8000 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

போக்குவரத்து விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 8 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பண்டிகை காலத்தில் வீதி விபத்துக்களைக் குறைத்துக் கொள்ளும் நோக்கில் பொலிஸாரால் விசேட போக்குவரத்து சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, நேற்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 8068 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். 

வேட்பாளர்களின் விசாரணைகள் நிறைவு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான வருமானம் மற்றும் செலவு  அறிக்கைகளை சமர்ப்பிக்காத வேட்பாளர்கள் தொடர்பான பொலிஸ் விசாரணைகள் நிறைவடைந்துள்ளதென பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பான அறிக்கைகள் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பிவைக்க தயார் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது குறித்து அடுத்த அமர்வில் முடிவு எடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார். 

சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு

வருட இறுதி விடுமுறைகளை முன்னிட்டு நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், நாட்டில் பல்வேறு பாகங்களிலிருந்தும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பிரயாணிகள் நுவரெலியாவிற்கு  படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

நுவரெலியா பகுதியில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளமையினால் மாலை நேரங்களில் பிரதான வீதிகளில் வாகன நெரிசல்களும் ஏற்பட்டுள்ளன. இதற்காக விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்து அதிக பொலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

முதலாம் திகதியில் இருந்து “தூய்மையான இலங்கை”

அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள “தூய்மையான இலங்கை” வேலைத்திட்டம் எதிர்வரும் 1ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் இந்த வேலைத்திட்டம் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மரண பயத்தை ஏற்படுத்திய பேருந்து – எடுக்கப்பட்ட நடவடிக்கை

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை 750 வழித்தடத்தில் நேற்று பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பயணித்த தனியார் பேருந்து உரிமையாளரின் பயணிகள் அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வட மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் க.மகேஸ்வரன், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேநாயகத்திற்கு அறிவித்துள்ளார். 

கிராம உத்தியோகத்தர்கள் போராட்டம்

மட்டக்களப்பு மாவட்ட கிராம உத்தியோகத்தர்கள் திங்கட்கிழமை (30) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மட்டக்களப்பு காந்தி பூங்கா சதுக்கத்தில் இந்த  ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நீதி கோரி ​ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வாழும் உறவுகள்

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில்  வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் வாழும் உறவுகள்  தமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி திங்கட்கிழமை (30) அன்று ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். நீதி வேண்டி வடக்கு மாகாணத்தின் மாவட்டங்கள் தோறும் மாதாந்தம் முன்னெடுக்கப்பட்டு வரும்   ஆர்ப்பாட்டத்தில்  ஒரு அங்கமாகவே இது முமுன்னெடுக்கப்பட்டுள்ளது.   

காட்டு யானைகளுக்கெதிராக போராட்டம்

காட்டு யானைகள் கிராமங்களுக்குள் பிரவேசிக்கும் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு கோரி அனுராதபுரம் தந்திரிமலை வீதி ஓயாமடுவ பகுதியில் வைத்து மக்கள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். யானைக்கூட்டம் ஒன்று அப்பகுதிக்கு இடம்பெயர்ந்துள்ளதையடுத்து பயிர்களுக்கு கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளதாக போராட்டக்காரர்கள் கூறுகின்றனர். 

”பல திட்டங்கள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன”

இடைநிறுத்தப்பட்ட பல சர்வதேச மற்றும் வெளிநாட்டு முதலீட்டுத் திட்டங்கள் புதிய அரசாங்கத்தின் மூலம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.  களுத்துறை மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவராகக் கடமைகளைப் பொறுப்பேற்ற பின்னர் ஜயதிஸ்ஸ இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். 

புத்தாண்டிலிருந்து புதிய இடத்தில் ஜனாதிபதி நிதியம்

இதுவரை கொழும்பு 10, டி.ஆர். விஜேவர்தன மாவத்தை, லேக்ஹவுஸ் கட்டிடத்தின் 3வது மாடியில்  இயங்கி வந்த ஜனாதிபதி நிதியத்தின் அலுவலகம் 2025 ஜனவரி 01 ஆம் திகதி முதல் புதிய இடத்தில் நிறுவப்பட உள்ளது.