மாற்றங்கள் வருவதற்குக் காலமெடுக்கும். ஆனால், அந்த மாற்றங்களை, ஒரு சிறுபொறி தொடக்கி வைக்கும்; அது, காட்டுத் தீயாகப் பரவும்; ஆதிகார அடுக்குகளை அசைக்கும்; மக்களைச் சிந்திக்க வைக்கும். நியாயத்துக்கும் அநியாயத்துக்கும் இடையிலான பிரிகோடு, மிகத் தெளிவாக இருக்கும்.
இது, மக்களின் தெரிவை மிக இலகுவாக்கும். அவ்வாறான ஒரு சிறுபொறியே, இப்போது பற்றியுள்ளது. ஆனால், இது காட்டுத் தீயாகுமா, காணாமல்தான் போகுமா?
அமெரிக்காவில், பொலிஸ் வன்முறையால் கொல்லப்பட்ட ஜோர்ஜ் புளொய்ட்டுக்கு நீதிவேண்டி உருவாக்கம் பெற்றுள்ள, ‘கறுப்பு உயிர்களும் முக்கியம்’ என்ற போராட்டம் அமெரிக்காவைத் தாண்டி, கடந்த ஒருவாரத்தில் உலகளாவிய தன்மையைப் பெற்றுள்ளது.
இந்த உலகளாவிய போராட்டமும் அதற்கான எதிர்வினைகளும், பல முக்கியமான செய்திகளைச் சொல்கின்றன.
இன்று, கொவிட்-19 பெருந்தொற்றுப் பற்றிய செய்திகள், இரண்டாம் பட்சமானவையாக மாறிவிட்டன. இந்தப் போராட்டங்களே பேசுபொருளாகியுள்ளன. இது, இரண்டு வகையான தன்மைகளைக் கொண்டது.
- இந்தப் போராட்டங்கள், உரிமைகளுக்கான போராட்டங்களின் இன்னோர் அத்தியாயத்தை, தொடக்கி வைத்துள்ளன என்ற வகையில் முற்போக்கானவை.
- இந்தப் போராட்டத்தை, வன்முறையாகக் காட்டுவதோடு கொவிட்-19 தொற்றைக் காரணமாக்கி அரசாங்கங்கள், அளவுக்கு அதிகமான அதிகாரங்களைச் சத்தமில்லாமல் தம்வசப்படுத்துகின்றன.
இதேவேளை, கொவிட்-19 குறித்த கவனம், குறைவடைந்து உள்ளது. பெருந்தொற்று மெதுமெதுவாகக் குறைவடைந்துள்ளது என்ற மனோநிலை, உலகெங்கும் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆனால், உண்மை அதுவல்ல! இந்தப் பெருந்தொற்றுத் தொடங்கியது முதல், ஒரே நாளில் அதிகம் பேருக்கு இந்த நோய்த்தொற்று ஏற்பட்டது, இந்த ஜுன் மாதம் ஐந்தாம் திகதியாகும். அன்று, 130,500க்கும் மேற்பட்டோர் நோய்த் தொற்றுக்கு உள்ளாகினர். அதற்கு அடுத்தபடியாக, அதிகூடியளவானோர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகிய நாள்கள் முறையே ஜுன் மாதம் நான்காம் திகதியும் ஆறாம் திகதியும் ஆகும்.
ஆனால், இவை எவருடைய கவனத்தையும் பெறவில்லை. தொற்றுக்கு ஆளாகுவோர் எண்ணிக்கை மே மாதத்தின் இறுதிப் பகுதியில் குறைவடைந்திருந்தது. ஆனால், இப்போது பெருமளவில் அதிகரித்துள்ளது. இது, மிகவும் கவலைக்குரியதும் அச்சரியத்துக்கு உரியதுமான ஒரு விடயமாகும். அரசாங்கங்கள் இதை மறைக்க முயல்கின்றன.
அதேவேளை, ‘கறுப்பு உயிர்களும் முக்கியம்’ என்ற போராட்டம் பெற்றுள்ள முக்கியத்துவம், இன்றைய காலகட்டத்தில் அவசியமானது என்பதில், மாற்றுக் கருத்தில்லை. இன்று, உலகளாவிய ரீதியில் நிலவுகின்ற அசமத்துவம், புறக்கணிப்பு, வறுமை, வேலையின்மை எனப் பல்வேறுபட்ட நெருக்கடிகளின் வெளிப்பாடாகவும் இந்தப் போராட்டங்கள், உலகளாவிய தன்மையைப் பெற்றுக்கொண்ட வீரியத்தை விளங்கிக் கொள்ளவியலும்.
உலகளாவும் போராட்டங்கள்
இந்தப் போராட்டங்கள், ஜோர்ஜ் புளொய்ட்டிக்கு நீதிவேண்டுபவையாகவும் கறுப்பின மக்களின் உயிர்களை மதிக்கக் கோருபவையாகவும் மட்டும் இருக்கவில்லைளூ இவை, ஒவ்வொரு நாடுகளிலும், அந்தந்த நாடுகளின் உள்ளார்ந்தப் பிரச்சினைகளையும் உள்ளடக்கியிருந்தது.
அவ்வகையில், அவை சர்வதேசத் தன்மையை மட்டும் கொண்டவையாக மட்டும் இல்லாமல், தேசியப் பிரச்சினைகளையும் பேசுவதாக அமைகிறது. இந்தப் போராட்டங்கள் தொடர்வதற்கும் நிலைப்பதற்கும், பல்வேறு தளங்களில் ஆதரவு பெறுவதற்கும் இது காரணமாகிறது.
உதாரணமாக, ஜேர்மனியில் நடைபெற்ற போராட்டங்களில், இலட்சக்கணக்கானோர் பங்குபற்றினர். ஜேர்மனியில் 25க்கும் மேற்பட்ட நகரங்களில் போராட்டங்கள் இடம்பெற்றன. நவ-நாஜியினரையும் அவர்களின் செயற்பாடுகளையும் வன்மையாக, அப்போராட்டங்கள் கண்டித்தன. இனவெறியாலும் நிறவெறியாலும் ஜேர்மனியில் பலியானவர்கள் நினைவுகூரப்பட்டனர்.
இதேபோன்று, பிரான்ஸில் நடைபெற்ற போராட்டங்கள், அகதிகளினுடையதும் குடியேற்றவாசிகளினுடையதும் உரிமைகளைப் பாதுகாக்கக் கோரியது. குடியேற்றவாசிகளுக்கு இழைக்கப்படும் அநீதிகளைக் கண்டித்தது.
இதேபோல, பிரித்தானியாவில் பங்குபற்றியோர் ‘இனவெறி ஒரு வைரஸ்’ என்ற பதாகையை முன்னிலைப்படுத்தினர். இதேபோன்ற, போராட்டங்கள் இத்தாலி, நெதர்லாந்து, பெல்ஜியம், ஆஸ்திரியா என ஐரோப்பாவின் முக்கிய இடங்களில் நடந்தன.
ஸ்கன்டினேவிய நாடுகளும், இதற்கு விலக்கல்ல என்பதை, அந்த நாடுகளின் தலைநகரங்களில் நடந்த ஆர்ப்பாட்டங்கள் எடுத்துக்காட்டின. குறிப்பாக, நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில், சிறிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தில் 15,000 பேர் பங்குபற்றினர். இது, மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அனைத்து நாடுகளின் அரசாங்கங்களின் எதிர்வினை, இரண்டு விதமாகவே இருக்கிறது. ஒன்றில், பொலிஸ் வன்முறையையும் ஏனைய முறைகளையும் பயன்படுத்தி, இந்தப் போராட்டங்களைத் தடுத்தல்; அல்லது, கொரோனா வைரஸ் பரவும் என்று அச்சமூட்டுவதன் மூலம், போராட்டங்களைத் தடைசெய்தல், அனுமதி மறுத்தல் என்பனவாகும்.
இந்தப் போராட்டங்கள் வெறுமனே, ஜோர்ஜ் புளொய்ட்டிக்கு நீதிவேண்டியதாக மட்டும் அல்ல என்பதை, அந்தந்த அரசாங்கங்கள் நன்கு அறியும். மக்களிடையே ஏற்பட்டுள்ள வெறுப்புணர்வும் கோபமும் இயலாமையுமே இவ்வாறு வெளிப்படுகின்றது என்பதை உணர்ந்துள்ள அரசாங்கங்கள், பல்வேறு வழிகளில் இந்தப் போராட்டத்தை, நீர்த்துப் போகச் செய்யும் வேலைகளில் ஈடுபட்டிருந்தன.
இன்று, இது உலகளாவிய போராட்டமாக மாறியுள்ளது. இந்தக் கட்டுரையை எழுதும் போது, 2,500க்கும் அதிகமான நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுக் கொண்டுள்ளன. அவற்றுக்கு எதிரான பொலிஸ் வன்முறையும் அரங்கேறியுள்ளன. மய்ய நீரோட்டத்தில் உள்ள அரசியல்வாதிகளும் போராட்டக்காரர்களும் இருவேறு அந்தங்களில் நிற்கிறார்கள் என்பதை, இந்தப் போராட்டங்கள் உணர்த்தி நின்றன.
பாசிச மிரட்டலை நோக்கிய நகர்வு
இன்று அரசாங்கங்கள், இரண்டு நெருக்கடிகளை ஒருசேர எதிர்நோக்குகின்றன.
முதலாவது, கொவிட்-19 பெருந்தொற்றும் அது ஏற்படுத்தியுள்ள நெருக்கடிகளும் ஆகும்.
இரண்டாவது, இந்தப் போராட்டங்கள், மக்கள் திரட்சியையும் ஒன்றிணைவையும் சாத்தியமாக்கி, அரசாங்கங்களின் வகிபாகத்தைக் கேள்விக்கு உள்ளாக்குகின்றன.
இத்தகைய இரட்டை நெருக்கடிகளைக் கையாளுவதற்கு, அரசாங்கங்கள் மெதுமெதுவாகப் பாசிசத்தை நோக்கி நகருகின்றன; ஆனால், இது கவனம் பெறத் தவறுகிறது.
வரலாறு சொல்கிற பாடம் யாதெனில், பொதுவாக நாமறிந்த பாசிசம், ஐரோப்பிய முதலாளித்துவ நெருக்கடியால், முதலாம் உலகப் போரின் பின் தோன்றி, இரண்டாம் உலகப் போரின் முடிவு வரை, ஐரோப்பாவின் பெரும் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தி இருந்தது. பாசிசத்தை, வரலாற்று ரீதியில் ஆராய்ந்த கெயோர்கி டிமித்ரொவ், சொல்கின்ற பின்வரும் விடயங்கள் கவனத்துக்கு உரியன.
”பாசிசத்தினதும் பாசிச சர்வாதிகாரத்தினதும் விருத்தி, வரலாற்று, சமூக பொருளாதார நிலைமைகளுக்கு அமையவும் தேசியத்தின் குறிப்பான பண்புகள் சார்ந்தும், ஒரு நாட்டின் சர்வதேசத் தகைமை சார்ந்தும் வேறுவேறு நாடுகளில், வேறுவேறு வடிவங்களைப் பெறுகிறது” என்று வாதிட்டார்.
இன்று, குறிப்பாக மேற்குலகில், நவபாசிசம் மீள்உயிர்ப்புப் பெற்றுள்ளது. இரண்டாம் உலகப் போருக்கு முந்திய பாசிசத்தின் சாராம்சங்களான பிற்போக்குவாதம், இனவாதம், பேரினவாதம், இடதுசாரி-விரோதம் போன்றவற்றைப் பேணும் தன்மைகொண்ட, வலுவான பாசிசக் குணவியல்புகளைக் கொண்டதாகவே நவபாசிசவாதம் காணப்படுகின்றது. இது, இரண்டாம் உலகப் போருக்குப் பிந்திய முக்கிய நிகழ்வாகும். அதிதீவிர தேசியவாதமும் இனவாதமும் இனவுணர்வு முற்சாய்வுகளைப் பாவிப்பதோடு, தேவைக்கேற்ப ஜனரஞ்சக அரசியலிலும் இறங்குவதான போக்கு, ஐரோப்பிய நவபாசிசத்தின் முக்கிய அம்சங்களாக உள்ளன.
ஜனநாயகத் தோற்றம் காட்டும் மேற்குலக நாடுகளில், ஆழ ஊடுருவியுள்ள இனவெறியும் நிறவெறியும், பலருக்கு அதிர்ச்சியைக் கொடுக்கிறது. ஆனால், மேற்குலக சமூகங்களில் இது, எப்போதுமே இருந்துவரும் ஒன்று. பேரிடர், இனவாத நெருக்கடி போன்ற பாரிய பிரச்சினைகள் உலகைத் தாக்கும் போது, அவை வெளிப்படையாகவே தங்களை அடையாளம் காட்டுகின்றன.
அமெரிக்காவும் ட்ரம்பும் எதிர்காலமும்
ஐக்கிய அமெரிக்காவின், பெரிய பாசிச ஊற்றுக்கண், ஏகபோக முலதனத்தின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் உள்ள அரசாகும். அது, ஜனநாயகத்தினதும் சுதந்திரத்தினதும், முக்கியமாக அமெரிக்க வாழ்க்கை முறையைப் பாதுகாப்பதினதும் பெயரில், நாட்டுக்குள்ளும் வெளியிலும் ஒரு பாசிச வேலைத்திட்டத்தை முன்னெடுக்கிறது. இதைத் தொடர்ச்சியாகவே முன்னெடுத்து வந்திருக்கிறது. இதற்கான அரசியல் ஆதரவு, அரசியல் கட்சிகளின் பேதமின்றிக் கிடைத்துள்ளது.
இதன் பின்னணியில் பார்த்தால், அமெரிக்க வலதுசாரி கிறிஸ்தவ அடிப்படைவாத எழுச்சி தற்செயலானதல்ல. 1964ஆம் ஆண்டு குடியரசுக் கட்சியின் சார்பில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த, பரி கோல்ட்வோட்டரும் 2016ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் அக்கட்சியின் வேட்பாளரான டொனால்ட் ட்ரம்பும் இனவெறிப் பிறழ்வுகளல்ல. அவர்கள், அமெரிக்கச் சமூகத்தை ஊடுருவும், பிற்போக்கான வெள்ளை மேம்பாட்டுச் சித்தாந்தத்தின் பிரதிநிதிகளாவர்.
இந்தப் போராட்டங்கள், எதிர்த்திசையில் இயங்கும் ட்ரம்ப் போன்றவர்களின் அரசியல் எதிர்காலத்துக்கு வாய்ப்பாகவுள்ளன. போர்க்குணமுள்ள அதிதேசியவாத, அடிப்படைவாதக் கட்சிகள், ட்ரம்ப் போன்றவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கின்றார்கள். இது அதிதீவிர வலது, தொடர்ந்தும் ஆட்சியில் இருப்பதற்கும் தேர்தல்களில் வெற்றி பெறுவதற்குமான வாய்ப்பை வழங்கியுள்ளன. ட்ரம்பின் மீள்வருகை, இப்போதைய நிலையில் மிகவும் சாத்தியமான ஒன்றாகவே தெரிகிறது.
ஜோர்ஜ் புளொய்ட், அதிகாரத்துக்கு எதிராகக் குரல் கொடுக்கும் அனைவருக்குமான குறியீடாக இன்று மாறியுள்ளார். மாற்றங்கள் நடக்கும் என்று, பலர் எதிர்பார்க்கிறார்கள். மாற்றங்களைச் சாத்தியப்படுத்தக்கூடிய மந்திரக்கோல், யாரிடமும் இல்லை. ஆனால், போராட்டம் மட்டுமே, உரிமைகளை வெல்வதற்கான வழி என்பதை, மக்கள் உணர்ந்திருக்கிறார்கள்.
‘வறுமைதான் குற்றத்துக்கும் போராட்டத்துக்கும் ஊற்றுக்கண்’ என்றார் அரிஸ்டோட்டில். இப்போது, வறுமை குற்றமாக அல்ல; வெல்வதற்கான போராட்டமாக எம்முன்னே விரிந்துள்ளது.
நாங்கள் ஒவ்வொருவரும், ஜோர்ஜ் புளொய்ட்டே. உரிமை மறுக்கப்பட்ட தமிழனும் காஷ்மீரியும் குர்திஷ்களும் பாலஸ்தீனியனும் ஜோர்ஜ் புளொய்ட்டே.
இந்தப் போராட்டம், ஒடுக்கப்பட்டவர்களினதும் உரிமை மறுக்கப்பட்ட ஒவ்வொருவருடையதும் போராட்டம் ஆகும். அந்த உண்மை, எமக்கு விளங்க வேண்டும்.
அதிகார மய்யங்களிடத்தில் கையேந்திக் காத்திருக்கும் இழிநிலையை, நாம் நிறுத்த வேண்டுமாயின் ஒன்றிணைவோம்; போராடுவோம்; அநீதிக்கு எதிராகக் குரல் கொடுப்போம்.