(மாதவன் சஞ்சயன்)
கல்லூரி நாட்களில் கல்விச் சுற்றுலா காதல் சுற்றுலாவாக மாறுவது போல, கடந்த சில வாரங்களாக அமைந்து விட்ட எனது தல சுற்றுலா, தகவல் சுற்றுலாவாக மாறிவிட்டது. பஞ்ச ஈஸ்வரங்கள் உட்பட கதிர்காமம் வரை புண்ணியம் தேடச் சென்ற எனக்கு தலைவரின் பாவச் செயல்களை அறியும் சந்தர்ப்பம் கிடைத்தது. வாழைக்கு குழி தோண்ட அதில் எச்சங்கள் கிடைத்தது போல அருள் வாங்க சென்ற எனக்கு முக்கியமானவரின் அசிங்கமான பின்னணி பற்றி அவர் பதவியில் இருக்கும் வரை கூறாதவர் அவரின் சரிவினால் கூற முன் வந்தனர். தன் இரகசிய குடும்பத்தை சிங்கப்பூரில் சந்திக்கும் அவரின் முன்னாள் நெருக்கமான மற்ற உறவுகளில் ஒன்று மகாதேவா என துறவு வாழ்வு வாழ்வது வரை கேள்விப்பட்ட செய்திகளை எழுதுவதற்கு முன் இன்றைய அரசியல் நிலையை பார்ப்போம்.
பயணத்தின் இடையே இணையத்தை பார்க்கும் போது மண்டை காய்ந்து போகிறது. உள்ளக விசாரணை, சர்வதேச விசாரணை, ஹைபிரிட் விசாரணை என போட்டா போட்டி அறிக்கைகள். வீ வோன்ட் தமிழ் ஈழம் என்ற கோசம். அமெரிக்கா ஏமாற்றி விட்டது, இந்திய காலைவாரி விட்டது என்ற ஆதங்கம். நான் வணக்கம் சொன்னேன் சுமந்திரன் வணக்கம் சொல்லவில்லை, நானென்ன ஊரில மாடு மேச்சிட்டே வந்தனான் என்ற குற்றச்சாட்டு. இனப்படுகொலை என்று நிரூபிக்க தக்க சான்றுகள் தற்போது இல்லாததால் இப்போது அவ்வாறு கூற முடியவில்லை என்ற சுமந்திரனை பார்த்து, முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசரே நடந்தது இனப்படு கொலை என்கிறார் அவரை விட நீ என்ன பெரிய அப்பா டக்கரா என்ற ஏளனப் பேச்சால் இகழ்கின்றனர்.
உள்ளக விசாரணையில் மக்களுக்கு நம்பிக்கை இல்லை அது அவர்களின் கடந்த கால அனுபவம் என மிக தெளிவாக நீண்ட தன் பேட்டியில் சம்மந்தன் தெரிவித்துள்ளார். ( http://www.tubetamil.com/tamil-tv-shows/adhirvu-exclusive-interview-with-hon-sambanthan.html ) சர்வதேச விசாரணை எமது இறைமையை பாதிக்கும் என்ற குரல் தெற்கில் பலமாக ஒலிக்கின்றது. ஹைபிரிட் அல்ல, உள்ளூரில் நம்பக தன்மை கொண்ட பொறிமுறை உருவாக்கப் பட்டு இந்த விடயம் முன் எடுக்கப்படும் அதே வேளை அரசியல் அமைப்பின் ஊடாக அதிகார பகிர்வின் மூலம் நீண்டு செல்லும் பிரச்சனைக்கு முடிவு காணப்படும் என்கிறார் பாராளுமன்றத்தில் பேசிய பிரதமர் ரணில். கடந்த காலங்களை போல இதுவும் நிலைமையை சமாளிக்கும் வாக்குறுதியா என்ற கேள்வி எழுகிறது. காரணம்….
கொக்குவில் இந்து கல்லூரியில் அன்றைய பிரதமர் சேர் ஜோன் கொத்தலாவலை தமிழ் மொழிக்கு சம அந்தஸ்து என மேடையில் கூறி விட்டு கொழும்பு திரும்பியதும் வார்த்தை தவறினார். அதற்க்கு முன் பண்டா ஒப்பந்தத்தை கிழித்தார். பின்பு டட்லி ஒப்பாந்ததை மறுதலித்தார். வட்டமேசை மாநாடு நடத்துவேன் என வாக்குறுதி தந்த ஜே ஆர் அதை நடத்தாமலே அதிகாரமற்ற மாவட்ட சபையைத் தான் தந்தார். ஈழம் இல்லை ஆனால் எல்லாம் என்ற பிரேமதாச, பீரிஸ் நீலன் பொதியுடன் வந்த சந்திரிக்கா, டக்ளசிடம் மட்டுமல்ல இந்தியாவிடமும் 13 + என்று கூறி பின் அதை செய்யாத மகிந்த உட்பட அனைவரும் வார்த்தை தவறியதை பார்த்தவர்கள் இதுவும் ஒரு சந்தர்ப்பவாத வாக்குறுதியா என சந்தேகிப்பது நியாயமானதே.
இலங்கை இந்திய ஒப்பந்தத்தை தவிர ஈழத்தமிழர் விடயத்தில் இதுவரை ஒப்பந்தங்கள் உள்நாட்டில் மட்டுமே இரு தரப்பினருக்கும் இடையில் போடப்பட்டன பின்பு அவை அரசுகளால் ஒருதலை பட்சமாக மீறப்பட்டன. ஈழத்தமிழர் பிரச்னையை முன்னிலைப் படுத்தி இந்திய பிராந்திய நலனுக்காக போடப்பட்டதே அந்த ஒப்பந்தம். அதனால் தான் அதன் மூலம் நாம் முழுமையான நன்மையை அடைய முடியவில்லை. வடக்கும் கிழக்கும் தமிழ் பேசும் மக்கள் நீண்ட காலமாக வாழ்ந்த பாரம்பரிய பிரதேசங்கள் என உறுதிபட கூறிவிட்டு அவை இரண்டும் இணைய கிழக்கில் மட்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்ற சகுனி முடிச்சு 13ல் போடப்பட்டது. இந்திய நலன் சார்ந்த விடயங்கள் பின் இணைப்புகள் மூலம் கையாளப்பட்டது. இந்தியா தனக்கு வேண்டியதை பெற்றுக்கொண்டது திருமலை எண்ணைக் குதங்கள் உட்பட.
எமது தரப்பிலும் குத்தி முறியும் கூட்டம் குழப்பியதால் 13 என்ற குறை பிரசவ குழந்தையால் எம் பிரச்னைக்கு தீர்வு இதுவரை இல்லை. குத்தி முறிந்தவர்கள் தம்மோடு பல்லாயிரம் அப்பாவிகளுக்கும் கதிமோட்சம் கொடுக்க அதை விசாரித்த சர்வதேசம் கொண்டுவந்த ஹைபிரிட் விசாரணை வேண்டாம் எனும் பிரதமர் அரசியல் சாசன மாற்றம் பற்றி கூறுவது, எம்மிடமே, இந்தியாவிடமோ அல்ல. சர்வதேசத்திடம் தான் கூறுகிறார். வெளி வந்திருக்கும் அறிக்கை காத்திரமானது. காலம் கடந்தாலும் அது காலாவதி ஆகாது. 10 வருடங்களின் பின்பு கூட அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்காலாம். எனவே இதை கவனத்தில் கொண்டு ரணில் தன் முனோர் வழியில் நடக்க மாட்டார். மாமன் ஜே ஆர் போல அழுத்தத்துக்கு உட்படுவார்.
எமது விடயத்தில் விடாகண்டன், கொடாகண்டனாக இருந்த ஜே ஆர் தன்னை மேற்குலகு கைவிடாது என்ற நம்பிக்கை பொய்த்து போனபோது, இந்தியாவுக்கு பச்சை கொடி காட்டினர். புலிகள் மோதி இருக்காவிட்டால் ஜே ஆர் தவிர்க்க முடியாமல் பூரண அதிகார பகிர்வை தந்திருப்பார். அல்லது மேலும் 2 ஆண்டு காலம் அவர் பதவியில் இருந்திருந்தால் வடக்கு கிழக்கு மாகாண அரசு பூரண அதிகாரங்களை பெற்றிருக்கும். காரணம் ஜே ஆர் சர்வதேச அரசியல் அறிந்த கறுவாத்தோட்ட அரசியல்வாதி. அவருக்கு பின் வந்த பிரேமதாச சண்டித்தனம் செய்யும் வாழைத்தோட்ட அரசியல்வாதி. இன்று பிரதமராக இருக்கும் ரணில் தன் மாமன் ஜே ஆர் போலவே சர்வதேச நிலைமைகளை கவனத்தில் கொள்வார் என்றால் அவர் கூற்றின் படி நடப்பார், நடக்க வேண்டும்.
அதனால் தான் சம்மந்தர் மக்கள் நம்பிக்கை வைக்க கூடியவாறான விசாரணை அமையவேண்டும் என தெளிவாக கூறுகிறார். இதுவரை சர்வதேச விசாரணை தான் வேண்டும் என்றவர்கள் அது நடைபெறாது என்றவுடன் சுருதியை மாற்றி இப்போது ஹைபிரிட் என கூவுகின்றனர். இந்த ஹைபிரிட் முறை எப்போது எந்த நாட்டில் இடம் பெற்றது அதன் பெறுபேறுகள் என்ன என கேட்ட போது ஆணையாளர் ஹுசைன் இதுவரை எங்கும் இல்லை இது வெற்றியளித்தால் எதிர்காலத்தில் இதனை பின் பற்றலாம் என கூறிய பதில் இது மாயமானை துரத்தும் நிலை என விமர்சிக்கப்படுகிறது. ஸ்ரீலங்காவை காப்பாற்ற அமெரிக்கா குறைந்த தாக்கம் உள்ள பிரேரணையை கொண்டுவர அதில் கூட பலவற்றை நீத்து போகச் செய்ய இந்தியா முனைவது அப்பட்டமான அரசியல் சூதாட்டம்.
இந்த போக்கை ஏற்கனவே அறிந்த சம்மந்தர் சுமந்திரன் அணி இருப்பதை விட்டு பறப்பதற்கு முயலாமல் கிடைப்பதில் இருந்து காய் நகர்த்தலை செய்து அடுத்த நகர்வை நோக்கி பயணிக்கின்றனர். அதனால் தான் முழுமையான தீர்வு அடையப்படும் வரை சர்வதேசத்தின் அனுசரணை எமக்கு தேவை அதனை சர்வதேசம் தர வேண்டும் என கோரிக்கை வைக்கிறார். வெளியிடப்பட்ட அறிக்கை உண்மையில் அரசுக்கும் ஒரு எச்சரிக்கையை கொடுத்து அவர்களையும் அதன் படி செயல்ப்பட தூண்டி உள்ளது. நாட்டை காட்டிக் கொடுக்காவிட்டாலும் இந்த நிலைமைக்கு நாட்டை கொண்டு சென்றவர்கள் பற்றி மறைமுக எச்சரிக்கை வெளிவருகிறது. அதனால் தான் விசாரணைக்கு தான் தயார் என யுத்த கால தளபதி சரத் பொன்சேகா அறிக்கை விடுகிறார்.
அன்று மாத்தறையில் பேசும் போது வெள்ளைக் கொடியுடன் வந்தவர்களையும் கொல்லும் நிலை எமக்கு வந்தது என கூறியவர் இன்று விசாரணைக்கு தயார் என்பது இவர் வெறும் அம்புதான் எய்தவர் வேறொருவர் என்பதை கூறாமல் கூறுகிறது. என்ன மாதிரியான விசாரணை என்பதை விடவும் எதோ ஒரு விசாரணை நம்பகத்தன்மையுடன் நடக்குமானால் பல புதைந்த ரகசியங்கள் வெளியில் வரும். யுத்தத்தில் அராஜகங்கள் நடப்பது உண்டு ஆனால் அராஜக யுத்தத்தை அரசுகள் நடத்தினால் அது விசாரணைக்குள் வரும். அராஜகவாதிகளுக்கு அடிப்படை கோட்பாடு இல்லை ஆனால் அரசுகளுக்கு உண்டு. நடக்கும் விசாரணை பல உண்மைகளை வெளிப்படுத்தும். காரணம் சரத் பொன்சேகா முதல் கருணாவரை பலரை முன்னைய தலைமைகள் கறிவேப்பிலையாய் தூக்கி எறிந்தமை.
மகிந்த அணியை நேரடியாக தாக்காமல் அவர்களை சிக்கலில் மாட்டவும் இது உதவும். மகிந்தரின் பிம்பம் இன்றுவரை மக்கள் மனதில் இருந்து முழுமையாக அகலவில்லை என்பதை ஹம்பாந்தோட்டையில் சந்தித்த பலரிடமும் அறியமுடிந்தது. யுத்த வெற்றியின் நாயகன் என்ற பெருமை கதிர்காம பெற்றோர் மத்தியில் காணப்பட்டது. 2007ல் நான் கதிர்காமத்தில் இருந்து இரவு பஸ்ஸில் கொழும்பு செல்ல புறப்பட்ட போது வயதான தகப்பன்மார் தமது 20 வயது இளைஞனை உச்சி மோந்து பஸ்ஸில் ஏற்றிவிட்டு கை அசைத்து விடை கொடுத்த காட்சிகளை நேரில் பார்த்தவன். பொருளாதார வறுமை அவர்களை போர்க்களம் அனுப்பியது. இன்று யுத்தம் இல்லை ஆனால் ராணுவ சேவையால் வருமானம் தொடர்கிறது. மகிந்த இல்லை என்றால் இந்த வெற்றி இல்லை என்பது அவர்களின் மனதில் பதிந்து விட்டது. தங்கள் பிள்ளைகள் உயிரோடு இருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி.
இந்த மனநிலை நாடு பூராகவும் இருப்பதால் தான் வெறும் 4 லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் மகிந்த தோற்றார். எனவே போர்குற்றம் என அவர் மீது நேரடியாக கைவைத்தால் நிலைமை விபரீதமாகலாம் என்பதால் பொருளாதார குற்ற விசாரணை மகிந்த அணி மீது முடுக்கி விடப்பட்டுள்ளது. கிளைகளை வெட்டி பின் மரத்தை அடியோடு சாய்க்க அவர்கள் போட்ட திட்டம் நிறைவேறும் வரை சர்வதேச விசாரணை, ஹைபிரிட் விசாரணை தவிர்க்கப்படும். கள நிலவரம் அறிந்தவர்கள் அதில் உள்ள யதார்த்தத்தை புரிந்து கொள்வர். வெத்து வேட்டுகள் அறிக்கை விடும் சம்மந்தரையும் சுமந்திரனையும் குற்றவாளி கூண்டில் ஏற்றும். வீராதி வீரர்கள் தென் இலங்கைக்கு பீதியூட்டும் அறிக்கைகளை விடுவர். கதிரமலையில் சிங்களவர் ஒருவர் சிவாஜிலிங்கம் பற்றி கேட்டார். அவரது பயம் பிரபாகரன் இல்லாவிட்டாலும் அவரது உறவினர் சிவாஜி இருக்கிறார் என்பதே. ஆக பிரபாகரன் பாட் 2 (Pirapakaran Part 2) பற்றி சிங்களம் பயப்பிடுகிறது.
– தொடரும் –