இன்னும் ஐந்து ஆண்டுகளுக்குள் நாங்கள் எங்களை சரி செய்து கொண்டு விஞ்ஞானத் துறையில் எங்களுடைய மாணவர்களை மேலே கொண்டுவரவில்லையென்றால் நாங்கள் இங்கே கூக்குரலிடுவதிலே எந்த அர்த்தமும் இல்லாமல் போய்விடும். நாங்கள் சிங்கள மயமாக்கலுக்குள் சங்கமமாகி சரணாகதி அடைகின்ற நிலைமையே ஏற்படும். என வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இன்று யாழ் வடமராட்சி ஹாட்லி கல்லூரியில் நடைபெற்ற வருடாந்த பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்…..
முப்பது ஆண்டு கால போருக்குப்பின்னர் வடக்கு மாகாணத்திற்கு தேவையான தகுதி மிக்க வைத்தியர்களை தகுதி மிக்க பொறியியலாளர்களை தகுதி மிக்க ஆசிரியர்களை தகுதி மிக்க சிவில் சேவையாளர்களை சிறப்புத் தேர்ச்சி பெற்றவர்களை நாங்கள் பெற முடியாமல் தேடிக்கொண்டிருக்கின்ற ஒரு துர்ப்பாக்கிய சூழல் எழுந்திருக்கிறது. இதனால் தென்னிலங்கையிலிருந்து பலரை இங்கே கொண்டுவரவேண்டிய சூழல் எழுந்திருக்கிறது.
நாங்கள் கல்வி கற்ற காலத்தில் விஞ்ஞானத்துறையில் ஐந்து துறைகள் மட்டுமே காணப்;பட்டன. ஆனால் இன்று அப்படியல்ல. விஞ்ஞானத் துறையில் மட்டும் 27 இற்கும் அதிகமான துறைகள் பல்கலைக்கழகங்களில் காணப்படுகின்றன. கணித விஞ்ஞானத்துறைகளில் தற்போது 40 இற்கும் அதிகமான துறைகள் காணப்படுகின்றன. குறிப்பாக ஹாட்லி கல்லூரி போன்ற அனைத்து வசதிகளையும் கொண்டுள்ள பாடசாலைகள் தமது மாணவர்களை 6 ஆம் தரத்திலிருந்தே அதிகமாக கணித விஞ்ஞானத் துறைகளை நோக்கி நகர்த்த வேண்டும்.
எங்களுடைய யாழ் போதனா வைத்தியசாலை வவுனியா,முல்லைத்தீவு,கிளிநொச்சி வைத்திய சாலைகளில் வைத்தியர்கள்,தாதிகள் உள்ளிட்டோர் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களாகவே அதிகம் காணப்படுகின்றனர். இன்னும் ஒரு ஐந்து ஆண்டுகளுக்குள் நாங்கள் எங்களை சரி செய்து கொண்டு விஞ்ஞானத் துறையில் எங்களுடைய மாணவர்களை மேலே கொண்டுவரவில்லையென்றால் நாங்கள் இங்கே கூக்குரலிடுவதிலே எந்த அர்த்தமும் இல்லாமல் போய்விடும். நாங்கள் சிங்கள மயமாக்கலுக்குள் சங்கமமாகி சரணாகதி அடைகின்ற நிலைமையே ஏற்படும். இவ்வாறான பிரச்சினைகளில் இருந்து நாங்கள் மீண்டெழ வேண்டுமாக இருந்தால் அதற்கான களம் பாடசாலைகள் தான். ஆகவே வடக்கு மாகாணத்தில் அதிகமான மாணவர்களையும் அதிக வளங்களையும் கொண்ட பெரிய பாடசாலைகள் அதிக அக்கறை எடுக்க வேண்டும் என நான் இந்த இடத்தில் கேட்டுக்கொள்கிறேன். இவற்றை நாங்கள் பாரா முகமாக விட்டுவிட்டுச் செல்ல முடியாது காரணம் இது எங்களுடைய மாணவர்களுடைய வளர்ச்சி மட்டுமல்ல எங்களுடைய சமூகத்தின் இருப்பு எங்களுடைய எதிர்கால சமூதாயத்தின் இருப்பு ஆகியவற்றை உத்தரவாதம் செய்கின்ற ஒரு விடயம்.
மாணவர்கள் உயர் தரத்திலே பாடங்களை தெரிவு செய்யும் போது விழிப்புனர்வுடன் செயற்பட வேண்டும். அதே வேளை ஆசிரியர்களுக்கும் இது அதிகமாக தேவைப்படுகின்றது. ஏனென்றால் கணித விஞ்ஞானத் துறைகளில் தற்போது பல்கலைக்கழகங்களில் 40 வரையான துறைகள் காணப்படுகின்றன. இவற்றை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். எங்களுடைய பாரம்பரியமான ஒரு தவறான மனோபாவம் இருக்கிறது எங்களுடைய பெண்பிள்ளைகள் அதிகம் தாதியத் தொழிலை விரும்புவதில்லை. அது ஏன் என்று புரியவில்லை. ஒரு வைத்தியர் நாள் ஒன்றுக்கு நான்கு மணித்தியாலங்கள் மட்டுமே மேலதிக கடமையை செய்யலாம். ஆனால் ஒரு தாதிய உத்தியோகத்தர் நாள் ஒன்றுக்கு எத்தனை மணித்தியாலங்களையும் மேலதிக கடமையாக செய்யலாம் அந்த வகையில் ஒரு வைத்தியர் பெறும் சம்பளத்திலும் பார்க்க பல மடங்கு அதிகமாக தாதியத் தொழிலில் உழைக்க முடியும். நாங்கள் 30 லட்சம் 40 லட்சம் செலவுசெய்து வெளிநாடுகளுக்கு ஓட வேண்டிய அவசியமே இல்லை.
ஒரு காலத்திலே எங்களுடைய மாகாணத்திற்கு தேவையான அதிகாரிகளையும் விட ஏனைய மாகாணங்களுக்கும் அதிகாரிகளை உருவாக்கி கொடுத்த நாங்கள் இன்று எமது சூழலில் கிடைக்கக்கூடிய வளங்களை பயன்படுத்தாமல் வெளிநாடுகளுக்கு ஓடிக்கொண்டிருக்கிறோம். எமது மாகாணத்தைப் பொறுத்தவரை இப்போது உடனடித் தேவையாக இருப்பது எங்களுடைய மாணவர்கள் பெருமளவில் கணித விஞ்ஞானத் துறைகளை தெரிவு செய்ய வேண்டும். அவர்களை இந்தத் துறைகளை நோக்கி நகர்த்துவதற்கு ஆசிரியர்கள் உச்சாகமூட்ட வேண்டும். என்றார்.