ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் மூலம், போர்க் காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமைகள் மீறல்கள், போர்க் குற்றங்களை விசாரிக்க, அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால், அந்தந்த நாடுகளிலேயே சட்ட நடவடிக்கை எடுக்குமாறு, பேரவையின் உறுப்பு நாடுகள் கேட்டுக் கொள்ளப்பட்டன.
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை மூலம், இலங்கை அரசாங்கம், சிறுபான்மையினருக்கு எதிராகப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை பாவிப்பது போன்ற, மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதை நிறுத்தாவிட்டால், இலங்கைக்கு வழங்கப்படும் ஜீ.எஸ்.பி வரிச் சலுகையை வாபஸ் பெற வேண்டும் என, ஐரோப்பிய ஆணைக்குழுவுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
ஜீ.எஸ்.பி சலுகையானது, இலங்கை போன்ற அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு, ஐரோப்பிய ஒன்றியம் வழங்கும் வரிச் சலுகையாகும். இதன் கீழ், மனித உரிமைகள், தொழிலாளர் உரிமைகள், சுற்றாடலைப் பாதுகாத்தல், நல்லாட்சி ஆகிய விடயங்கள் தொடர்பான, 27 சர்வதேச ஒப்பந்தங்களை அமல்செய்யும் நாடுகள் ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் வரி அறவிடமாட்டாது.
ஆனால், குறிப்பிட்ட அபிவிருத்தி அடைந்து வரும் நாடு, மேல் மத்திய மட்டத்துக்கு, குறைந்த வருமானம் பெறும் நாடு (income level below ‘upper middle income’) என்று, உலக வங்கி வகைப்படுத்தியிருக்க வேண்டும்.
அத்தோடு, சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் போன்ற ஏனைய திட்டமொன்றின் மூலம், ஐரோப்பிய நாடுகளிடமிருந்து, வேறு சலுகைகளைப் பெறாத நாடாகவும் இருக்க வேண்டும்.
இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் சுமார் 7,000 பொருட்களுக்கு, ‘ஜீ.எஸ்.பி பிளஸ்’ திட்டத்தின் கீழ், பூரண வரிச் சலுகை வழங்கப்படுகிறது. வருடத்துக்கு 2.3 பில்லியன் யூரோ (552 பில்லியன் ரூபாய்) பெறுமதியான பொருட்களை, ஐரோப்பாவுக்கு இலங்கை ஏற்றுமதி செய்கிறது. இதன் மூலம், இலங்கையின் இரண்டாவது பெரும் ஏற்றுமதிச் சந்தையாக ஐரோப்பா இருக்கிறது.
இலங்கை அரசின் வருடாந்த வருமானம், 1,400 பில்லியன் ரூபாயாக இருப்பதால், இந்த ஏற்றுமதி வருமானம் நாட்டுக்கு எவ்வளவு முக்கியமானது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகையை இழப்பதால், இந்த மொத்த வருமானத்தையும் நாடு இழக்கப் போவதில்லை. ஆனால், அந்தச் சலுகையுடன் வங்காளதேசம், இந்தியா, வியட்நாம், பாகிஸ்தான் போன்ற நாடுகள் ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களின் விலை, இலங்கை பொருட்களின் விலையைவிட, ஐரோப்பிய சந்தையில் குறைந்து காணப்படுவதால், இலங்கைப் பொருட்களுக்கான கிராக்கி, வெகுவாகக் குறைந்துவிடும். அதன் மூலம், நாடு பெருமளவில் ஏற்றுமதி வருமானத்தை இழக்க நேரிடும். விற்பனையின் மூலம் வருமானத்தைப் பெற்றாலும், அந்த வருமானத்தால் வரியைச் செலுத்த வேண்டி வரும்.
இந்தப் பிரேரணையானது, இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரத்தின் காரணமாக, இலங்கைக்கு எதிராக, சர்வதேச சமூகம் இந்த வருடம் நிறைவேற்றிய இரண்டாவது பிரேரணையாகும்.
முதலாவது பிரேரணை, கடந்த மாரச் மாதம், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இலங்கையில், போர்க் காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமைகள் மீறல்கள், போர் குற்றங்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள, இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால், குற்றஞ்சாட்டப்பட்ட நபர்கள், நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு எதிராக, பொருளாதாரம் மற்றும் பயணத் தடைகளை விதிக்க வேண்டும் என்றும், சந்தேக நபர்களுக்கு எதிராகத் தத்தமது நாடுகளில் வழக்குத் தாக்கல் செய்யலாம் என்றும் அந்தப் பிரேரணையின் மூலம் கூறப்பட்டது.
ஆயினும், இலங்கை அரசாங்கம் அதனை பொருட்படுத்தவில்லை. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ், கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டு இருக்கும் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, கவிஞர் அஹ்னாஸ் ஜஸீம் போன்றவர்கள் இன்னமும் வழக்கு விசாரணையின்றி தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
போர்க் காலத்தில் கைது செய்யப்பட்டவர்களும், இன்னமும் தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர். தீவிரவாதத்தைப் பரப்புவதாகச் சந்தேகிக்கப்படுவோரைக் கைது செய்து, வழக்கு விசாரணையின்றி, மறுவாழ்வு நிலையங்களில் தடுத்து வைக்க, சட்ட விதிகளை அறிவித்து, கடந்த மார்ச் மாதம், வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது. அதுவும் இன்னமும் அமலில் உள்ளது.
இந்த, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பிரேரணை, மேற்படி வர்த்தமானி அறிவித்தல், இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பான வேறு சில அறிக்கைகள் ஆகியவற்றையும் நியாயமற்ற தடுத்து வைத்தல் சம்பவங்களையும் சுட்டிக் காட்டியே, ஐரோப்பிய நாடாளுமன்றம் கடந்த 10 திகதியிடப்பட்ட பிரேரணையை நிறைவேற்ற இருக்கிறது.
அத்தோடு, ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைகளைப் பெறும் நாடுகளைப் பற்றிய, ஐரோப்பிய ஆணைக்குழுவின் விசாரணைகளின் முடிவுகளும் இந்தப் பிரேரணைக்குக் காரணமாக அமைந்துள்ளன.
பிரேரணையை அடுத்து, நாட்டில் மனித உரிமைகள் நிலைவரத்தைச் சீராக்குவதற்கு, இலங்கை அரசாங்கத்துக்கு கால அவகாசம் வழங்கப்படும். ஆனால், ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் நிபந்தனைகளை, அரசாங்கம் ஏற்றுக் கொள்ளும் என்று எதிர்ப்பார்க்க முடியாது.
“வரிச் சலுகைகளுக்காக, நாட்டைக் காட்டிக் கொடுக்க முடியாது” என்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நெருங்கிய சகாவான இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால், திங்கட்கிழமை (14) கூறியதன் மூலம், அது தெரிய வருகிறது.
இரண்டாவது முறையாக, இலங்கை ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைகளை இழக்கப் போகிறது. இன்று போலவே, இலங்கை அரசாங்கம் மனித உரிமைகளை மதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டின் பேரில், 2010ஆம் ஆண்டும் ஐரோப்பிய ஒன்றியம், இலங்கைக்கான ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைகளை இரத்துச் செய்தது.
அதன் பின்னர், அச்சலுகைகளை வழங்குவதற்காக மனித உரிமைகள் தொடர்பான 15 நிபந்தனைகளை விதித்தது. அவசரகாலச் சட்டத்தை பூரணமாக நீக்குவது, ஊடக சுதந்திரத்தைப் பாதுகாப்பது போன்ற ஜனநாயகத்துக்கான தேவைகள் அவற்றின் மூலம் எடுத்துரைக்கப்பட்டு இருந்தன.
இன்று போலவே அன்றும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம், அந்நிபந்தனைகள் மூலம், நாட்டின் இறைமை பாதிக்கப்படுவதாகக் கூறி, அவற்றை நிராகரித்தது.
அதன் பின்னர், 2015ஆம் ஆண்டு பதவிக்கு வந்த ஐ.தே.க தலைமையிலான அரசாங்கம், அரசியலமைப்பின் 19 ஆம் திருத்தத்தின் மூலம், நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைப்பதற்காக அரசியலமைப்புச் சபையையும் சுயாதீன ஆணைக்குழுக்களையும் நிறுவியது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு பதிலாக, சர்வதேச சட்டங்களுக்கு அமைய பயங்கரவாதத்துக்கு எதிரான புதிய சட்டமொன்றைக் கொண்டுவர நடவடிக்கை எடுத்தது; ஐ.நா மனித உரிமைகள் பேரவையுடன் ஒத்துழைத்தது.
இவற்றின் காரணமாக, 2017ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதி, இலங்கைக்கு மீண்டும் ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைகள் வழங்கப்பட்டன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையிலான அரசாங்கம், 20ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம், அரசியலமைப்புச் சபையை இரத்துச் செய்து, சுயாதீன ஆணைக்குழுக்களை, ஜனாதிபதியின் அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்தது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை தொடர்ந்தும் நடைமுறையில் வைத்திருக்கப் போகிறது.
முன்னைய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட நல்லாட்சிமுறை நடவடிக்கைகளுக்கு முரணாக, தற்போதைய அரசாங்கம் செயற்படுவதாக சர்வதேச மனித உரிமைகள் ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இந்தப் பின்னணியிலேயே, கடந்த 10ஆம் திகதி, ஐரோப்பிய நாடாளுமன்றம் இந்தப் பிரேரணையை நிறைவேற்றியுள்ளது.
பயங்கரவாதம் தொடர்பாகச் சந்தேகிக்கப்படுவோரைக் கைது செய்வதை எவரும் எதிர்க்கவில்லை. ஆனால், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவோர், குற்றச்சாட்டுகள் இன்றியும் நீதிமன்றங்களின் முன்நிறுத்தப்படாமலும் தடுத்து வைக்கப்பட்டு இருப்பதையே சர்வதேச சமூகம் எதிர்க்கிறது. இதை நாட்டின் எதிர்க்கட்சிகளும் விமர்சிக்கின்றன.
இதை அரசாங்கம் தவிர்க்க முடியும். அதனால், நாட்டில் இறைமை எவ்வகையிலும் பாதிக்கப்படாது. எனவே, சற்றுச் சிந்தித்தால் ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைகளைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். அதை விடுத்து, தமது வாக்கு வங்கியைத் திருப்திப்படுத்த, அரசாங்கம் கோடிக் கணக்கான நட்டத்தை அடையப் போகிறது.
அரசாங்கம், ஜீ.எஸ்.பி சலுகைகளைப் பெறுவதற்காக, 27 சர்வதேச ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளது. அவற்றை முறையாக அமுலாக்குவதிலேயே, அரசாங்கத்துக்கும் சர்வதேச சமூகத்துக்கும் இடையே முரண்பாடுகள் எழுந்துள்ளன.
அவற்றை அமலாக்குவதன் மூலம், நாட்டின் இறைமை பாதிக்கப்படுமேயானால், அந்த ஒப்பந்தங்களிலிருந்து முற்றாக வெளியேற வேண்டும்.