சென்னை ஆட்களைப் பார்த்தால் மிகவும் எரிச்சலாக இருக்கும். சுயநலமாக இருப்பவர்கள் மட்டுமல்ல கொஞ்சம் கூட மனித நேயம் இல்லாதவர்கள் என்று. அந்த எண்ணத்தை இன்று பார்த்த சில காட்சிகள் மாற்றிவிட்டது.
1. ஜோய் ஆலுக்காஸ் முன்னால் நாங்கு இளைஞர்கள் முழங்கால் அளவு இருக்கும் தண்ணீரில் இரண்டு , மூன்று நாட்கள் நின்று கொண்டு அந்தப் பக்கம் வரும் பைக், கார் இவை சிக்கிக் கொண்டால் தூக்கி உதவிக் கொண்டும் போக்குவரத்தை சரி செய்து கொண்டும் இருந்தார்கள்.
2. வேளச்சேரி -பள்ளிக்கரணை பாலத்துக்கு கீழ் ஒருவர் முட்டி அளவு தண்ணீரில் நின்று ” இந்தப் பக்கம் வராதீங்க பள்ளம் இருக்கு ” என்று சொல்லிக் கொண்டிருந்தார்.
3. ஜெயின் சங்கத்தினர் பார்க்கும் இடமெல்லாம் உணவு வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். தீவிரமாக நிவாரணப் பணிகள் செய்து கொண்டிருந்தார்கள்
.
4. ஃபேஸ்புக்கில் அதிகம் திட்டப்படும் காஞ்சி மடம், தஹ்வீத் ஜமாத் ஆகியோர் பம்பரமாக சுழன்று இண்டு இடுக்குகளில் இருப்பவர்களைத் தேடி உணவு கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.
5. உலகமெங்கும் உள்ள தமிழர்கள் நான் காசு தர்ரேன் போய் உதவுங்க என்று கெஞ்சுகிறார்கள்.
6. என் உறவினர் ஒருவர் மூன்று நாட்களாக சமைத்து பாரீஸ் கார்னர் சுற்றி உள்ள மக்களுக்கு சாப்பாடு , பழங்கள் கொடுத்து வருகிறார்.
7. நண்பன் இருக்கும் அடுக்கு மாடி குடியிருப்பில் காலை 4 மணிக்கு எழுந்து உயர் அதிகாரிகள், பெண்கள் , குழந்தைகள் என்று கூடி உணவை தயார் செய்து பாக்கெட்டில் அடுக்கி தினமும் சுமார் 1000 உணவுப் பொட்டலங்களை தயார் செய்தார்கள்.
8. மீனவர்கள் தங்கள் படகுகளில் வந்து தங்கள் வருமானத்தைப் பற்றி கவலைப்படாமல் இலவசமாக சேவை செய்து இரண்டு மூன்று நாட்கள் மக்களை மீட்டு எடுக்க உதவுகிறார்கள்.
9. போக்குவரத்து காவலர்கள் கொட்டும் மழையிலும் போக்குவரத்தை சரி செய்து கொண்டு இருக்கிறார்கள்.
10. துப்புரவுத் தொழிலாளர்கள் இரவு மழையைப் பற்றிக் கவலைப்படாமல் பம்பரமாக வேலை செய்தார்கள்.
11. உயிர் நண்பன் ஒருவன் 10 பேர் உயிரைக் காப்பாற்றினான். இன்னொருவன் இரண்டு நாட்கள் தூக்கமில்லாமல் தேனீயாக் சுழன்று நிவாரணப் பணிகள் செய்து கொண்டிருக்கிறான்.
மனித நேயம் சுத்தமாக செத்துப் போய்விடவில்லை. சென்னை மக்களுக்கு உதவ தூக்கம், பசி , வேலை , குடும்பம் அனைத்தையும் மறந்து உழைத்தவர்கள் பாதங்களை தொழுகிறேன்.
அய்யா/ அம்மா உங்கள் சேவை ஈடு இணையற்றது.ஊரெல்லாம் இது போன்ற கடவுள்கள் ஏராளமானோர் இருக்காங்க.
By –
நா சாத்தப்பன்