிப்பு ‘தவறானது’ என்று யார் சம்பள உயர்வு மூலம் பலன் அடைந்தாரகளோ அந்த சாமான்ய மக்களைக் கொண்டே பேசவைத்த சாமர்த்தியம் முதலாளிகளும் இதற்கு சாதகமான ஊடகங்களும் கட்சிகளும் மிகச் சாதுர்சியமாக செய்தனர்.
காப்புறுதியை மகாண அரசின் கீழ் கொண்டுவருதல் என்ற முன்னெடுப்பு பொப் ரேயை இன்றுவரை அரசியலில் தலையெடுக்க விடாமல் தடுத்து சக்திகள் 15 டாலர் அடிப்படைச் சம்பளமாக உயர்த்திய கதலின் வின்னையும் அதே மாதிரி செய்திருக்கின்றன என்பது எனக்கான லிபறல் கட்சி மீதான பல்வேறு அரசியல் விமர்சனங்களுக்கு அப்பாலும் என் உணர்வலையாக உள்ளது.
எம்வரில் பலரும் வலதுசாரிக் கட்சியின் வேட்பாளராக அல்லது செயற்பாட்டாளர்களாக இருப்பதும் இதன் அடிப்படையில் தேர்தலில் நிற்பதும் ஒன்றும் புதிய விடயம் அல்ல இது ஒருவகை யாழ் மேலாதிக்கவாத்தின் அடைப்படையில் செயற்படும் தாயக மிதவாத தமிழ் தலைமைகளின் விம்பங்களின் செயற்பாடுகளே.
கொள்கை என்பது எல்லாம் இங்கு இல்லை வெற்றி பெற்று சுக போகங்களை தொடருதல் என்பதற்கு பாவிக்கப்படும் பதம் ‘நான் தமிழனடா’. நாமும் ‘நாம் தமிழர்களடா’ என்று கட்சிகளின் கொள்கை கோப்பாடு செயற்பாடுகளை மறந்து அள்ளிப் போடுதலை செய்கின்றோம். இதில் அங்காங்கே ‘புலி’களை துணைக்கழைத்தலையும் செய்யத் தவறுவதில்லை.
கனடா போன்ற மேற்கத்திய நாடுகளில் தேர்தலில் ஒரு சமான்ய மனிதன் நடைமுறை ரீதியாக நிற்றல் தொடர்ந்து தேர்தலில் வெல்லல் என்பது முடியாது என்பதே நிலை. பணம் படைத்தவர்கள் மட்டும் வேட்பாளர்கள் ஆக முடியும். இது எமது தமிழ் வேட்பாளர்களுக்கும் பொருந்தியே நிற்கின்றது. இவர்களுக்கு அடிப்படைச் சம்பளத்தில் வேலை செய்து தமது குடும்பச் சுமையை சுமக்கும் விளிம்பு நிலை மக்களின் பிரச்சனை உணரப்படப் போவது இல்லை.
கூலிகளாக வேலை செய்யும் எம்மவர்களின் பிரதிநிதிகாளக இவர்கள் வருதல் என்பது எந்த வகையிலும் சமான்ய மக்களுக்கு உதவப் போவது இல்லை மாறாக விளிம்பு நிலை மக்களை ஓரளவேனும் கருத்தில் கொள்ளும் வலதுசாரி செயற்பாடுகள் அற்ற கட்சிக்கு எமது வாக்குகளை செலுத்தி புதிய ஆட்சியை ஒன்றாறியோ மாநிலத்தில் ஏற்பட நாம் சிந்தித்து எமது வாக்குகளைச் செலுத்துவோம். இதற்கு நாம் வாக்குகளை செலுத்தக் கூடாத மாகாண கட்சி பழமைவாதக் கட்சிதான். எனவே இதனைத் தவிர்த்து எமது வாக்குளை புத்தி சாதுர்சியத்துடன் பயன்படுத்துவோம்.