‘குரங்கின் கை பூமாலை’யான கூட்டமைப்பு

தமிழர் தேசம் எங்கும் வாக்களிப்பு சதவீதம், கடந்த பல பொதுத் தேர்தல்களைக் காட்டிலும் இம்முறை அதிகரித்திருந்தது. ஆனபோதிலும், கூட்டமைப்பு வாக்கிழப்பைச் சந்தித்திருக்கின்றது. 2015ஆம் ஆண்டில், நாடாளுமன்றத்துக்குள் 16 உறுப்பினர்களைக் கொண்டிருந்த கூட்டமைப்பு, இம்முறை 10 உறுப்பினர்களோடு செல்கின்றது.

கடந்த காலத்தில், தமிழர் தேசத்தில் ஏக நிலைக்கு அண்மித்த வெற்றியைப் பெற்று, தமிழ்த் தேசியம் சார் அரசியலில் கூட்டமைப்பு, தனி ஆவர்த்தனம் செய்து கொண்டிருந்தது. கடந்த உள்ளூராட்சித் தேர்தலின் போது, சுமார் இரண்டு இலட்சத்து 80 ஆயிரம் வாக்குகளைக் கூட்டமைப்பு இழந்திருந்தது.

அந்தப் பின்னடைவுக்கான காரணங்களை ஆராய்வது தொடர்பில், கூட்டமைப்பு பெரிய கரிசனையைக் காட்டவில்லை. வட்டார முறைத் தேர்தலே, வாக்கிழப்புக்குக் காரணம் என்கிற அளவில், கூட்டமைப்பு விடயங்களைக் கடந்துவிட்டது.

தமிழ்த் தேசிய பரப்பில், தங்களுக்கு எதிராக எந்தத் தரப்பாலும் எழுச்சிபெற முடியாது என்கிற கூட்டமைப்பின் நினைப்பும், இந்தத் தேர்தலில் முட்டுச்சந்துக்குள் முட்டிக் கொண்டு நிற்கும் அளவுக்கான தோல்விக்குக் காரணமாகி இருக்கின்றது.

யாழ். தேர்தல் மாவட்டத்தில் அங்கஜன் இராமநாதனும், மட்டக்களப்பு மாவட்டத்தில் சிவனேசத்துரை சந்திரகாந்தனும் (பிள்ளையான்) பெற்றிருக்கின்ற விருப்பு வாக்குக்களின் எண்ணிக்கை, கூட்டமைப்பின் பெரும் வீழ்ச்சியை எடுத்துக் காட்டியிருக்கின்றன.

தமிழர் தேசத்தில், இன விகிதாசார அடிப்படையில் யாழ்ப்பாணமும் மட்டக்களப்பும் தமிழ் மக்கள் அதிகமுள்ள மாவட்டங்கள். இந்த மாவட்டங்களில் தமிழ்த் தேசிய அரசியலுக்கு அப்பாலான நிலைப்பாடுகளுள்ள அதுவும், ராஜபக்‌ஷக்களின் அரசியலைப் பிரதிபலிக்கின்ற இருவர், அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றிருப்பதென்பது, தோல்விகளிலேயே பெருந்தோல்வியாகும். அதுதான், “பிரபாகரன் மண்ணை வென்று விட்டோம்…” என்று அங்கஜனின் தம்பிகள், யாழ். மத்திய கல்லூரி வளாகத்தில் கொக்கரிப்பதற்கும் காரணமாகி இருக்கின்றது.

பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்த சமயம், கூட்டமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர், இந்தப் பத்தியாளரிடம் கீழ்க்கண்டவாறு கூறினார். “…நாங்கள், உள்ளூராட்சித் தேர்தலில் அடைந்த பின்னடைவை, ஓரளவுக்குச் சரி செய்துவிட்டதாகவே எண்ணினோம். வாக்களிப்பு சதவீதமும் அதனை உணர்த்துவதாக நம்பினோம். ஆனால், நாங்கள் அடைந்திருக்கின்ற பின்னடைவு, எதையும் சரி செய்திருக்கவில்லை என்பதைக் காட்டுகின்றது…” என்றவாறு கூறினார்.

‘கண் கெட்ட பின்னரான சூரிய நமஸ்காரம்’ ஆக, அந்தக் கூற்றை எடுத்துக் கொள்ளலாம் என்றுதான் இந்தப் பத்தியாளர் நினைத்தார். ஆனால், இவ்வளவு பெரிய பின்னடைவுக்குப் பின்னரும், அதனைப் புரிந்து கொள்ளாமல், கூட்டமைப்புக்குள் அரங்கேறும் கூத்துகளைப் பார்த்தால், ‘குரங்கின் கையில் அகப்பட்ட பூமாலை’யின் நிலையே, ஞாபகத்துக்கு வருகின்றது. அதுவும், கிடைத்த ஒற்றைத் தேசியபட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமையை முன்வைத்து நிகழ்ந்த போட்டி என்பது, அருவருக்கத்தக்க அளவுக்குச் சென்றிருக்கின்றது.

அம்பாறையைத் தவிர்த்து, தமிழர் தேசத்தின் ஏனைய மாவட்டங்கள் அனைத்திலும், தமிழ் நாடாளுமன்ற உறுப்புரிமை உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. தமிழ்த் தேசிய கட்சிகளின் சார்பிலும் நாடாளுமன்ற உறுப்புரிமை காக்கப்பட்டிருக்கின்றது.

இப்படியான நிலையில், தமிழ் மக்களின் முதன்மைக் கட்சியாகத் தன்னை முன்னிறுத்தும் கூட்டமைப்பு, அம்பாறையில் தமிழ் நாடாளுமன்ற உறுப்புரிமையை உறுதி செய்வது சார்ந்து செயற்படுவதுதான் தார்மிகக் கடமையாகும்.

ஏனெனில், அம்பாறையில் தமிழ்ப் பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டமைக்கான பெரும் பொறுப்பை, கூட்டமைப்பு கொண்டிருக்கின்றது. அதுவும், நாடாளுமன்ற உறுப்புரிமையை இழந்தது மாத்திரமல்லாமல், கருணா அம்மான் என்கிற விநாயகமூர்த்தி முரளிதரனிடம் சில ஆயிரம் வாக்குகளால் தோற்றிருப்பது என்பது, மிக மோசமான கட்டமாகும். எப்போதுமே, யாழ். மய்யத்துக்குள் நின்று சிந்தித்துச் செயற்படும் நிலையே, இந்தத் தோல்விக்கும் காரணமாகும். இவ்வாறான நிலையில், கிடைத்த சந்தர்ப்பத்தைக் கொண்டு சரி செய்வதுதான், மக்கள் சார்பு அரசியல் தலைமைகளின் கடமையாகும்.

கூட்டமைப்பின் ஒற்றைத் தேசிய பட்டியல் உறுப்புரிமைக்காக, அம்பாறையில் இருந்து தவராசா கலையரசன் நியமிக்கப்பட்டு, வர்த்தமானி ஊடாக உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறார். தோல்வி முகத்திலிருக்கின்ற கட்சியான கூட்டமைப்பின், வரவேற்கக்கூடிய தீர்மானம் இதுவாகும்.

ஆனால், இந்தத் தீர்மானத்துக்கு எதிராக, யாழ்ப்பாணத்துக்குள் குறிப்பாக, தமிழரசுக் கட்சியின் யாழ். மய்யக்குழு மிகவும் கீழ்த்தரமான நிலைப்பாட்டை எடுத்துச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. கூட்டமைப்பின் தேசியபபட்டியல் நியமனம் என்பது, எப்போதுமே இரா.சம்பந்தனின் தீர்மானங்களின் போக்கிலேயே நிகழ்ந்து வந்திருக்கின்றது. அவர், என்றைக்குமே பங்காளிக் கட்சிகளிடம் அது குறித்து ஆலோசனை நடத்தியதும் இல்லை. ஆலோசனைகளைப் பங்காளிக் கட்சிகள் கூற முனைந்தாலும் கண்டு கொண்டதுமில்லை.

2015ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ஈ.பி.ஆர்.எல்.எப்.பின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் தோற்றபோது, அவருக்குத் தேசியபட்டியலை வழங்குமாறு புளொட், டெலோ தலைவர்கள் கோரினார்கள். ஆனால், கட்சித் தலைவராக இருந்து கொண்டே தோற்றுப் போயிருக்கிற ஒருவருக்கு, எவ்வாறு தேசியபட்டியலை வழங்க முடியும் என்று சம்பந்தன் கேள்வி எழுப்பினார். அதற்கு, தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா உள்ளிட்டவர்கள் ஒத்தூதியிருந்தனர்.

ஆனால், இம்முறை மாவை சேனாதிராஜா தோல்வி அடைந்திருக்கின்ற நிலையில், அவருக்குத் தேசியபட்டியலைப் பெறும் நோக்கில், தமிழரசுக் கட்சியின் யாழ். மய்யக்குழு, பங்காளிக் கட்சிகளிடம் ஓடியிருக்கின்றது என்பது, ‘வாழ்க்கை ஒரு வட்டம்’ என்கிற சினிமா வசனத்தை ஞாபகப்படுத்துகின்றது.

கடந்த காலங்களில், தேசியபட்டியல் நியமனங்களின் போது, பங்காளிக் கட்சிகளின் கருத்துகளைக் கிஞ்சித்தும் செவி மடுக்காத தரப்பு, இம்முறை அவர்களின் கருத்தைக் தூக்கிக் கொண்டோட முனைவது அபத்தமான வாதமே.

இம்முறை அம்பாறைக்கான வேட்பாளர் பட்டியலில், டெலோவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரனை, அந்தக் கட்சிக்குத் தெரியாமல் துரோகத்தனமாகப் பறித்து, தமிழரசுக் கட்சி சார்பில் மாவை சேனாதிராஜா முன்னிறுத்தினார்.

இந்த விடயம் தொடர்பில், இந்தப் பத்தியாளர் ஏற்கெனவே, ‘அறம் மறந்த மாவை’ எனும் பத்தியூடாகக் கேள்வி எழுப்பியிருந்தார். கூட்டமைப்பின் தலைமையும் தமிழரசுக் கட்சியின் தலைமையும் கூட்டமைப்புக்குள் ஏதேச்சதிகாரப் போக்கிலேயே செயற்பட்டு வந்திருக்கின்றன. அவை ஒரு போதும் பங்காளிக் கட்சிகளை மதித்து வந்திருக்கவில்லை. அதன் ஒரு கட்டமே இம்முறையும் தேசியபட்டியல் நியமனத்தில் நிகழ்ந்திருக்கின்றது.

ஆனால், அந்த நியமனத்தில் அம்பாறையிலுள்ள தமிழ் மக்களுக்கான தார்மிகம் காக்கப்பட்டிருக்கின்றது. அதனைக் குறித்து எந்தவித விமர்சனங்களையும் முன்வைக்க முடியாது.

கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளும், தமிழரசுக் கட்சியின் யாழ். மய்யக்குழுவின் நிலைப்பாடுகளில் நின்றே இம்முறை யோசித்திருக்கின்றன. ஏற்கெனவே, பறிபோய்க் கொண்டிருக்கின்ற அம்பாறை என்கிற தமிழர் நிலத்தின் இருப்பைத் தக்க வைப்பது சார்ந்து சிந்தித்திருந்தால், கலையரசனுக்கான தேசியபட்டியல் நியமனத்துக்கு எதிராகச் செயற்பட்டிருக்க மாட்டார்கள்.

எல்லோருமே யாழ்ப்பாணத்துக்குள் இருந்து சிந்தித்துச் செயலாற்றும் தன்மை என்பது, கூட்டமைப்பின் தொடர் தோல்விகளுக்கு வழி ஏற்படுத்திக் கொண்டிருக்கும். அத்தோடு, கிழக்கு தமிழ் மக்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்ளாமல் செயற்படுவது, கூட்டமைப்பை கிழக்கிலிருந்து முற்றாகவே அகற்றிவிடும்.

இன்னொரு பக்கம், தேர்தலில் பின்னடைவு கண்டதும் வரும் ஞானம், கூட்டமைப்பின் தலைவர்கள் சிலருக்கு வந்திருக்கின்றது. அது, தேர்தலில் வென்றிருக்கின்ற தமிழ்த் தேசியகட்சிகளான அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ், தமிழ் மக்கள் தேசிய கூட்டணி ஆகியவற்றை இணைத்துக் கொண்டு, புதிய அமைப்பாக முன்னோக்கி நகர்வது பற்றியது.

மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு, நாடாளுமன்றத்துக்குள் ஏதேச்சதிகாரம் புரியப்போகும் ராஜபக்‌ஷக்களுக்கு எதிராக, தமிழ்த் தேசிய கட்சிகள் ஒன்றினைந்து செயற்படுவது தவிர்க்க முடியாதது. அது, தமிழ் மக்களின் பெரும் எதிர்பார்ப்பாகும். ஆனால், தேர்தல் கூட்டு போன்றதொரு நிலையை நோக்கிச் செல்ல வேண்டிய எந்தத் தேவையும் இல்லை.

ஏனெனில், கேள்விகள் கேட்பதற்கு யாருமே இல்லாத ஏக நிலைதான், கூட்டமைப்பின் இன்றைய நிலைக்குக் காரணமானது. கூட்டமைப்பு என்கிற மக்களுக்கான கட்டமைப்பு, ஒரு கட்டத்தில் பதவிகளுக்காகப் புடுங்குப்படும் கோஷ்டியிடம் சேர்வதற்கும் அதுதான் காரணம். தமிழரசுக் கட்சியின் யாழ். மய்யக்குழு அரங்கேற்றிக் கொண்டிருக்கும் தேர்தலுக்குப் பின்னரான காட்சிகளும் அதனையேதான் பிரதிபலிக்கின்றன.

கூட்டமைப்பு, குறிப்பாகத் தமிழரசுக் கட்சி, இந்தத் தேர்தல் பின்னடைவில் இருந்து உடனடியாகக் கற்றுக் கொண்டு, தன்னை மீளக் கட்டமைக்க வேண்டும். மாறாகப் பதவிகளுக்காகத் தங்களுக்குள் குத்து வெட்டுப்பட்டுக் கொண்டிருந்தால், வரும் மாகாண சபைத் தேர்தலில் ராஜபக்‌ஷக்களிடம் வடக்கையும் கிழக்கையும் இழந்துவிட்டு, ‘இலவு காக்க’ வேண்டி வரும்.