கொரோனாவின் அடுத்தடுத்த அலைகளுக்குப் பின்னர், என்ன செய்வதென்று தெரியாமல் பித்துப்பிடித்தவர்கள் போலிருக்கும் பலரும், கொரோனா வைரஸ் தொற்றிக்கொள்ளாதிருக்கத் தங்களுக்குத் தெரிந்தவற்றையும் அக்கம் பக்கத்தினர் கூறுவதையும் செய்யத் தொடங்கிவிட்டனர்.
இந்தியாவில் மக்கள் பிரதிநிதியொருவர், கோமியத்துடன் கொஞ்சமாய் நீரையும் சேர்த்துப் பருகினார், அந்தப் புகைப்படமும் காணொளியும் வைரலானது. அதையடுத்து, கொஞ்சம்கூடச் சிந்திக்காமல், அதை அப்படியே பலரும் செய்யத் தொடங்கிவிட்டனர். இது முட்டாள்தனமான மூடநம்பிக்கையாகும். ஆனால், அச்செயல்களை எல்லாம் படம்பிடித்துக் காட்டுவதுதான், இன்னும் முட்டாள்தனமானதாகும்.
விஞ்ஞான உலகில் வாழும் நாம், ஒரு செய்தியை விஞ்ஞான எடுகோள்களுடன், தங்களுக்குத் தாங்களே தர்க்கிக்க வேண்டும். இல்லையேல், மூடநம்பிக்கைகளுக்குள் மூழ்கி, விஞ்ஞானத்திலிருந்து தூரவிலகிச் சென்று, சூன்யமாகிவிடுவோம். நம்பிக்கை வைக்கவேண்டியவற்றைப் பலமாக நம்பி, ஏனையவற்றின் பின்னால் ஓடாதிருத்தலே உசிதமானது.
இந்தியாவில் மட்டுமன்றி, இலங்கையிலும், ‘கொரோனா பாணி’, ‘மண் சட்டிகளை ஆறுகளில் போட்டுடைத்தல்’ உள்ளிட்டவையும் மேற்கொள்ளப்பட்டன. எனினும், பெரும்பாலான மக்கள் அதன் பின்னால் செல்லாமையால், ‘கொரோனா பாணி அலை’, ‘மண் சட்டிகளை ஆற்றில் போட்டுடைக்கும் அலை’ ஆகிய அலைகளுக்கு தாழ்ப்பாள் இடப்பட்டன.
வீடுகளுக்குள்ளே முடங்கி இருக்காமல், பொதுவெளிகளில் அவசியமின்றி சுற்றித்திரிந்தால், கொரோனா நிச்சயம் தொற்றிக்கொள்ளும். ஆகையால், முழுநாட்டையும் முடக்குவதற்கு வழிசமைத்துவிடாமலும், மூடநம்பிக்கையை கைவிடுவதும் அவரவர் கைகளிலேயே உள்ளன. இரண்டு மூன்று தசாப்தங்களாக எத்தனையோ வைரஸ்கள் உலகநாடுகளில் உருவாகின. முறையான சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி, தேவையான தடுப்புமருந்துகளை ஏற்றிக்கொண்டமையால், முழுவீச்சில் அவையெல்லாம் தாக்கத்தைச் செலுத்தவில்லை. அப்போதெல்லாம் விஞ்ஞானமே மெய்ஞானமானது.
ஆகையால், அரசியல் இலாபங்களுக்காக அல்லாது, மக்களின் உயிர்களைக் காப்பாற்றுவதற்காக, ‘தடுப்பூசி அரசியலை’ கைவிட வேண்டும். மக்களிடத்தில் நம்பிக்கையை ஊட்டவேண்டும். சுகாதார வழிமுறைகளைக் கட்டாயம், கடைப்பிடித்து ஏனையோரையும் கடைப்பிடிக்கச் செய்யவேண்டும். எமக்கு முன்னே நிற்பது ‘கொரோனா’ எனும் ஒரேயோர் எதிரியென்பதை நினைவிற்கொண்டு, சிந்தனைகளை எல்லாம் ஒன்றுகுவித்துச் செயற்பட்டால் மட்டுமே, கொரோனாவை வெல்லலாம்; இல்லையேல் கொரோனா பலரையும் கொல்லலாம்.
வைரஸ் தொற்றுவதைத் தவிர்க்க, கை வைத்தியங்கள் சிலவற்றைக் கடைப்பிடிக்கலாம். ஆனால், அதுவே நிரந்தர வைத்தியமாகிவிடாது. நவீன வைத்தியத்துறைக்குள் ஒவ்வொன்றுக்கும் மருந்துகள், தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு, ஏற்றப்படுகின்றன. தடுப்பூசியே தடுக்கும்.
(Tamil Mirror)