பிரச்சனையை தீர்ப்பதா அல்லது வளர்ப்பதா என்றால் அதில் தனக்கு எது லாபமோ அதைத்தான் பிரேமச்சந்திரன் செய்வார். எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம் என்பது தான் அவரின் வரலாறு. தமிழரசு கட்சியின் கோட்டை என கூறப்படும் கோப்பாய் கோமகன் வன்னிய சிங்கத்தின் தொகுதியில் கட்டைப்பிராயில் இருந்து பதவிக்காக இணைந்த இந்த புலியடி பயனாளி, புலிகளின் அனுசரணையிலும் பின்பு முள்ளிவாய்கால் பேரவல அனுதாபத்திலும் தான் கடந்த இரு தடவையும் பாராளுமன்றம் செல்ல முடிந்தது.
கூட்டமைப்பின் பேச்சாளராக நியமிக்கப்பட்டதும் அவர் வாயில் சனி வந்து அமர்ந்து விட்டது. சரமாரியாக தனது கூட்டில் இருப்பவரையே விமர்சிக்க தொடங்கினார். பெயருக்கு பின்னால் பட்டப்படிப்பு போடுபவர் அதை படித்து எடுத்தாரா அல்லது எதையாவது கொடுத்து எடுத்தாரா என்பது கேள்விக் குறி. கற்றாரை கற்றார் காமுறுவர் என்று கூறுவர். மாறாக சுரேஸ் சுமந்திரனை கரித்துக் கொட்டுகிறார். அப்படி என்றால் இவர் பட்டம் கற்காமல் வாங்கியதா ?
சுமந்திரன் சென்னை மாநில கல்லூரியில் பட்டப்படிப்பும் கொழும்பு சட்டக் கல்லூரியில் சட்டமும் படித்தவர். தொழில் முறை சட்டத்தரணி. சுரேசுக்கு தொழில் என்ன ?
முன்பு இயக்க நிதி, பின்பு கட்சிப் பணம், அதன் பின் பாராளுமன்ற சம்பளம் என பயணித்து 1994ல் வேலை தேடி மகிந்த மந்திரியாய் இருந்த மீன்பிடி அமைச்சில் உத்தியோகம் பார்த்த, அரசியல் கட்சியின் செயலாளர் நாயகம் ஸ்ரீலங்காவில் சுரேஸ் பிரேமசந்திரன் மட்டுமே. வெறும் பதவிக்காக புலியடி பயணிக்க புறப்பட்ட இயக்க தலைவரும் சுரேஸ் தான். முன்பு அதே புலிகளை வேட்டையாட தோழர்களை தூண்டியவரும் ராணுவத்தில் கொண்டு சென்று சேர்த்து விட்டவரும் சாட்சாத் இதே சுரேஸ் தான். முருகண்டி அடுப்புக்கு அடிக்கடி கட்டை செருகுவது போல இவருக்கும் பதவி பறிபோனால் பதை பதைத்து போவார். மது உண்ட(டு) மந்தி போல புரண்டடித்து புலம்புவார். கூட்டுக்குள்ளே குழி பறிப்பார்.
கடந்த தேர்தலில் தோல்வி அடைந்தது முதல், தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறியதற்கு மாறாக பேசத் தொடங்கி விட்டார். மக்களிடம் அமையப் போகும் நல்லாட்சியில் இணக்க அரசியல் செய்யப் போவதாக கூறித் தான் வாக்கு கேட்டு கூட்டமைப்பு 14 ஆசனங்களை பெற்றது. தனக்கு ஆசனம் கிடைக்கவில்லை என்றதும் சுரேஸ் புலியடி பாணியில் பேசத் தொடங்கி விட்டார். செல்வத்துக்கு கிடைத்த பதவி அவர் அமரும் ஆசனப் பக்கம் எல்லாம் இவரால் விமர்சிக்கப்பட்டது.
திடீரென கூட்டமைப்பின் முக்கிய கட்சியான தமிழ் அரசு கட்சி 8 ஆசனங்களும் மற்றவை 6 ஆசனங்களும் பெற்ற விபரத்தை முன் நிறுத்துகிறார். தமிழரசு கட்சியை விலத்தி அதன் வீட்டு சின்னத்தை விடுத்து மற்ற 3 கட்சிகளும் தனித்து போட்டியிட்டு வெல்ல முடியுமா என்பது கேள்விக் குறி. அண்மையில் சித்தார்த்தன் கூட தமிழரசு கட்சி, தான் பலமான கட்சியாக வர முடியும் என்பதால் தான் கூட்டமைப்பை பதியாமல் இருக்கிறது என்று மனம் திறந்து கூறினார். சித்தார்த்தன் வென்றவர். சுரேஸ் தோற்றவர்.
செல்வமும் சித்தார்த்தனும் யதார்த்தத்தை புரிந்து கொண்டவர்கள். கூட்டமைப்பு பதியப்பட வேண்டும் என கூறினாலும் உள்ளிருந்து குடைச்சல் கொடுக்காதவர்கள். ஐ நா விசாரணையில் கூட மக்களை குழப்பாதவர்கள். வீண் விமர்சனங்களை செய்து நிலைமையை சிக்கலாக்காதவர்கள். கூட்டுக்குள் தங்கள் கருத்துக்களை ஆணித்தரமாக வைத்தாலும் இறுதி முடியை ஏற்பவர்கள். அதை வெளியில் வந்து கூறி சுரேஸ் போல மக்களை சூடேற்ற விமர்சன அரசியல் செய்யாதவர்கள்.
எம் பிரச்சனை இன்று சர்வதேசத்தின் நிகழ்ச்சி நிரலுக்குள் வந்துள்ள நிலையில், தீர்வு ஒன்றை எட்டமுடியும் என்ற சூழ்நிலையில், சுரேஸ் போன்றவர்கள் தேவையற்ற நிகழ்ச்சிக்குள் மக்களை தூண்டக் கூடாது. உயிர் இழப்புகள் ஈடு செய்ய முடியாதவை. அன்று இந்திய ஒப்பந்தத்தை ஏற்றிருந்தால் இது நடந்திராது. ஈழக் கனவில் மிதந்ததால் நந்திக்கடலை கடந்து வரவேண்டிய நிலை எம் மக்களுக்கு ஏற்பட்டது. இருப்பதை விட்டு பறப்பதற்கு ஆசைப்பட்டு நாம் இதுவரை இழந்த உயிர்கள் போதும்.
மாண்டவர் மீண்டுவரார். இருப்பவர்கள் பாதுகாக்க படவேண்டும். சிறையில் வாடும் உறவுகள் சுதந்திரமாக நடமாடவேண்டும். அதற்கு நல்லிணக்கம் ஏற்படவேண்டும். இரு தரப்பிலும் காணப்படும் சந்தேகங்கள் கால ஓட்டத்தில் தான் களையப்படும். அதுவரை காய் நகர்தலை இருதரப்பு உடன்பாடுடன் தான் செய்ய முடியும். வேதனை தந்தவருக்கு தண்டனை தர வேண்டும் என்ற முடிவில் இருதரப்பும் முனைப்பாக இருந்தால் நிலைமை முடிவுக்கு வராது.
முள்ளிவாய்க்காலில் நடந்தது அட்டூழியம் என்பதை அது நடக்கும் போதே அமெரிக்கா அறியும். ஆனால் தடுக்கவில்லை. ஏன் ? இந்தியாவுக்கு தெரியும் தலையிடவில்லை. ஏன் ? ஐநா அறியும் அறிக்கை கூட விடவில்லை. ஏன் ? பாராளுமன்றத்தில் இருந்த புலியடி பயனாளிகளுக்கும் தெரியும் பதவிகளை துறக்கவில்லை. ஏன் ? காரணம் புலிகளின் அழிவுதான் அவர்களின் விருப்பு தெரிவு.
எள்ளோடு சேர்ந்து எலிப் புழுக்கைகளும் காய்வது போல் புலிகளுடன் சேர்ந்து மக்களும் காவு வாங்கப்பட்டனர். (உதாரணதுக்கு மன்னிக்கவும். முள்ளிவாய்காலில் அகப்பட்ட எம் மக்கள் எலிப் புழுக்கைகள் அல்ல) இன்று அந்த மக்களுக்காய் முதலை கண்ணீர் வடிக்கும் மண்டையர் சுரேஸ் அன்று ஏன் தன் பாராளுமன்ற பதவியை ராஜினாமா செய்யவில்லை. அசோக் ஹோட்டலின் அங்குலிமாலா என்று புத்தரிடம் தம்ம போதனை பெற்றார், எம் உறவுகளின் உயிர் மீது கரிசனை காட்ட ?
நடைபெறும் விசாரணை எந்த வடிவத்தில் வந்தாலும் அது இருதரப்பும் செய்த அட்டூழியங்களை விசாரிக்கும். அப்போது அதில் அனந்தி சாட்சியம் அளிப்பாரா ? எழிலன் புனிதன் என்று நிரூபிப்பாரா ? கனிமொழி கருணாநிதி கூறியதை பதிவு செய்வாரா ? தப்பிச்செல்ல முயன்ற எவரையும் புலிகள் கொல்ல வில்லை என மறுப்பாரா ? எறிகணை வீச்சில் கொல்லப்பட்ட பொது மக்களில் எவருமே புலிகளால் மனித கேடயமாக பலவந்தமாக தடுத்து வைக்கப்படவில்லை என யுத்த சாட்சியம் கூற முன்வருவாரா ?
ஏற்றுக்கொள்ளப்பட இருக்கும் வரைபு பல காத்திரமான விடயங்களை உள்ளடக்கி உள்ளது. சற்று தாக்கம் குறைந்ததாக இருந்தபோதும் இன்றைய உலக ஒழுங்கில் இவ்வாறான ஒரு பொறிமுறை கிடைத்ததே பெரிய விடையம். எமக்கு ஏற்பட்ட இழப்புகள் எம்மவராலும் ஏற்பட்டது என்பதை மறைத்து நாம் ஒரேயடியாக குற்றத்தை அடுத்தவர் மேல் சுமத்தி தீர்ப்பை எதிர்பார்ப்பது தவறு. தந்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த நவநீதம் பிள்ளை கூட புலிகளின் செயல்கள் பற்றியும் விமர்சித்தார்.
உள்ளூரில் சுரேஸ் அனந்தி விக்னேஸ்வரன் முதல் கஜேந்திரன் வரை மக்களிடம் எம் தரப்பில் நடந்தவை பற்றி பேச துணியவில்லை. காரணம் வாக்கு அரசியல். ஆனால் பாதிக்கப்பட்ட மக்கள் உண்மையை அறிவார்கள். புலிகளால் பாதிக்கப்பட்ட மக்கள் மௌனச்சாட்சிகளாக வாக்களித்து தான் சுமந்திரன் போன்றவர்கள் வென்றனர். புலியடி பயணிகள் போல் சுமந்திரன் புலிப்பரணி பாடி தனக்கு வாக்கு கேட்கவில்லை. சர்வதேச விசாரணை இரு தரப்பு மீதும் வரும் என அவர் தேர்தலுக்கு முன்பே கூறிவிட்டார்.
சம்மந்தர் கூட புலிகள் காலத்தில் மௌனம் காத்த நிலையை ஒத்துக்கொள்கிறார். அதே வேளை தற்போது கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நாம் அடையக்கூடிய நன்மைகளை அவர் கோடிட்டுக் காட்டுகிறார். மத்தியில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் தங்களின் பங்களிப்பிலும் இடம் பெற்றதால் அதனால் கிடைக்கக் கூடியவற்றை படிப்படியாக பெறவேண்டும் என்கிறார். புலியடி பயணிகள் எடுத்தேன் கவிழ்த்தேன் என செயல்பட முற்படுவது போல சம்மந்தர் செயல்ப்பட வில்லை.
நாட்டை சர்வதேசத்திடம் இருந்து பாதுகாக்க சம்மந்தர் அணி முயல்வதாக கூறும் இதே புலி பயனாளிகள் தான் முள்ளிவாய்காலில் நின்றவர்களை காக்க அமெரிக்க கப்பல்கள் வரும் என்றவர்கள். சரணடைய தயாரானவர்களை இந்திய தேர்தல் முடியும் வரை தாக்குப்பிடியுங்கள் என்றவர்கள். இறுதி யுத்தத்தில் மகிந்தவுக்கு இதே சர்வதேசம் தான் ஆதரவளித்தது என்பதை அறிந்தவர்கள். புலிகள் அழிவு பற்றி எவரும் அன்று இதய சுத்தியுடன் கழிவிரக்கம் கொள்ளவில்லை என்பதே உண்மை.
போக்கற்றவருக்கு புலம்பல் தான் பிழைப்பு. நாதி அற்றவருக்கு நடுத்தெரு தான் நாட்டிய மேடை. அண்டிப் பிளைத்தவருக்கு அடிமடியில் நெருப்பு. காட்டிக் கொடுத்தவருக்கு கனவிலும் மலைப்பு. பத்திரிகையாளர்கள் நிமலராஜன், தராகி, நடேசன், பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ், பரராஜசிங்கம் என நீளும் பலரின் கொலை பட்டியலில் கொலை செய்தவர்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வாழ்வது பற்றிய தகவல்களும் அவர்களை செய்யச் சொன்னவர் பற்றிய தகவல்களும் இனி வெளிவரும்.
– நீட்சி 5 ல் –
மாதவன் சஞ்சயன்