இந்தியாவிடம் ஏன் தோற்றது அவுஸ்திரேலியா?

முதலாவதாக, பெரும்பாலனவர்களால் கூறப்படுவது போன்று அவுஸ்திரேலியாவின் தோல்விக்கான பிரதான காரணமொன்றாக முன்னாள் அணித்தலைவர் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வோணர் ஆகியோரை தடை காரணமாக இழந்தமை காணப்படுகிறது.

இத்தொடரின் இறுதி டெஸ்டில் மார்க்கஸ் ஹரிஸ் பெற்ற 79 ஓட்டங்களே அவுஸ்திரேலிய வீரரொருவரால் இத்தொடரில் பெறப்பட்ட அதிகூடிய ஓட்ட எண்ணிக்கை ஆகும். அந்தவகையில், கடந்த 100 ஆண்டுகளில் இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட டெஸ்ட்களைக் கொண்ட தொடரொன்றில் அவுஸ்திரேலியாவால் பெறப்பட்ட மிகக்குறைந்த அதிகூடிய ஓட்ட எண்ணிக்கை இதுவாகும்.

இது இவ்வாறிருக்க மறுபக்கமாக, செட்டேஸ்வர் புஜாராவின் மூன்று சதங்கள் உட்பட மொத்தமாக ஐந்து சதங்களை இந்தியத் துடுப்பாட்டவீரர்கள் பெற்றிருந்தார். இதுமட்டுமல்லாமல், இந்திய முதல் ஆறு துடுப்பாட்டவீரர்களின் சராசரி 37.51 ஓட்டங்களாக இருந்த நிலையில், அவுஸ்திரேலிய முதல் ஆறு துடுப்பாட்டவீரர்களின் சராசரி 27.02 ஓட்டங்களாக இருந்தது. அந்தவகையில், இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட டெஸ்ட்களைக் கொண்ட தொடர்களில் சொந்த மண்ணில் அவுஸ்திரேலியாவால் பெறப்பட்ட மூன்றாவது மோசமான சராசரி இதுவாகும்.

இந்நிலையானது, ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வோணரின் மீள்வருகைக்காக அவுஸ்திரேலியா எவ்வளவு காத்திருக்கின்றது என்பதை உணர்த்துகிறது.

இது இவ்வாறிருக்க, இந்தியாவிடம் அவுஸ்திரேலியா தோல்வியைத் தளுவியமைக்கு துடுப்பாட்டத்தை மாத்திரம் குற்றஞ்சாட்டிவிடமுடியாது. ஏனெனில், உலகின் தலைசிறந்த பந்துவீச்சு வரிசை என வர்ணிக்கப்படுகின்ற மிற்செல் ஸ்டார்க், ஜொஷ் ஹேசில்வூட், பற் கமின்ஸ் ஆகியோரை அவர்களது சொந்த மண்ணிலேயே இந்திய அணியின் ஜஸ்பிரிட் பும்ரா, மொஹமட் ஷமி, இஷாந்த் ஷர்மா ஆகியோரை உள்ளடக்கிய பந்துவீச்சு வரிசை மேம்பட்டிருந்தது.

அவுஸ்திரேலிய அணியின் விக்கெட்டுகளைக் கைப்பற்றும் பிரதான ஆயுதமாக அண்மைய காலங்களில் காணப்பட்டிருந்த மிற்செல் ஸ்டார்க், 34.53 ஓட்டங்களுக்கே சராசரியாக ஒரு விக்கெட்டைக் கைப்பற்றி, சொந்த மண்ணில் இடம்பெற்ற டெஸ்ட் தொடரொன்றில் தனது மூன்றாவது மோசமான சராசரியைப் பதிவுசெய்துகொண்டார். மோசமாகச் செயற்படுவதில், ஸ்டார்க்கும் சற்றும் சளைத்தவரல்ல போன்று செயற்பட்ட ஹேசில்வூட், 30.61 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட் என்ற சராசரியிலேயே விக்கெட்டுகளைக் கைப்பற்றி சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரொன்றில் தனது இரண்டாவது மோசமான சராசரியைப் பெற்றிருந்தார்.

ஒன்று தொடக்கம் 20 ஓவர்கள் வரையிலான புதிய பந்தியில் அவுஸ்திரேலிய அணி ஓரளவு சிறப்பாகச் செயற்பட்டிருந்தபோதும் 41 தொடக்கம் 80 ஓவர்கள் வரையான காலப்பகுதியில் மிக மோசமாகச் செயற்பட்டிருந்தது. இதேநேரத்தில் குறித்த பகுதியில் இந்திய அணி மிக அபாரமாக பந்துவீசியிருந்தது.

அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சாளர்கள், ஓவ் ஸ்டம்புக்கு வெளியே பந்துவீசி, விக்கெட்டுகளுக்கு பின்னால் வருகின்ற பிடியெடுப்புகள் மூலம் துடுப்பாட்டவீரர்களை ஆட்டமிழக்கச் செய்யலாம் என்ற ஒரே உத்தியையே தொடர் முழுவதும் கையாண்டிருந்தனர். எனினும், ஓவ் ஸ்டம்புக்கு வெளியேயான பந்துகளை தொடர்ச்சியாக விளையாடாமல் விட்ட இந்திய அணியின் மூன்றாமிலக்கத் துடுப்பாட்டவீரர் புஜாரா, வழமையாக வேகமாக ஓட்டங்களைப் பெறுகின்றபோதும் இத்தொடர் முழுவதும் மிகவும் அவதானமாக துடுப்பெடுத்தாடிய இந்திய அணியின் தலைவர் விராக் கோலி ஆகியோரால் அவர்களின் உத்தி எடுபடால் போயிருந்தது.

இந்நிலையில், அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகளை நோக்கி குறைவாகவே பந்துவீசியிருந்த நிலையில், மறுபக்கமாக விக்கெட்டுகளை நோக்கி பந்துவீசும் உத்தியையும் பாவித்திருந்த இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள், அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளர்களை விட அதிகமாக விக்கெட்டுகளை நோக்கி பந்துவீசி, 12 போல்ட், எட்டு எல்.பி.டபிள்யூ உள்ளடங்கலாக 20 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தனர். அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் ஆறு தடவைகள் போல்ட் முறையில் மாத்திரம் விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தனர்.

இவ்வாறாக பெறுபேறுகள் தொடர்பான காரணங்களிருக்க அவுஸ்திரேலியாவின் துரதிர்ஷடமும் இந்தியாவின் அதிர்ஷ்டமும் தொடரின் முடிவில் ஓரளவுக்கு செல்வாக்கு செலுத்தியிருந்தன. அண்மைய காலங்களில் இடம்பெறும் போட்டிகளில் முக்கியமானதாக காணப்படும் நாணயச் சுழற்சி இத்தொடரிலும் தாக்கம் செலுத்தியிருந்தது. இத்தொடரில் தாம் வென்ற இரண்டு போட்டிகளிலும் தாம் முன்னிலையிலிருந்து மழையால் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்த நான்காவது டெஸ்டிலும் இந்திய அணியே நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில், ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வோணரின் பிரசன்னமின்மையைத் தவிர, அவுஸ்திரேலியாவின் வேகப்பந்துவீச்சாளர்களை இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் மேம்பட்டதும் இத்தொடரில் இந்தியாவிடம் அவுஸ்திரேலியா தோற்றதற்கு காரணமாய் அமைகிறது.