இலங்கை ஜனாதிபதித் தேர்தல்

இலங்கையின் பொருளாதார மீட்சி என்பது முன்னிலைக்கு வந்து இலங்கையில் வாழும் ஏனைய தேசிய சிறுபான்மை இனங்களின் அரசியல் பிரச்சனை என்பது இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்ட நிலையில் இந்த தேர்தல் நடைபெறுகின்றது.

ஆனாலும் இலங்கை பல தேசி இனங்களும் சேர்ந்து வாழும் மதச் சார்பு அற்ற இனச் சார்பு அற்ற மொழிச் சார்பு அற்ற நாடு என்ற நிலையில் இருந்து தன்னை ஓரளவிற்காகவேனும் இன்னும் விடுபட்டுக் கொண்டிருக்கவில்லை என்றாலும் இன்று ஏற்பட்டிருக்கும் இலங்கை போன்ற மூன்றாம் உலக நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார சரிவுகள் இங்கும் பொருளாதாரத்தை முன்னிறுத்தியதான விடயம் தேர்தலில் மேலோங்கி நிற்பதாக உணர முடிகின்றது.

1970 களில் இலங்கையில் நடைபெற்ற ஜனதா விமுக்தி பெரமுன இன் கிளர்ச்சியும் அண்மையில் நடைபெற்ற அரகலய கிளர்ச்சியும் இந்த பொருளாதார வீழ்சிகளினால் மக்களின் வாழ்வியலை அதிகம் நேரடியாக பாதிக்கப்பட நிலைகளில் உருவான தேர்தல் காலங்கள் தான்.

ஆனால் அன்று ஜனாதிபதி தேர்தல் என்பதாக இல்லாது பாராளுமன்றத் தேர்தலாக இருந்தது

இந்த இரு கால கட்டங்களிலும் இலங்கை மக்கள் எல்லோரும் ஒரே வகையான தாக்கத்திற்குள் உள்ளாகி இருந்ததன் அடிப்படையில் தமது வாக்குகளை செலுத்த முற்பட்டனர்

இன்றைய தேர்தலில் ஒரு முக்கிய விடயம் இலங்கையின் முது பெரும் கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சியும் சிறிலங்கா சுதந்திர கட்சியும் தமது பெயர்களில் நேரடியாக போட்டி இடவில்லை.

கூடவே அன்று போலல்லாது பிரதான நீரொட்டத்தில் உள்ள வேட்பாளர்கள் ஒரு ஐக்கிய முன்னணியை அமைத்தே தேர்தலில் களம் காணுகின்றனர்.

மேலும் இரு சிறுபான்மை தேசிய இனங்கள் தமக்காக பிரச்சனைகளை அடையாளங்களை முன ;நிறுத்துவதற்காக பொது வேட்பாளர் என்று அடையாளப்படுத்தியும் தேர்தலில் நிற்கின்றனர்
தேர்தலில் பொருளாதாரப் பிரச்சனை முன்னிலை அடைந்திருப்பது என்பது ஒரு வகையில் ஒரு சிந்தாந்த மாற்றத்திற்கான சிந்தனையின் வெளிப்பாடாக பார்க்க முடியும்.

திறந்த பொருளாதாரம் என்றான இறக்குமதிப் பொருளாதாரமா…? அல்லது சுய சார்ப்புப் பொருளாதாரமா…?

வலதுசாரித்தனத்தில் இருந்து இடதுசாரிக் கருத்தியலை முன்னிலைப்படுத்தி அதற்கான பொருளாதாரக் கட்டுமானங்களை நோக்கிய நகர்வுதான் இந்த பொருளாதாரப் பிரச்சனைக்காக நீண்ட காலத் தீர்வு என்பதாக உணரப்படும் சூழலில்….

தங்கியிருக்கும் கடன் வாங்கி இறக்குமதி செய்யும் பொருளாதாரத்தில் இருந்து சுய சார்புப் பொருளாதாரம் உள்ளுர் உற்பத்திகளைப் பெருக்குதல் ஏற்றுமதிப் பொருளாதாரம் என்பதாக செயற்பட முற்படும் பொருளாதார மாற்றத்திற்கான கருத்தியல் இங்கு மேலோங்கி இருக்கின்றன.

இது பற்றி இனி வரும் பதிவுகளில் விரிவாக பேசுவோம்…