தொடர்ச்சியாக இரண்டு தடவைகள், ஆட்சியில் அமர்ந்திருந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், இம்முறை ஆட்சியை இழந்திருக்கின்றது. முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் மறைவை அடுத்து, கட்சிக்குள் ஏற்பட்ட குழப்பங்கள், பிளவுகளைத் தாண்டி, அ.தி.மு.க தன்னுடைய வாக்கு வங்கியை, பாரிய வீழ்ச்சிகள் ஏதுமின்றித் தக்க வைத்துள்ளது.
இதன்மூலம், தமிழக அரசியல் களம் என்பது, மீண்டும் தி.மு.க எதிர் அ.தி.மு.க என்கிற நிலைக்குள் பேணப்பட்டு இருக்கின்றது. ஏனெனில், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர், அ.தி.மு.க பல துண்டுகளாக உடைந்துவிடும், ஆளும் பாரதிய ஜனதாக் கட்சிக்குள் கரைந்துவிடும் என்கிற எதிர்பார்ப்புகள் எல்லாம் வெளியிடப்பட்டன.
தமிழக சட்ட மன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், இந்தப் பத்தியில், தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இரு கட்சிகளினதும் வெற்றி, தோல்விகளுக்கான காரணங்களை ஆராயும் எண்ணம் இல்லை. மாறாக, தமிழகத்தின் பிரதான இரு கட்சிகளையும் தாண்டி, புலம்பெயர் தமிழர்களிடம் தலையை நீட்டிக் கொண்டிருக்கும் ‘நாம் தமிழர் இயக்கம்’ பற்றிப் பேசவே விளைகின்றது.
நாம் தமிழர் இயக்கத்தை சீமான் ஆரம்பித்த காலம் முதல், தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை முன்னிறுத்திய, தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுப்பதான காட்சிகளை அவர் அரங்கேற்றி வருகிறார். அதுதான், ஆரம்ப நாள்களில் அவருக்கான அத்திவாரத்தைப் போடுவதற்கும் உதவியது.
குறிப்பாக, புலம்பெயர் தேசங்களில் இருந்து, நிதி ஆதாரங்களைப் பெறுவதற்கு உதவியது. நாம் தமிழருக்கும், சீமானுக்கும் நிதியளிக்கும் மூலங்களில், இன்றைக்கும் புலம்பெயர் தமிழர்களே முதலிடத்தில் இருக்கிறார்கள்.
நடந்து முடிந்த தேர்தலில் சுமார் 30 இலட்சம் வாக்குகளை, நாம் தமிழர் இயக்கம் பெற்றிருக்கின்றது. அது, மொத்த வாக்குகளில் 6.6 சதவீதமாகும். இதன்மூலம் தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக, நாம் தமிழர் அமைப்பு தன்னை முன்னிறுத்துகின்றது.
இலங்கையில் உள்ளது போல விகிதாசாரத் தேர்தல் முறைமை இந்தியாவில் இருந்திருந்தால், பத்து, பன்னிரண்டு ஆசனங்களை வெற்றிகொள்வதற்கான வாக்கு சதவீதத்தை நாம் தமிழர் கொண்டிருக்கின்றது. ஆனால், இந்தியாவில் நடைமுறையில் உள்ளது, தொகுதிவாரித் தேர்தல் முறை ஆகும். அங்கு, கூட்டணிகளில் பங்களிக்காமல் நாம் தமிழர் வெல்ல வேண்டுமானால், ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்தது 35 சதவீதத்துக்கும் குறையாத வாக்குளைப் பெற்றாக வேண்டும்.
மொத்தமுள்ள 234 தொகுதிகளிலும் போட்டியிட்டிருக்கின்ற ‘நாம் தமிழர்,’ ஒவ்வொரு தொகுதியிலும் சராசரியாக 12,800 வாக்குகளைப் பெற்றிருக்கின்றது. ஒவ்வொரு தொகுதியிலும் பருமட்டாக 275,000 வாக்குகள் காணப்படும் நிலையில், பல முனைப் போட்டி காணப்பட்டாலும், வெற்றிக்கான வாக்குகள் என்பது கிட்டத்தட்ட 80,000க்கு அண்மித்தாக இருக்க வேண்டியிருக்கும்.
பிரதான இரு கட்சிகளும் 85 சதவீதமான வாக்குகளைத் தங்களுக்குள் பங்கிட்டுக் கொண்ட பின்னர், மீதமுள்ள 15 சதவீத வாக்குகளில், 6.6 சதவீதத்தைப் பெற்றுக்கொண்டு, மூன்றாவது இடம் என்கிற நிலை குறித்துப் பெருமிதம் கொள்வது, அவ்வளவு முக்கியமான ஒரு காரியமல்ல.
சீமானுக்கும் நாம் தமிழர் இயக்கத்துக்கும் அரசியலில் என்ன நிலை எடுப்பது, எப்படி இயக்குவது என்றெல்லாம் போதிப்பது இந்தப் பத்தியின் நோக்கமில்லை. ஆனால், சீமானும் நாம் தமிழர் இயக்கமும் முன்னெடுக்கும் அரசியலால், இலங்கை தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள், இராஜதந்திரப் பின்னடைவுகள் குறித்து அவதானம் கொள்வது தவிர்க்க முடியாதது.
இலங்கை தமிழர்களைப் பொறுத்தவரையில், விரும்பியோ விரும்பாமலோ, இந்திய மத்திய அரசாங்கத்தோடும், தமிழக அரசாங்கத்தோடும் இணக்கமாகச் செயற்பட வேண்டியிருக்கும். மத்தியிலும் மாநிலத்திலும் எந்தக் கட்சி ஆண்டாலும், அவர்களோடு அந்த உறவைப் பேணியாக வேண்டும்.
ஆனால், அவ்வாறான நிலை சுமூகமாகப் பேணப்படுவதை, இந்தியாவிலும் சரி, இலங்கையிலும் சரி, அக – புற சக்திகள் பெரியளவில் அனுமதிப்பதில்லை. அதனால், தொடர்ச்சியாகப் பின்னடைவை இலங்கை தமிழர்கள் சந்தித்து வந்திருக்கிறார்கள்.
தனிப்பட்ட அரசியல், கொள்கை நிலைப்பாடுகள் சார்ந்து, இந்தியாவை ஆளும் கட்சிகள் மீது ஆதரவு, எதிர்ப்பு மனநிலை இருக்கலாம். ஆனால், அதனை ஓர் இராஜதந்திக் கட்டத்தில் முன்னிறுத்தி செயற்பட முடியாது. மத்தியை நரேந்திர மோடி ஆண்டாலும், நாளை ராகுல் காந்தி ஆண்டாலும், அவர்களுடனான உறவைப் பேணியாக வேண்டும். அதுபோலவே, தமிழகத்திலும் ஆட்சியில் தி.மு.க இருந்தாலும் அ.தி.மு.க இருந்தாலும், அந்த உறவைப் பேணியாக வேண்டும்.
மாறாக, ஆயுதப் போராட்ட இயக்கங்கள் இந்தியாவில் பயிற்சி பெற்ற காலங்களில், ஒரு கட்சிக்கு இணக்கமாகச் செயற்பட்ட இயக்கமொன்று, இன்னொரு கட்சியைத் தூர நிறுத்திப் பயணித்த வரலாற்றை, இலங்கை தமிழர்கள் மீண்டும் தொடர முடியாது.
ஏனெனில், அவ்வாறான நிலை, ஆயுதப் போராட்ட இயக்கங்களின் வளர்ச்சிக்கு உதவியதைக் காட்டிலும், வீழ்ச்சிக்கே துணை போயின. அத்தோடு, இப்போது இலங்கை தமிழர்கள் போராட்டத்தை, அஹிம்சை வழிக்குள் மட்டுப்படுத்திக் கொண்ட பின்னர், கட்சிகள் ரீதியாகப் பிரிவதோ, ஆட்சிகள் ரீதியாகத் துருவ மயப்படுவதோ நிகழ முடியாது. அது, இராஜதந்திர ரீதியில் பாரிய பின்னடைவுகளைத் தரும்.
தி.மு.க அணியினருக்கும் இலங்கை தமிழர்களுக்கும் இடையிலான உறவு என்பது, என்றைக்கும் இல்லாதளவுக்கு படுமோசமாகவே கடந்த பத்து ஆண்டுகளில் இருந்திருக்கின்றது. அதற்கு, சீமானை முன்னிறுத்திய புலம்பெயர் தரப்புகளின், தூர நோக்கற்ற நடவடிக்கைகள் காரணமாகும்.
முள்ளிவாய்க்கால் இறுதி நாள்களில், தமிழக முதலமைச்சராக இருந்த கலைஞர் மு.கருணாநிதி நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் தொடர்பில் பெரும் விமர்சனங்கள் உண்டு. அந்த உண்ணாவிரதப் போராட்டம் முடித்துக் கொள்ளப்பட்ட போது, கலைஞரால் வெளிப்படுத்தப்பட்ட போர் நிறுத்தம் பற்றிய அறிவித்தல் எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாதவை.
ஆனால், அவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிர்வினையாற்றுகிறோம் என்கிற நிலையை எடுத்து, எதிர்காலங்களைப் பற்றிச் சிந்திக்காது, படுவீழ்ச்சியான கட்டத்தை நோக்கி, இலங்கை தமிழர்களின் ஒரு பகுதியினர் நகர்ந்தார்கள். அவர்களைத் தான், சீமான் தனக்கான கொடையாளர்கள் ஆக்கினார்.
சீமான் முன்வைக்கும் தமிழ்த் தேசிய அரசியலுக்கும், இலங்கையில் தமிழ்த் தேசிய அரசியலுக்கும் பாரிய வேறுபாடுகள் உண்டு. தலைவர் பிரபாகரன், எந்தவொரு தருணத்திலும் இன்னொரு சமூகத்தை எதிரிகளாகக் கருதியதில்லை. மாறாக, பேரினவாத சிந்தனையையும் அதன் இயந்திரத்தையும் எதிர்த்துப் போரிட்டார்.
ஆனால், பிரபாகரனைத் தன்னுடைய முன்னோடியாக ஒரு கட்டம் வரையில் முன்னிறுத்திய சீமான், “நான் ஈழத்தில் ஆயுதப் போராட்டத்தை நடத்தியிருந்தால், சிங்களப் பெண்களை வன்புணர உத்தரவிட்டிருப்பேன்” என்று பல்லாயிரம் மக்கள் கூடியிருக்கும் மேடையில் பேசியிருக்கிறார்.
அடிப்படையில் சீமானின் முன்னோடி ஹிட்லர், முசோலினி போன்றவர்கள். அவர்கள், தங்களது காலத்தில், மனித குலத்துக்கு எதிரான அடிப்படைவாதத்தை விதைத்தவர்கள். அவர்களை ஒத்த சிந்தனைகளை விதைப்பதை, சீமான் தொடர்ந்துவருகிறார்.
ஒரு ஜனநாயகக் கட்டமைப்புள்ள அரசியல் கட்சியோ, இயக்கமோ அடிப்படையில் தொண்டர்கள், ஆதரவாளர்களின் கேள்விகளுக்குப் பதில் வழங்கும் தன்மையோடு இருக்க வேண்டும். ஆனால், சீமானிடம் யாரும் கேள்வி கேட்க முடியாது. கட்சியின் முடிவுகள் அனைத்தும் தன்னுடைய ஏக அதிகாரம் சம்பந்தப்பட்டது என்பதுதான் சீமானின் நிலைப்பாடு. இந்த நிலைப்பாட்டோடு, ஓர் அமைப்பு மேலெழுவது என்பது சர்வாதிகார தோரணையிலானது. அங்கு கேள்விகளுக்கு இடமில்லை; கேள்விகள் இல்லாத அமைப்பு, ஜனநாயகத்துக்கு விரோதமானது.
அத்தோடு, ஒரு கட்டம் வரையில் தலைவர் பிரபாகரனைத் தன்னுடைய வளர்ச்சிக்காக முன்னிறுத்திய சீமான், இன்றைக்கு பிரபாகரனைத் தாண்டிய ஒருவராகத் தன்னை முன்னிறுத்த முனைகிறார்.
புலம்பெயர் தமிழர்கள், முதலில் தங்களது ஆதரவையும் நிதிப்பங்களிப்பையும் எங்கு கொட்டுகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அதனால், ஏற்படும் நன்மைகள் குறித்துச் சிந்திக்க வேண்டும். நன்மைகள் ஏற்படவில்லை என்றாலும் பரவாயில்லை, தீமைகள் ஏற்படவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
ஆனால், சீமானைக் கொண்டு சுமப்பவர்களோ விஷச்செடிக்கு தண்ணீருற்றிக் கொண்டிருக்கிறார்கள். அந்தச் செடி வீசிய விஷத்தின் எதிர்வினைகளை, ஈழத் தமிழ் அரசியல் எதிர்கொண்டிருக்கின்றது. இனியாவது, சீமான் போன்றவர்களைக் கடந்து நின்று, தூரநோக்கோடு அண்டை நாட்டு அரசியலை அணுகத் தொடங்க வேண்டும்.