அமெரிக்காவின் நகல் பிரேரணை- ஜெனீவாவில் இன்று கலந்துரையாடல் ஆரம்பம்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு ஆதரவாக அமெரிக்காவினால் முன்வைக்கப்படவிருக்கும் தீர்மானத்துக்கு ஆதரவு பெருகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவால் முன்வைக்கப்படவிருக்கும் பிரேரணையின் நகல் வெளியிடப்பட்டிருக்கும் நிலையில் இதுதொடர்பான கலந்துரையாடல் இன்றையதினம் ஆரம்பமாகவுள்ளது. இந்தப் பிரேரணையின் நகல் வரைபு எதிர்வரும் 24ஆம் திகதி ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்படவுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தால் வெளியி டப்பட்ட இலங்கை மீதான விசாரணை அறிக்கையில் பரிந்துரைக் கப்பட்ட விடயங்களை அமுல்படுத்துவதனை ஊக்குவிக்கும் வகையில் அமெரிக்கா இலங்கைக்கு சாதகமான பிரேரணையொன்றை நிறைவேற்றவுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30ஆவது கூட்டத் தொடரின் ஆரம்பநாளில் இலங்கை சார்பில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உரையாற்றும்போது குறிப்பிட்ட உண்மையைக் கண்டறியும் ஆணைக் குழுவை அமைப்பது, காணாமல் போனவர்களுக்கான அலு வலகமொன்றை நிறுவுதல், நஷ்டஈடுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான அலுவலகத்தை அமைத்தல் உள்ளிட்ட பல விடயங்களை அமெரிக்கா வரவேற்றுள்ளது.

(“அமெரிக்காவின் நகல் பிரேரணை- ஜெனீவாவில் இன்று கலந்துரையாடல் ஆரம்பம்” தொடர்ந்து வாசிக்க…)

இந்திய மீனவர்களின் கோரிக்கை கடற்றொழில் சங்கங்களால் நிராகரிப்பு

இந்திய மீனவர்கள் ரோலர் இயந்திரங்களை பயன்படுத்தி பலவந்தமாக வடக்கு கடல் எல்லைக்குள் நுழைந்து மீன்பிடிப்பதை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கையை எடுப்பது தொடர்பில் இந்தியாவுக்கு சமூகமளிக்குமாறு அந்நாட்டு மீனவர் சங்கம் பிரதிநிதிகள் விடுத்திருந்த கோரிக்கையை வடக்கு கடற்றொழில் சங்கங்கள் நிராகரித்துள்ளன. இந்த கோரிக்கையை நிராகரித்தமைகான காரணம் என்ன என்பது தொடர்பில் வடக்கு கடற்றொழில் சங்கத்தின் ஆலோசகர் விநாயகமூர்த்தி சகாதேவனிடம் கேட்டபோது, மீனவர் விவகாரம் தொடர்பில் இலங்கை பிரதமரும் இந்திய பிரதமரும் நீண்டநேரம் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்தவொரு முடிவும் எட்டப்படவில்லை. இவ்வாறான நிலையில், இந்த பிரச்சினைக்கு சாதாரண மீனவர்கள் பேச்சுநடத்தி தீர்வு காண முடியும் என்று நம்பவில்லை என்பதனால் அந்த அழைப்பை நிராகரித்தோம். இந்திய மீனவ சங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள் இந்த கோரிக்கை தொடர்பில் இலங்கை அரசாங்க அதிகாரிகளுடன் வடக்கு கடற்றொழில் சங்க பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

இரண்டாகப் பிரிகிறது தலிபான் குழு?

ஆப்கானிஸ்தானிலுள்ள தலிபான்கள், இரண்டு பிரிவுகளாகப் பிளவுபடக்கூடிய சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றதாக, தலிபான் தரப்புகள் தெரிவிக்கின்றன. தலைவர் பதவி தொடர்பாக எழுந்துள்ள கருத்து முரண்பாடு காரணமாகவே இந்நிலை ஏற்பட்டுள்ளது. தலிபான்களின் தலைவராகக் காணப்பட்ட முல்லா ஓமர் உயிரிழந்தமை உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, புதிய தலைவராக முல்லா அக்தர் மொகஹட் மன்சூர் நியமிக்கப்பட்டார். எனினும், அவரது நியமனத்தை ஏற்றுக் கொள்வதற்கு, சில உயர்நிலைத் தலைவர்கள் உட்பட தலிபான்களின் ஒரு பகுதியினர் மறுத்து வருகின்றன. முல்லா ஓமரின் உதவித் தலைவராகக் காணப்பட்ட மன்சூர், முல்லா ஓமரின் மரணத்தை மறைத்து விட்டதாகவும் அவரது மரணம் உறுதிப்படுத்தப்பட்ட உடனேயே, அவசர அவசரமாக மன்சூர் நியமிக்கப்படுவதை எதிர்ப்பதாகவும் சில தளபதிகள் எதிர்ப்புக்குரல் எழுப்பியுள்ளனர். ‘நிலைமையைப் புரிந்து கொள்ளவும் புதிய தலைவரை புரிந்துணர்வின் அடிப்படையில் உயர் சபை தெரிவுசெய்வதற்காக பதவி விலகுவதற்கும், மன்சூருக்கு இரண்டு மாதங்கள் வழங்கினோம். ஆனால், அவர் அதைச் செய்ய மறுத்துவிட்டார்” என, மன்சூருக்கு எதிரான தரப்பின் பேச்சாளரான முல்லா அப்துல் மனன் நியாஸி தெரிவித்தார். எனினும், இரு தரப்புக்குமிடையில் சண்டை ஏற்படுவதற்கான வாய்ப்புக் காணப்படுவதை உறுதிப்படுத்த மறுத்த அவர், ஆப்கானிஸ்தான் படையினர் மீது தாங்கள் தனியாகத் தாக்குதல் நடாத்த வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தார்.

அமெரிக்காவிடம் பயிற்சி பெற்ற போராளிகள் சிரியாவுக்குள் நுழைவு

சிரியாவில் செயல்படும் இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) குழுவை எதிர்கொள்ள, அமெரிக்காவால் பயிற்சியளிக்கப்பட்ட 75 பேர் கொண்ட சிரியப் போராளிகள் குழு ஒன்று துருக்கியில் இருந்து சிரியாவுக்குள் நுழைந்துள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்க ஆதரவுடன் சிரியாவில் செயற்பட்டு வரும் இரண்டு கிளர்ச்சிக் குழுவினருக்கு துணையாக இருக்கும் நோக்கில், அமெரிக்காவால் பயிற்சிய ளிக்கப்பட்ட இந்தப் போராளிகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக, பிரித்தானியா வைத் தளமாக கொண்டு செயற்பட்டு சிரியாவில் இடம்பெறும் மோதலை கண் காணித்து வரும் சிரிய மனித உரிமை கண்காணிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவால் பயிற்சியளிக்கப்பட்ட சிரியர்களில் நான்கு அல்லது ஐந்து பேர் மாத்திரமே தற்போது அங்கு சண்டையில் ஈடுபட்டு வருவதை அண்மை யில் அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் ஒப்புக் கொண்டுள்ளது. இந்த நிலையில் அமெரிக்கா மேலும் ஆயிரக்கணக்கான சிரியர்களுக்கு பயிற்சியளிக்க இருப்பதாக வெளியான தகவல் அண்மையில் ஏளனத்துக்கு உள்ளானது.

காவிகளுக்கு நேருவை கண்டால் அலர்ஜியும் அரிப்பும் வருவதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு அதில் இதுவும் ஒன்றாக இருக்கலாம்….

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான நேரு ஒருமுறை தமிழக எம்.பிக்களை அழைத்து விருந்தளித்தார். அப்போது நேரு, ‘அடுத்து 100 ஆண்டுகளுக்கு மக்கள் எந்த தலைவரை பற்றி பெருமையாக பேசிக்கொண்டிருப்பர்.?” என்று கேட்டார். அதற்கு ஒரு எம்.பி, ‘சர்தார் வல்லபாய் பட்டேல்’னு சொன்னார். இன்னொரு எம்.பி ‘மகாத்மா காந்தி’னு சொன்னார். மற்றொரு எம்.பி ‘உங்களை தான் பெருமையாக பேசிக்கொண்டு இருப்பார்கள்’னு சொன்னார். ஆனால், இதையெல்லாம் மறுத்த நேரு, ‘நீங்கள் எல்லாம் அரசியல்வாதிவாதிகள். அதனால் தான் அரசியல் சார்ந்த தலைவர்களை குறிப்பிடுகிறீர்கள். ஆனால், உண்மை என்னவென்றால் அடுத்த 100 ஆண்டுகளுக்கு உங்கள் மாநிலத்தில் உள்ள சமூக சீர்திருத்தவாதி பெரியாரை பற்றி தான் பெருமையாக பேசிக்கொண்டிருப்பார்கள். ஒரு நாடு முன்னேற சமூக ரீதியாக சீர்திருத்தமும் தனி மனித சுய சிந்தனையும் அவசியம். அறியாமை எனும் இருளால் நிரம்பி வழியும் ஒரு நாடு நிச்சயம் முன்னேறாது என உணர்ந்து அதற்காக பாடுபடும் பெரியாரை தான் பெருமையாக பேசிக்கொண்டிருப்பர்’ என்று அவர்களிடம் பிரதமர் நேரு விளக்கினார்.

தேவையற்ற விவாதங்களை தவிர்த்து விரைவில் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் – வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித்தலைவர்

எமது மக்களுக்கு நீதி கிடைக்கச் செய்யவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகள் கிடைக்கச் செய்வதற்கு ஏற்றவகையில் சம்பந்தப்பட்டவர்கள் துரிதகதியில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டுமென வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகராலும் அவரது காரியாலயத்தினால் வெளியிட்ட அறிக்கை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகராலும் அவரது காரியாலயத்தினால் வெளியிட்ட அறிக்கையில் 2002, 2011 காலப்பகுதிகளில் யுத்தக்குற்றங்களும், மனிதநேயத்துக்கு எதிரான குற்றங்களும் பெரும்பாலும் இழைக்கப்பட்டிருப்பதாக கூறி இதற்கு ஒர் சிறப்பு கலப்பு நீதிமன்றத்தின் மூலம் விசாரணைகள் நடாத்தப்பட வேண்டுமென்று பரிந்துரை செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது என வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார். போரினால் பாதிப்படைந்து நீதிகோரி நிற்கும் எம்மக்களது ஆதங்கத்திற்கு ஆறுதல் அளிக்கும் வகையில் உயர்ஸ்தானிகரின் விசாரணை அறிக்கை அமைந்துள்ளது. தேவையற்ற விவாதங்களை தவிர்த்து கூடிய விரைவில் எமது மக்களுக்கு நீதி கிடைக்கச் செய்யவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகள் கிடைக்கச் செய்வதற்கு ஏற்றவகையில் சம்பந்தப்பட்டவர்கள் துரிதகதியில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

எமது குடும்பம் நடுத்தெருக்கு வரும் நிலையில்’ JVP தலைவர் விஜேவீரவின் மனைவி சித்ராங்கனி

ஜே.வி.பி.யின் தலைவரான ரோஹன விஜேவீரவின் மனைவி மற்றும் பிள்ளைகள் கடற்படை முகாம் ஒன்றிலுள்ள வீட்டில் தங்கியிருந்தனர். வெலிசர கடற்படை முகாமில் இவ்வாறு தங்கியிருந்த விஜேவீரவின் குடும்ப உறுப்பினர்களை அந்த வீட்டைவிட்டு வெளியேறுமாறு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 26 ஆண்டுகளாக பெரும் சிரமங்களை தாமும் தமது பிள்ளைகள் அறுவரும் எதிர்நோக்கி வருவதாக விஜவீரவின் மனைவி சித்ராங்கனி தெரிவித்துள்ளார். கடந்த பெப்ரவரி மாதம் கடற்படைத் தளபதி கடற்படை முகாமில் அமைந்துள்ள வீடுகளிலிருப்பவர்களை வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளார். உள்நாட்டில் நெருக்கடிகளை எதிர்நோக்கி வரும் தமக்கு வெளிநாடு ஒன்றில் தங்குதவற்கு அனுமதியளிக்குமாறு வெளிவிவகார அமைச்சரிடம் விடுத்த கோரிக்கைக்கு இதுவரையில் பதிலளிக்கப்படவில்லை என சித்ராங்கனி தெரிவித்துள்ளார்.

லேபர் கட்சித் தலைவராக, ஜெரேமி கொர்பைன் ஐ வசைபாடும் ஊடகங்கள்

பிரிட்டனில் லேபர் கட்சித் தலைவராக, ஜெரேமி கொர்பைன் தெரிவான நாளில் இருந்து, பிரிட்டிஷ் ஊடகங்கள் அவருக்கெதிரான பிரச்சாரத்தை தொடங்கி விட்டன. ஜெரேமி கொர்பைன் ஒரு “தீவிர இடதுசாரி” என்பது தான் அந்தப் பிரச்சாரங்களின் சாராம்சம். அதாவது, ஒருவரை இடதுசாரி முத்திரை குத்தி விட்டால் போதும். மக்கள் அவரை தேர்தலில் நிராகரித்து விடுவார்கள் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், உண்மை நிலைமையோ வேறு விதமாக உள்ளது.

(“லேபர் கட்சித் தலைவராக, ஜெரேமி கொர்பைன் ஐ வசைபாடும் ஊடகங்கள்” தொடர்ந்து வாசிக்க…)

மனித உரிமை அறிக்கையை ஆராய்கிறது ஶ்ரீ.ல.சு.க

கடந்த செப்டெம்பர் 16ஆம் திகதி, ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட அறிக்கை தொடர்பில் ஆராய ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் விசேட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. நேற்று (18) பிற்பகல் நடைபெற்ற மத்திய செயற்குழுக் கூட்டத்தின் போது குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஶ்ரீ.ல.சு.கவின் செயலாளரும் கைத்தொழில் அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க ஊடகங்களுக்கு தெரிவித்தார்.குறித்த கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி இல்லத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் வாரம் அளவில் இவ்விடயம் தொடர்பிலான அறிக்கையை அக்குழு வெளியிடும் என எதிர்பார்ப்பதாக அமைச்சர் துமிந்த திஸாநாயக்க இதன் போது தெரிவித்தார்.

உள்ளக விசாரணைகள் ஜனவரியில் ஆரம்பம்

உள்ளக விசாரணைகள் எதிர்வரும் 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். சர்வதேச ஒத்துழைப்புடன் விசாரணைகள் நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விசாரணை ஒன்றரை ஆண்டு காலப்பகுதிக்குள் விசாரணைகள் பூர்த்தியாகும் என அவர் தெரிவித்துள்ளார். விசாரணைகள் கட்டம் கட்டமாக முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.