கிழக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபரை அழைத்து, பெரியகல்லாற்றில் உயிரிழந்த சிறுமியின் மரணம் தொடர்பான தகவல்களையும் கேட்டறிந்துகொண்ட ஆளுநர், மேற்படி சம்பவம் தொடர்பாக உடனடியாக தனி பொலிஸ் குழுவை அமைத்து விசாரணையை நடத்துமாறும் கேட்டுக்கொண்டார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெரிய கல்லாற்றில் மரணித்த சுதாகரன் அஸ்வினி எனும் சிறுமியின் மரணமானது இனம், மதம், மொழி கடந்து அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியிருந்தது.
சிறுமியின் மரணம் தொடர்பில் முறையான விசாரணை நடத்தக்கோரியும் சம்பந்தப்பட்டவர்களை கைதுசெய்யுமாறு வலியுறுத்தியும், பெரியகல்லாறு பிரதான வீதியில் கவனயீர்ப்பு போராட்டம், கடந்த புதன்கிழமை (13) முன்னெடுக்கப்பட்டது.
இருந்தபோதிலும், சிறுமியின் மரணத்துக்கு நீதி கிடைக்கும் வகையிலான செயற்பாடுகள் எதுவும் ஆக்கபூர்வமாக இடம்பெறாத நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பில் கிழக்கு மாகாண சுற்றுலாத்துறைப் பணியகத்தின் தலைவர் த.ஹரிப் பிரதாப், கிழக்கு மாகாண ஆளுநரின் கவனத்துக்கு, நேற்று முன்தினம் (18) கொண்டுசென்றார்.
இதனைத் தொடர்ந்து உயிரிழந்த சிறுமியின் மரணத்தின் பின்னணியை விரிவாகக் கேட்டறிந்த கிழக்கு மாகாண ஆளுநர், உடனடியாக கிழக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபரை நேற்று (19) அழைத்து, சிறுமியின் மரணத்துக்கான விசாரணையை துரிதப்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.
இதற்கு அமைவாக விசாரணை துரிதப்படுத்தப்பட்டு, குற்றவாளிகள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, தண்டணை பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்பதே அனைவரினுடைய எதிர்பார்ப்புமாகுமென, அளுநர் தெரிவித்தார்.