(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
உலகின் பல மூலைகளிலும் நடப்பவை நம் காதுகளை எட்டுவதில்லை. எட்டுவனவும் முழுமையான செய்திகளல்ல. அவற்றிற் பாதி உண்மையுமல்ல. தெரிந்தே திரித்த செய்திகள் எங்களை அடைகின்றன. உலகின் செய்தி வழங்குனர்கள் தரும் செய்திகளை விடத் தராமல் விடும் செய்திகள் பல சமயங்களில் முக்கியமானவை. செய்திகளின் முக்கியம், அவை யாருக்கானவை என்ற அடிப்படையிலேயே முடிவாகின்றன.சில நாட்களுக்கு முன்னர், கிழக்கு ஐரோப்பிய நாடுகளான ஆர்மேனியாவுக்கும் அஸர்பைஜானுக்குமிடையே மூண்ட யுத்தம், நெடுங்காலமாகத் தொடரும் முரண்பாட்டைப் பொதுவெளிக்குக் கொண்டு வந்துள்ளது. இரு நாடுகளும் போரிடுதற்குக் காரணமாக அமைந்தது, நகோனோ-கரபாக் என்ற நிலப்பரப்பாகும். ஆர்மேனியாவுக்குரிய நகோனோ-கரபாக் அஸர்பைஜானாற் சூழப்பட்ட நிலப்பரப்பாகும்.