விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒருகாலத்தில் வன்னியில் பலநூற்றுக்கணக்கான கரும்புலிகளுடனும் – முப்படையினருடனும் – இருந்துகொண்டு தென்னிலங்கை தரப்பினரை எவ்வாறு தன் காலடியில் வைத்திருந்தாரோ, அதேயளவு பலத்துடன் தற்போது சம்பந்தன் காணப்படுகிறார். காலதேவன் மீண்டுமொருதடவை தமிழர் தரப்பின் குரலுக்கான அடையாளத்தை காணப்பித்திருக்கிறான். தென்னிலங்கை ஆட்சிக்கதிரையின் ஒருகால் அல்ல, இரண்டு கால்களாகவும் சம்பந்தன் இருந்துகொண்டிருக்கிறார் என்பதை தற்போதைய குழப்பங்கள் அடையாளம் காண்பித்திருக்கின்றன. இனி சம்பந்தர் என்ன செய்யப்போகிறார் என்பதுதான் கேள்வி. இன்று சமூக வலைத்தளங்கள் முதல் ஊடகங்களின் ஆசிரியர் தலையங்கங்கள்வரை எல்லாமே, சம்பந்தர் பலமோடு இருக்கிறார் என்று சொல்கின்றன. அவ்வாறு சொல்வது மிக எளிதானதும்கூட. ஆனால், அவர் என்ன செய்யவேண்டும் என்று சொல்வதுதான் கடினம். அதனை எவருமே சொன்னதாக காணவில்லை.தற்போதைய அரசியல் குழப்பமானது எவ்வாறு ஏற்பட்டது? யாரெல்லாம் இதன் பின்னணியில் நிற்கிறார்கள் என்று “டோர்ச்” அடித்து பார்ப்பதைவிடுத்து – இங்கு ஆளுக்காள் நடைபெறுகின்ற தலைமைத்துவ போட்டியில், தங்கள் ஆளுமையை நிலைநிறுத்தபவர்கள் யார் என்பதைப்பொறுத்துத்தான் அவர்களுக்கான ஆதரவும் நிலைநாட்டப்படவுள்ளது என்பதை முதலில் உணரவேண்டும். மகிந்த என்பவரது மீள்வரவை இன்று தமிழ்மக்களில் பலர் வாயாரப்புகழ்ந்துகொண்டிருப்பதற்கான காரணமும்கூட அதுதான்.
ஆக,இன்று மைத்திரியால் குதறி எறியப்பட்டிருக்கும் ரணில் விக்கிரமசிங்க என்பவர் எப்படிப்பட்ட அணுகுமுறையோடு தற்போதைய பிரச்சினையை பார்க்கிறார் என்று நோக்கினால், இந்தப்பரிதாபம் புரியும்.
ரணில் தற்போதைய குழப்பங்களை ஊரில் உள்ள கிழவிகள் போல தெருவில் வந்து நின்றுகொண்டு ஒப்பாரி வைக்கிறார். தன்னோடு நிற்பவர்களை அழைத்துக்கொண்டுவந்து ஊடகவியாலாளர்களிடம் புலம்புகிறார். வெளிநாட்டு தூதுவர்களை அழைத்து வந்து “பார்த்தீர்களா இவர்கள் செய்திருக்கும் அநியாயத்தை” – என்று சீரியல் மாமியார் கணக்காக மூக்கை சிந்திக்கொண்டிருக்கிறார்.
இதுவா ஒரு தலைவனுக்கு அழகு? இதுவா இவ்வளவு காலமும் அரசியலில் உள்ள ஒரு கட்சியின் ஆளுமையின் சீத்துவம்? ஐந்து லட்சம் விருப்பு வாக்குகளை போட்டு வரலாறு காணாத பெருவெற்றியை ரணிலுக்கு கொடுத்த ஒவ்வொருவரும் வெட்கப்படவேண்டிய ஒரு மனிதராக ரணில் இன்று அழுகுணியாட்டம் போடுகிறார்.
உண்மையில் இவர் செய்திருக்கவேண்டியது என்ன? எதிரி தனக்கு எதிராக போட்ட வலையை அவன் எதிர்பாராத திசையில் கிழித்திருக்கவேண்டும். எதிரி தனக்குப்போட்ட தடத்தினை அவனுக்கே திருப்பி எறிந்திருக்கவேண்டும். அதற்கு என்ன வழி?
ரணிலும் அவரது கட்சியும் இவ்வளவு காலமும் பலம்பொருந்திய தரப்பினராக இருப்பதற்கு காரணமான மக்களிடம் ரணில் போயிருக்கவேண்டும். தனக்கு நேர்ந்த இந்த அநியாயத்தை பெரும் கூட்டம்போட்டு அறிவித்துவிட்டு, தமது கட்சி உறுப்பினர்கள் அனைவரும் நாடாளுமன்ற பதவிகளை ராஜினாமா செய்வதாக அறிவித்திருக்கவேண்டும். “தேர்தலை நடத்தி மக்களிடம் நியாயம் கேட்போம். அவர்கள் வழங்கும் தீர்ப்பின்படி நடப்போம்” – என்று கூறியிருக்கவேண்டும். உடனடியாக அதனை செய்திருந்தால் மகிந்தவோ – மைத்திரியோ அடுத்த கட்டத்தைப்பற்றி யோசிப்பதற்கோ – சுதாகரிப்பதற்கோ நேரம் கிடைத்திருக்காது. பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு தங்களின் அடுத்த கட்டத்தை முன்னெடுப்பதற்கும் – ஆட்களை வாங்குவதற்கு காலத்தை எடுத்துக்கொள்வதற்கும் – நேரம் கிடைத்திருக்காது.
அதுதான் ஜனநாயகத்துக்கு ஏற்பட்ட பேரடிக்கான பதிலடி. மக்களும் தங்களது பொறுப்பை உணர்வதற்கு வழங்கப்பட்டிருக்கும் பெரிய தருணமாக இருந்திருக்கும்.
ஆனால், இந்த யானைக்கூட்டம் என்ன செய்கிறது? அவர்களுக்கு பதவியும் வேணுமாம். தங்களை ஒருவரும் சுரண்டவும் கூடாதாம். சுண்டவும் கூடாதாம். எல்லோரது மண்டையிலும் நோகாமல் நொங்கொடுத்துக்கொண்டிருப்பார்களாம். இந்தக்கூத்துக்களை வெளிநாடுகள் பக்குவமாக பதமாக பாதுகாத்து அவர்களுக்கு கொடுக்கவேண்டுமாம். தாங்கள் ஆட்சி மாத்திரம் செய்வினமாம்!
என்னமாதிரியான தலைமை இது?
இந்தமாதிரியான கேவலங்களை பார்த்தாவது தமிழர் தரப்பு தங்களின் நிலைப்பாட்டினை நேர்சீராக முன்னெடுக்கவேண்டும்.
சம்பந்தர் தற்போது உடனடியாக செய்யவேண்டியது தமிழர்களின் நலனில் தமது கட்சிகொண்டுள்ள கொள்கைக்கு ஒத்த போக்குடைய தரப்புக்களுடன் பேசவேண்டும். அது விக்னேஸ்வரனாகவோ கஜேந்திரகுமாராகவோ சுரேஸ் தரப்பாகவோ இருக்கலாம். எல்லோரையும் அழைத்து ஒரு மேசைக்கு கொண்டுவரவேண்டும். தமிழ் கட்சிகளுக்கு மத்தியில் இவ்வளவு காலமும் நடைபெற்றுவந்த போட்டிகள் – பிரிவுகள் – பிளவுகள் என்பது வேறு. இப்போதைய தேவை, தமிழர் தரப்பு ஒட்டுமொத்தமாக சிங்கள தரப்புக்கு எதிராக நின்று சரியான பதிலடியை கொடுக்கவேண்டும். தருணத்தை பயன்படுத்தவேண்டும். தேவையில்லாத – வேறு – விடயங்களை தவிர்த்து, தற்போதைய அரசியல் சூழ்நிலைக்கு எடுக்கவேண்டிய முடிவை மாத்திரம் கவனம் செலுத்தும் சந்திப்பாக அதனை மாற்றி, ஒரு உறுதியான முடிவை எடுக்கவேண்டும். இந்த சந்திப்பானது எவ்வளவு தூரம் காத்திரமாக அமையுதோ இல்லையோ, இந்த ஒரு செயற்பாடு தென்னிலங்கைக்கு ஒரு கிலிக்கலக்கத்தை நிச்சயம் கொடுக்கும். “நேற்றுவரை விக்கி, பக்கி என்று பிரிந்து நின்ற எல்லோரும் சிங்களவர்களுக்கு எதிரான அரசியல்யுத்தம் என்றவுடன் ஒன்றாகிவிட்டார்கள் பார்த்தீர்களா” – என்று சிங்களத்துக்கு ஒரு நடுக்கம் வரும். வரவேண்டும்.
மும்மத தலைவர்கள் – பல்கலைக்கழக சமூக பிரதிநிதிகள் போன்ற பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளுடனும் சந்திப்பொன்று அமைந்தால் இன்னும் சேமம்.
இதன்பிறகு, கொழும்பில் ஊடகவியலாளர் மாநாடு ஒன்றினை கூட்டி, சம்பந்தர் தனது முடிவை அறிவிக்கலாம். தமிழர் தரப்பின் ஆதரவானது நாடாளுமன்றின் பெரும்பான்மையை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கப்போகிறது என்பது உறுதி என்றபடியால், கதிரையை கொஞ்சம் முன்னுக்கு தள்ளி மைக்குக்கு கிட்டவாக வந்திருந்து சம்பந்தர் திமிராகவே பேசலாம்.
“தமிழர் தரப்பின் நியாயபூர்வமான கோரிக்கைகளும் அபிலாஷைகளும் யுத்தம் முடிந்து இதுநாள்வரைக்கும் முழுமையாக செவிசாய்க்கப்படாத ஒரு நிலையில் – தமிழர் தரப்பு தென்னிலங்கை தரப்புக்கு தொடர்ந்தும் நிபந்தனையற்ற ஆதரவினை கொடுத்து கொடுத்து களைத்துப்போயுள்ள நிலையில் – தமிழர் தரப்பினை சிங்களத்தரப்பு தொடர்ந்தும் எடுப்பார் கைப்பிள்ளையாக பயன்படுத்துவதற்கு துணிந்திருக்கும் நிலையில் –
நாங்கள் “X” என்ற தரப்புக்கு (அது கூட்டமைப்பு முடிவெடுக்கும் தரப்புக்கு) எமது ஆதரவை வழங்குவதற்கு முடிவெடுத்திருக்கிறோம். ஆனால், ஆறு மாத காலத்தில் நாங்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை ஆளப்போகும் அரசு தீர்த்துவைக்காவிட்டால், அரசுக்கான எங்களது ஆதரவை நாங்கள் வாபஸ் பெறுவோம். ஆட்சி கவிழும். நாடு தேர்தலுக்கு போகும்”
ஆட்சி கவிழ்ந்து நாடு தேர்தலுக்கு போனாலும்கூட சம்பந்தரின் இந்த அறிவிப்பினால் புத்துயிர் பெற்ற தமிழ்மக்கள் மீண்டும் தமிழர் தரப்பை தீர்மானிக்கும் சக்தியாகவே பதவிக்கு கொண்டுவருவர். சிங்களத்தரப்பு திரும்பவும்கூட ஓடி ஓளிந்துவிடமுடியாத நிலைக்குள் அகப்படும்.
இந்த முடிவினை தமிழர் தரப்பு எடுத்துக்கொண்டால் –
1) தமிழர் தரப்பின் ஒற்றுமையை – ஒட்டுமொத்த குரலை வெளிக்காண்பித்ததாக அமையும்.
2) தென்னிலங்கையில் தற்போது ஏற்பட்டிருக்கும் குழப்பத்தில் ‘தவிச்ச முயல் அடித்த கதையாக’ தமிழர்களும் பொறுப்பற்ற வகையில் நடந்துகொள்ளாமல், அரசியல் முதிர்ச்சியோடு நடந்துகொண்ட உதாரணமா அமையும்.
3) சிங்கள மக்களுக்கு மாத்திரமல்லாமல், சர்வதேச சமூகத்துக்கும் மிகத்தெளிவானதொரு செய்தியைக்கூறவதற்குரிய நல்ல சந்தர்ப்பமாக தற்போதைய சூழலை மாற்றியமைக்கமுடியும்.
4) சம்பந்தர் இவ்வளவு காலமும் கடந்துவந்த பொறுமைக்கு ஒரு நியாயத்தைக்கூற முடியும்.
இவை எதுவும் வேண்டாம். வரப்போகும் தேர்தல்களுக்கு எமக்கெல்லாம் யார் காசு தரப்போகிறார்கள். பிரச்சார பணத்தை இப்படியான தருணங்களில்தானே உழைத்து சம்பாதிக்கமுடியும் என்ற நோக்கத்துடன், பெட்டிகளை வாங்கிக்கொள்வதில் தொடையை தட்டிக்கொண்டு வரிசையில் ஓடிப்போய் நிற்க விரும்பினால் அதுவே நம் தலைவிதி என்று நொந்துகொள்ளவேண்டியதுதான்.
(ப. தெய்வீகன்)