பொதுவாக மாவட்ட அதிகாரிகளின் அலுவலகம் கச்சேரிகளில் அமைந்திருக்கும் .திருகோணமலையில் துறைமுகத்தின் அருகில் உணவுக் கட்டுப்பாட்டு அதிகாரி அலுவலகம் அமைந்திருந்தது.அதன் அருகே நகர காரியாதிகாரி அலுவலகம் ,சுங்க இலாகா அலுவலகம் ஆகியவை அமைந்திருந்தன.ஆனால் எனக்கு சுங்க இலாகா என்றால் என்ன என்பது தெரியாது.
நான் பற்குணத்தோடு நிற்கும் நாட்களில் எங்காவது தூர இடங்கள் செல்வதானால் என்னையும் அழைத்துச் செல்வார்.அதுபோலவே புதிதாக கப்பல் ஏதாவ…து உணவுகள் கொண்டுவந்தால் அவற்றைப் பொறுப்பேற்க போகும்போதும் அழைத்துச் செல்வார்.
நான் முதன் முதலாக கப்பலை பார்க்க அழைத்து சென்றபோது என்னிடம் இரண்டு தேயிலைப் பெட்டிகள் வாங்கித் தந்தார்.அவர் கப்பலுக்கு போவதற்கு தனியான இயந்திரப் படகு இருந்தது.அதில் ஏறி இருவரும் கப்பலுக்கு செனறோம்.
அவர் கப்பலின் தலைவரைக் கண்டு கை குலுக்கி என்னையும் அறிமுகப் படுத்தினார்.நானும் அவருடன் கை குலுக்கி கொண்டு சென்ற தேயிலைப் பெட்டியை கொடுத்தேன்.அதற்கு பிரதி உபகாரமாக எனக்கு நிறைய இனிப்பு வகைகள்,கொப்பிகள்,பேனாக்கள் தந்தார்.நானும் வாங்கிவிட்டு நன்றி சொன்னேன்.அதன் பின் பற்குணத்தின் வேண்டுதலுக்கு இணங்க எனக்கு ஒருவர் கப்பலை சுற்றிக் காட்டினார்.
அன்றுதான் நான் தொலைக்காட்சி பெட்டி,ராடர் என்பவற்றைப் பார்த்தேன்.பற்குணத்தின் அலுவல்கள் முடிந்தபின் நாங்கள் கரை திரும்பினோம்.அப்போது பற்குணம் ஒரு அலுவலகத்தைக் காட்டி அங்கே போய் நீ கொண்டு வந்த எல்லாவற்றையும் காட்டிவிட்டு வா என்றார்.அவரகள் எதுவும் எடுக்காவிட்டால் நீ கொஞ்சம் இனிப்புகளை கொடுத்துவிட்டு வா என்றார்.
அப்போதுதான் அது என்ன எனக் கேட்க அதுதான் சுங்க அலுவலகம் என விளங்ப்படுத்தினார்.நான் அங்கே போனபோது ஏதோ வகையில் என்னை அடையாளம் கண்டு போகச் சொன்னார்கள்.நான் கொஞ்ச இனிப்புகளை அவர்களுக்கும் கொடுத்து திரும்பினேன்.
அப்போது அவரின் இந்த செயற்பாடு விளங்கவில்லை.இப்போது அவர் மற்றவர்களின் கடமைகளுக்கும் எவ்வளவு மதிப்பளித்தார் என நினைத்துப் பார்க்கிறேன்.