வட மாகாண சபை அமைச்சர்கள் உறுப்பினர்களுக்கு சொகுசு வாகனம் அதிக சம்பளம் வேண்டும் இல்லையேல் மக்கள் சந்திப்புக்கள் ரத்தாகும் எனக் கோரி வட மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் சபையில் இன்று அடுக்கடுக்காகக் கோரிக்கைகளை முன்வைத்தனர்.
ஏனைய மாகாணங்களில் அமைச்சர்கள் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் மற்றும் அனைத்து வசதிகளும் எமக்கும் வழங்கப்படவேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.
இவற்றுக்கெல்லம் மேலாக வட மாகாண அமைச்சர்களுக்கான எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் கிராமங்களுக்குச் சென்று மக்களை சந்திப்பதைப் குறைக்கவேண்டி ஏற்படும் என்றார் அமைச்சர் டெனீஸ்வரன்.
வட மாகாண சபையின் 37வது அமர்வு இன்று நடைபெற்றது. அதன்போதே இந்தக் கருத்துக்களை வெளியிட்டனர் மாகாணத்தில் மக்கள் பிரிதிநிதிகள்.
இன்றைய அமர்வில் எதிர்கட்சி தலைவர் சி.தவராசா மாகாண சபை முதலமைச்சர் அமைச்சர்கள் உறுப்பினர்கள் அவைத் தலைவர் பிரதி அவைத் தலைவர் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரின் மாதாந்த கொடுப்பனவு தொடர்பாக கேள்வி ஒன்றை கிண்டிவிட உசாரான ஆளும்கட்சி உறுப்பினர்கள் சந்தர்ப்பம் பார்த்து காத்திருந்தவர்கள் போல் சொகுசுக் கார் முதல் காச்சலுக்கு குளிசைவரை கேட்டு சபையை குழப்பியடித்தனர்.