ஒரு காலத்தில் அது செய்தார்கள், இது செய்தார்கள் என்று குற்றம் சாட்டுவதாக இருந்தால், நாங்கள் விடுதலைப் புலிகளையும் ஆதரிக்க முடியாது. ஒரு காலத்தில் அவர்கள் தான் மகிந்தவை ஆட்சியில் அமர்த்துவதற்கு உதவியாக தேர்தலை பகிஷ்கரித்தார்கள். அதற்காக, மகிந்த புலிகளுக்கு கோடிக்கணக்கான பணம் கொடுத்ததாக, மங்கள சமரவீர தெரிவித்திருந்தார்.
“ஒருகாலத்தில் அது செய்தார்கள், இது செய்தார்கள்” என்பது குற்றம், குறை கண்டுபிடிப்பவர்களின் தொழில். அது ஆரோக்கியமான அரசியல் அல்ல. தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங்கிரஸ், கூட்டணி, கூட்டமைப்பு ஆகிய கட்சிகளும் குறிப்பிட்ட சில காலங்கள் சிங்கள அரசை ஆதரித்து வந்துள்ளன.
இந்திய இராணுவத்துடன் யுத்தம் நடந்த காலத்தில், புலிகள் பிரேமதாச அரசுடன் ஒத்துழைத்து, தென்னிலங்கையில் புகலிடம் பெற்றனர். சிங்கள இராணுவத்திடம் இருந்து ஆயுதங்களை பெற்றுக் கொண்டனர்.
புலிகளின் சரி, பிழைகளுக்கு அப்பால் அவர்கள் தமிழர்களின் உரிமைப் போராட்டத்திற்கு வழங்கிய பங்களிப்பை யாரும் குறைத்து மதிப்பிடுவதில்லை. அதே மாதிரியான கோணத்தில் இருந்து தான் முன்னிலை சோஷலிசக் கட்சியை நாங்கள் பார்க்கவேண்டும். புலிகள் அல்ல, அவர்களை ஆதரித்த மக்கள் தான் முக்கியம். அதே மாதிரி மு.சோ.கட்சிக்கு பின்னால் உள்ள மக்கள் தான் முக்கியம்.
மு.சோ.க., ஜேவிபி இல் இருந்து பிரிந்த கட்சி என்ற உண்மையை மறைத்துக் கொண்டு பேசுவது ஒரு திரிபுபடுத்தல். அவர்கள் ஜேவிபி இல் இருந்த காலத்தில், அது வலதுசாரிக் கட்சியாக தான் இருந்தது. அதிருப்தியடைந்து, விமர்சனங்களை வைத்து பிரிந்து சென்றவர்களின் இது புதிய கட்சி என்பதால் இப்போதும் இடதுசாரிகளாக இருக்கிறார்கள்.
ஒரு வலதுசாரிக் கட்சியானது, மகிந்த அரசை மட்டுமல்ல, ஒபாமா அரசையும் ஆதரிக்கும். ஜேவிபி வலதுசாரிப் பாதையில் சென்று மகிந்த அரசை ஆதரித்த நேரம், அதை எதிர்த்து பிரிந்து சென்றவர்கள் தான், பின்னர் முன்னிலை சோஷலிசக் கட்சி என்ற பெயரில் இயங்கத் தொடங்கினார்கள். அது குறித்த சுயவிமர்சனங்களையும் வைத்துள்ளனர்.
போர் முடிந்த சில வருடங்களிலேயே, கூட்டமைப்பு சரத்பொன்சேகாவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த போதும், தற்போது மைத்திரி அரசை ஆதரிக்கும் போதும் கண்டுகொள்ளாதவர்கள், மு.சோ.கட்சியை விமர்சிப்பதற்கு அருகதை அற்றவர்கள்.
“இனவாதம் பேசி மகிந்தவை ஆட்சியில் அமர்த்தி மாபெரும் மனிதப் பேரவலத்திற்கு வழிகோலியவர்கள் கட்சி மாறியதும் புனிதர்களாகி விட்டார்களா?” என்று முன்னிலை சோஷலிசக் கட்சிக்கு எதிராக குற்றப் பத்திரிகை வாசிப்பது, சிறிலங்கா அரசின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு அமைவாகவே நடக்கிறது. சிங்கள மக்களும், தமிழ் மக்களும் எந்தக் காலத்திலும் சேர விடாமல் தடுத்து, அவர்களுக்கு இடையில் பகைமையை வளர்க்கும் உள்நோக்கம் கொண்டது.
(Tharmalingam Kalaiyarasan)