“பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி”யானது “பத்மநாபா மக்கள் முன்னணி” என்ற பெயருடன் ஒரு சமூக இயக்கமாகவும், “தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி” (S.D.P.T). என்ற பெயருடன் ஒரு அரசியல் கட்சியாகவும் மாற்றம் பெற்று இயங்கி வருகிறது. தமிழ் பேசும் மக்களின் சுதந்திரம், ஐக்கியம், தமிழ் சமூகத்தில் ஐனநாயகம், மனித உரிமைகள் ஆகியவற்றிற்காகப் போராடி மரணித்த தோழர்கள், போராளிகள், அரசியல்வாதிகள், அரசியல் சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்களுக்கான இவர்களது 27வது வருட அஞ்சலி நிகழ்வு, வெளிநாட்டுப் பிராந்திய லண்டன் கிளையினரால் கடந்த 24 ஜூன் 2017ல் லண்டனில் நடாத்தப்பட்டது.
இந்நிகழ்வில், கட்சியின் அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள், செயற்பாட்டாளர்கள், மற்றைய தமிழ்க் கட்சிகள் மற்றும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, லண்டன் தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
குத்து விளக்கேற்றல், அமரர்களானோருக்கு இரு நிமிட அஞ்சலி, தோழர் சிறாப்பின் வரவேற்புரை ஆகியவற்றுடன் ஆரம்பித்த இந்நிகழ்வில் அமரர்களாகிப்போன ஈபிஆர்எல்எவ்இன் போராளிகளினதும், செயற்பாட்டாளர்களினதும் நிழற்படங்கள், குறிப்புகள் ஆகியவற்றுடன், இம்முறை வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த மாவட்டங்கள் ரீதியாக தொகுக்கப்பட்ட, அமரர்களாகிப் போன கட்சியின் 1208 தியாகிகளைப் பற்றிய தகவல்கள் தெரிந்த அளவிற்குத் திரட்டப்பட்டு, கணனிமயமாக்கப்பட்டு மண்டபத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை, பலரது கவனத்தையும் கவர்ந்தது.
கணனித் திரையில் அவர்களது இயற்பெயர்களுடன், அவர்களது போராளிப் பெயர்களும், அவர்கள் இறந்தமைக்கான காரணமும் தரப்பட்டிருந்தன.. அவர்கள் இறந்தமைக்கான காரணமாக அனேகமானவர்களின் பெயர்களின் கீழ் ‘புலிகள்’ என்று கணனித் திரையில் விரிவதைப் பார்த்த பலருக்கு,
‘சிங்கள இராணுவத்தினால்’ அல்ல, ‘புலிகளைச் சேர்ந்த தமிழர்களாலோயே’ அனேகர் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர் என்ற உண்மையும் உறைத்தது. புலிகளின் அறம் சாராத நயவஞ்சகத்தனமே தமிழர்களின் சுதந்திரப் போராட்டம் திசை திரும்பிப் போவதற்கும், அதன் தோல்விக்கும், இலங்கையில் வாழும் தமிழ்ச்சமூகத்தின் இன்றைய இழி நிலைக்கும் அளப்பரிய இன்னல்களுக்கும் காரணம் என்பதுவும் கணனியில் விரிந்ததாகப் பார்த்தோர் பலர் குறிப்பிட்டனர். ‘இதுவரை தனக்குத் தெரியப்பட்ட தகவல்கள் 1208 பேர்களே என்றும், விடுபட்ட தியாகிகளின் தகவல்கள் தனக்குத் தரப்படின், அவற்றையும் தான் உள்ளடக்க முடியும்’ என தியாகிகளின் இப்பட்டியலைக் கணனிப்படுத்திய தோழர் ரவி கூறினார்.
இதனைத் தொடர்ந்து நடந்த வடக்கு-கிழக்கு மாகாணங்களில் தற்போது நிலவும் சமூக, பொருளாதார, அரசியல் நிலைமை பற்றி நடாத்தப்பட்ட கருத்துப் பரிமாற்றத்தில், கட்சியின் உறுப்பினர்களான தோழர்கள் திவான், பரமன் ஆகியோர், உயிர்களை அரப்பணித்த தமது தோழர்களின் தியாகங்கள் வீண் போகாது வேண்டிய அளவிற்குத் தமிழ்ச்சமூகம் செயற்படாதிருப்பது பெரும் ஆதங்கத்தைத் தருவதாகக் கூறினர்.
நிகழ்விற்கு வருகை தந்திருந்த மற்றைய கட்சிகளின் மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் ஆய்வாளர்கள், சமூகச்செயற்பாட்டாளர்கள், நலன் விரும்பிகள், தத்தம் கருத்துக்களைத் தெரிவித்தனர். வடக்கு-கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழ்ச் சமுதாயம் பல விதங்களிலும், துறைகளிலும், வாழ்வாதாரங்களைச் செப்பனிடுவதிலும் பாரிய பின்னடைவுகளைக் கொண்டுள்ளதோடு, நிலைமைகள் மேலும் மோசமாவதாகவும், அவை சம்பந்தமாக நிலைமைகளைச் சீர்செய்வதும், ஆக்கபூர்வமாகச் செயற்படுவதும், உதவிக்கரங்களை நீட்ட வேண்டியதும் அவசியமானது என்ற கருத்துக்களை வலியுறுத்தினர்.
கலந்துரையாடலைத் தொடர்ந்து, இரவு உணவுடன் நிகழ்வு நிறைவுக்கு வந்தது.