நாளைக்கு கனடிய பாராளுமன்றத் தேர்தல். யாருக்கு வாக்களிப்பது என்பது ஏற்கனவே முடிவாகிவிட்டது. மிகவும் மோசமான பொருளாதார வீழ்ச்சியை கனடா எதிர்நோக்குகின்றது. என்.டி.பி கட்சி மக்கள் நலனில் அக்கறை கொண்டுள்ளது. சிறுபான்மை மக்களின் நலனிலும் அதிக அக்கறை செலுத்துகின்றது. சட்டங்கள் சி 24, சி 51ஐ முற்றாக நிராகரிக்கின்றது. இவர்களது வரவு செலவு திட்ட சமநிலை சாத்தியப்படுமா என்ற ஐயமே உள்ளது. என்.டி.பி கட்சி முதன்மை குடிகளின் நலனிற்கும் உரிமைக்கும் முக்கியத்துவமளிக்கின்றது. லிபரல் கட்சியும் அவர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கிடைக்கும் எனக் கூறுகின்றது. சி24ஐ முற்றாக நிராகரித்தாலும் சி51 ஐ திருத்தங்களுடன் ஏற்றுக்கொள்ளலாம் என்று கூறியமை ஏமாற்றமளிக்கின்றது.
பொருளாதார முன்னேற்றத் திட்டங்களையும் முன்வைத்துள்ளது. ஓரளவிற்கு சாத்தியப்படக் கூடிய வாக்குறிதிகளையே முன்வைத்துள்ளது. இளம் தலைவர் முன்னால் பிரதமர் ரூடோவின் மகன் யஸ்ரின் நம்பிக்கையளிக்கின்றார் என்பதனை மறுக்கமுடியாது. ஆட்சியில் உள்ள பழமைவாத கொன்சவேற்றிவ் கட்சி தொடர்ந்து வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்து கொண்டிருப்போரையும் சிறுபான்மை இனத்தவர்களையும் சிதைத்து வருகின்றது. இத் தேர்தலில் அவர்களது கொள்கைகள் மத்திய வர்க்கத்தையும் வெகுவிரைவில் அழித்துவிடக்கூடியவை. ஆளும் கட்சி முற்றாக அகற்றப்படவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
எனது தொகுதியில் தமிழ் வேட்பாளர்கள் யாரும் போட்டியிடவில்லை. அண்மையில் தமிழ் வேட்பாளர்களை விளம்பரம் பத்திரிகையின் கேள்வி-பதில் மற்றும் 101.5 எப்.ம் வானொலி போன்றவற்றில் அவர்கள் அளித்த கொள்கை விளக்கங்களின் பிரகாரம் மூவர் நம்பிக்கையளிக்கின்றனர். லிபரல் கட்சி வேட்பாளர் ஹரி ஆனந்தசங்கரி, பசுமைக் கட்சி வேட்பாளர் கார்த்திகா கோபிநாத், என்.டி.பிக் கட்சி வேட்பாளர் ராதிகா சிற்சபேசன் ஆகியோர் நம்பிக்கையளிக்கின்றனர். இவர்கள் உங்கள் தொகுதியில் போட்டியிட்டால் வாக்களிக்க முன்னர் இவர்களை கருத்திற்கொள்ளவும். புழமைவாதக் கட்சியின் வேட்பாளரைச் சந்திக்கவில்லை. சந்தித்திருந்தாலும் என்னைப் போன்ற சிறுபான்மை இனத்தவனை அழிக்க முற்படும் கட்சிக்கு ஒரு பொழுதும் வாக்களிக்கமாட்டேன்.
என்.டி.பிக் கட்சி வேட்பாளர் செந்தி செல்லையா விளம்பர பத்திரிகை கேள்வி-பதில் நிகழ்வில் ஹொலிவூட் போன்ற ஒரு இன்டஸ்ரி கனடாவில் இருந்தால் கனடிய பொருளாதாரப் பிரச்சினை தீர்ந்துவிடும் என்றார். என்.டி.பிக் கட்சிக்கே இவ்வாறான கருத்து இல்லை. தமிழர் என்றபடியால் இவருக்கு வாக்களித்தால் தொகுதி மக்களுக்கு நன்மை பயக்குமா? என்.டி.பிக் கட்சியின் வீழ்ச்சிக்கு பிரதான காரணம் தகுதியான வேட்பாளர் தேர்வு இல்லை. தகுதி என்பது இங்கு கல்வித் தகுதியல்ல. விடயஞானத் தெளிவு இல்லாதவர்கள் மக்களை பிரதிநித்துவபடமுடியாது. எனது விருப்பிற்கு அப்பால் நாளை லிபரல் கட்சி வெற்றி பெறும் என நம்புகின்றேன்.
(Rathan Ragu)