இறுதியாக, 150 வருட பிரித்தானிய ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு, ஓர் ஆசிய வலய நாடு என்ற வகையில், அப்போது சர்வதேச ரீதியாக வளர்ச்சியடைந்திருந்த அரசியல் கட்சி முறை, பாராளுமன்ற ஆட்சிமுறை, அரசியல் யாப்பு என்பனவற்றின் மூலம் சுதந்திரமான அரசென்றை நோக்கி முன் செல்வதற்கு முடிந்தது.
இலங்கைக்கு சுதந்திரம் வழங்குவதென பிரித்தானியா முடிவெடுத்ததை அடுத்து, 1947ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் அன்றைய பிரதமர் டி.எஸ். சேனநாயக்கவுடன் மூன்று ஒப்பந்தங்கள் கைச்சாதிடப்பட்டன.
முதலாவது, பாதுகாப்பு ஒப்பந்தம். இதன்படி, திருகோணமலை கடற்படை முகாமிலும் கட்டுநாயக்க விமான நிலையத்திலும் பிரித்தானியப் படைகளை வைத்திருப்பதற்கு இலங்கை இணங்க வேண்டும்.
இரண்டாவது, வெளிவிவகார ஒப்பந்தம். இதன்படி, பிரித்தானிய ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்ற நாடுகளுடன் தொடர்புகளை மேற்கொள்ளும் போது, பிரித்தானிய விதிக்கும் நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
மூன்றாவது, அரச ஊழியர்கள் தொடர்பான ஒப்பந்தம். இதன்படி, இலங்கையில் தொடர்ந்தும் கடமையாற்றும் பிரித்தானிய ஊழியர்களுக்கு ஓய்வூதியம், ஊழியர் சேமநல நிதி என்பவற்றைத் தொடர்ச்சியாக வழங்க, இலங்கை சம்மதிக்க வேண்டும் என்பனவாகும். இதன் பிரகாரமே இலங்கை சுதந்திர சட்டம் அமலுக்கு வந்தது.
இலங்கை சுதந்திர சட்டம் இவ்வாறு கிடைத்தாலும், 1947- 1972 வரை சோல்பரி அரசியல் யாப்பே நடைமுறையில் இருந்துள்ளது. இதன் பிரகாரம், இலங்கை சுயாதீன முழுமையான சுதந்திரத்தைப் பெற்றிருக்கவில்லை.
இலங்கையில் பிரிதித்தானிய முடியே தொடர்ந்தும் செயற்பட்டமையும் ஆட்சி நடவடிக்கைகளில் பிரித்தானியாவின் தலையீடு இருந்ததாகவும், அதாவது சட்டத்துறை, நீதித்துறை, நிர்வாகத்துறை போன்ற மூன்று முக்கிய துறைகளிலும் பிரித்தானியாவின் செல்வாக்கு காணப்பட்டது.
இவைகளைக் கடந்து, தன்னாதிக்கம் கொண்ட சுதந்திர யாப்பொன்றின் தேவை பற்றி, அன்றைய தலைவர்களினது விழிப்பால், 1972ஆம் ஆண்டு அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது.
கம்யூனிஸ, சோசலிஸ, தாராண்மைவாதிகளின் ஆதரவுடன் அமைக்கப்பட்ட புதிய அரசியலமைப்பில் தமிழரசுக் கட்சியின் சிபாரிசுகள் புறக்கணிக்கப்பட்டன. தமிழ்ச் சமூகத்தின் நியாயமான கோரிக்கைகளை, அரசியலமைப்பு சபை புறக்கணித்தது. சிறுபான்மையினர் புறக்கணிக்கப்பட்ட அரசியலமைப்பாக அது இருந்தது. அன்றைய ஆட்சியின் தன்னிச்சையான யாப்பாகவே அது இருந்தது. கம்யூனிஸ்டுகள், சோசலிஸ்டுகள் கூட, சிறுபான்மையினரின் உரிமைகளை அங்கிகரிக்காதது துரதிர்ஷ்டமே!
அதன்பின்னர், 1978ஆம் ஆண்டு புதிய அரசியலமைப்பில் மனித உரிமைகள், அடிப்படை உரிமைகள் என்பன இருந்தாலும், அதிகாரப்பகிர்வு கைகூடவில்லை. இதிலும்கூட, அப்போதைய தமிழர் விடுதலைக் கூட்டனியின் சிபாரிசுகள் புறக்கணிக்கப்பட்ட அரசியலமைப்பாகவே இருந்தது. அன்று தொடக்கம் இன்று வரை, இந்த அரசியலமைப்பின் குறைபாடுகளும் சிலபோது அரசியலமைப்பிலுள்ள விடயப் பரப்புகளை, இந்நாட்டின் பெரும்பான்மை சமூகத்தவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் தலைவர்களால் வெறும் அரசியல் நோக்கங்களுக்காக முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாமல் போனதால் ஏற்பட்ட அரசியல், சமூக விபரீதங்களை நன்குணர்ந்து வைத்திருக்கிறோம்.
அதுபோக, யுத்த வெற்றிக்கு அப்பாலும் இந்நாட்டில் மிகக் குறுகிய கால இடைவெளியில், இந்நாட்டில் ஏற்பட்ட பிறிதோர் அச்சம் இன்னும் தொடர்கிறது. புதிய அரசியலமைப்பாக்கம். அதுவெறும் அச்சம் அல்ல; இந்நாட்டில் சிறுபான்மை சமூகங்களின் இருப்புக்கான கேள்விகளை விட்டுச் செல்கின்றது. மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் நிறைவேற்று அதிகாரம் கொண்ட தற்போதைய ஜனாதிபதி, தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி பாராளுமன்ற தெரிவுக் குழுவுக்குப் புறம்பாக சட்டத்தரணிகளைக் கொண்ட குழுவொன்றை நியமித்து இருப்பது, பல கலந்துரையாடல்களுக்கு வழிவகுத்துள்ளது. திஸ்ஸ விதாரன போன்றவர்கள் வெளிப்படையாகவே நிலைபேறான அடைவுகளை சாத்தியப்படுத்தாது என்று கூறுகிறார்.
அதேபோல, தமிழரசுக் கட்சியினருடன் கலந்துரையாடலுக்கான வாய்ப்பை ஏலவே வழங்கிய ஜனாதிபதி, காலவரையரையின்றி ஒத்திவைத்ததுடன், இன்றுவரை சந்தர்ப்பம் வழங்காது இருப்பதன் விளைவு, 13ஆவது திருத்ததை அமல்படுத்துமாறு கோரி, இந்திய பிரதமருக்கு கடிதம் சமர்ப்பிக்குமளவும் இந்தியாவின் சிறப்பு பிரதிநிதியொருவரைக் கோரும் நிலை வரையும் நீண்டு சென்றுள்ளது. இந்த நம்பிக்கையீனங்கள் முதலில் களையப்பட வேண்டும்.
நாட்டின் சிறுபான்மை சமூகமொன்றின் உள்ளக சமவாய்ப்புக்கான பரப்புகளை, பிறர் தலையீட்டில் தேட வேண்டிய நிலை, சுதந்திர இலங்கையில் 74 வருடங்கள் நீட்சியாகத் தொடர்கிறது. ஐயப்பாடுகள் களையப்பட்டு, நம்பிக்கைகள் துளிர் விடும் நிலைபோறான அடைவுகளை சாத்தியப்படுத்தும் சுதந்திர வருடமாக இந்த வருடம் அமையட்டும்.
2019இல் இடம்பெற்ற அரசியலமைப்பு மீறல்கள் கூட, ஒரு சாதாரண விடயமாகப் பார்க்கப்படுகிறது. எந்தவித கேள்விகளுக்கும் அவதானிப்புகளுக்கும், குற்றம் சார்ந்த விடயப் பரப்புக்குள்ளாலும் உள்வாங்கப்படாத விடயமாக தொடர்கிறது. இவை தொடர்பாக, இந்நாட்டிலுள்ள ஜனநாயக சமூகம் சிந்திக்க வேண்டும்.
பன்மைச் சமூகத்தின் இயல்பை உள்வாங்காத, பௌத்த சமூகத்தின் மூடிய தேசிய விழிப்புணர்வு அல்லது குறுகிய தேசிய உணர்வு, இந்நாட்டுக்கு மிக ஆபத்தான விடயங்களாகும். இதில், மிக கவலையளிக்கும் விடயம், இந்நாட்டிலுள்ள சக்தி வாய்ந்த பௌத்த பிரிவனாக்கள், சங்கைக்குரிய தலைமை தேரர்கள் மௌனமாக இருப்பதும் கலந்துரையாடல்களுக்குரிய சந்தர்ப்பங்களை ஏற்படுத்தாமலிருப்பதும் அரசியல் ரீதியாக உணர்வுவயப்பட்டு, நிலைமைகளை அங்கிகரிப்பதும் துரதிர்ஷ்டவசமான விடயங்களாகும். இந்த மனோபாவத்திலிருந்து விடுபட வேண்டும். இந்நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து, பன்மைத்துவத்தை அங்கிகரித்து, புரிதலினூடாக, ஒருமித்த தேசிய உணர்வை வெளிப்படுத்தாத போது, இந்நாடு முன்னேறுவது பற்றி சிந்திப்பதும் கொள்கைவகுப்பதும் பயனளிக்காத செயல்களாகும்.
பிரஜைகள் தங்களின் முயற்சியாண்மைகளை இந்நாட்டுக்கு வழங்க வேண்டும். சிறுபான்மை சமூகங்களிலிருந்து கட்டமைக்கபட்ட இனவாத செயற்பாடுகள் இலங்கையில் குறைவு. சிறுபான்மை சமூகங்கள், முற்றாக இதிலிருந்து தூர விலகி இருக்க வேண்டும். அவ்வாறு எதும் நடக்கும் பட்சத்தில், இந்நாட்டின் நீதிக்கு முன்நிறுத்தப்பட வேண்டும்.
தற்போது, ஆயுத போராட்ட தோல்வியின் பின்னர், தமிழ் சமூகமும் ஜனநாயக பங்கேற்பை நோக்கியே திரும்பியிருக்கிறது. அதிலிருந்து அவர்களைத் தூரமொதுக்க முடியாது. இதைப் பௌத்த சமூகம், சரியாக விளங்கிக்கொள்ள முயற்சிக்க வேண்டும். இதைப் புரிந்து கொண்டாலே சுதந்திர தினத்தின் மகத்துவம் அர்த்தப்படும்.
இலங்கையின் தேசியவாதம், அந்நிய ஆட்சிக்கு எதிரான போராட்ட வாசகமாகவே சுதந்திரத்துக்கு முன்னிருந்தது. இன்று, ஏதோ ஒரு வடிவில், உள்ளக ரீதியான சுதந்திரம் பற்றிப் பேசுகிறோம். உள்ளக யுத்தம், கிளர்ச்சிகள் இன்றியே பயங்கரவாத தடை சட்டம், நீண்ட நாள்களாக அமலில் உள்ளது. இது வெகுஜன பங்கேற்புக்கான சந்தர்ப்பங்களைக் குறைக்கின்றது.
இடதுசாரிக் கட்சிகளும் ஆளுமைகளும் உள்ளக இனவாத மேலோங்குகைகளைத் தணித்து, சுதந்திரப் போராட்டத்தில் பன்மை சமூகத்தை இணைத்துக் கொண்டு வெற்றி கண்டது. துரதிர்ஷ்டவசமாக, சுயநல அரசியல் நோக்கங்களுக்காகவும் அதிகார அரசியலுக்காகவும் இன்றுள்ள அதே கொள்கைகளைக் கொண்ட இடதுசாரிக்காரர்கள், உள்ளக இனவாத செயற்பாடுகளைக் கண்டும் காணாமலும் இருப்பதும் இனவாத அமுக்க குழுக்களுடன் தொடர்புகளை வெளிப்படையாக வைத்திருப்பதும் நாட்டின் நலனை பாதிக்கும், மிகக் கீழ் தரமான அரசியலாகும்.
நாட்டின் மக்கள் சார்ந்து, சமூகக் கொள்கை சார்ந்து, அரசாங்கம் கூடிய கவனம் செலுத்தாமல், ஒருவகை தனித்த முடிவுகளை நடைமுறைப்படுத்தி வருவதால், பல பிரச்சிணைகள் உருவெடுத்த வண்ணமுள்ளன.
வாழ்க்கைச் செலவு, அத்தியாவசிய பொருட்களுக்கான வரிசைகள், டொலர் பிரச்சினை, முறையற்ற நிதி மற்றும் அரச நிர்வாகம், தேசிய சொத்து விற்பனைகள், சர்வதேச உறவுகள் போன்று பல சிக்கல்களைச் சந்தித்து வரும் நிலையில், ஆளும் தரப்பின் பங்காளர்களாக இருந்து கொண்டு, இடதுசாரிகள் மக்கள் சார்ந்து செயற்பட வேண்டிய அரசியல் தற்றுணிபை இழந்து இருக்கிறார்கள்.
இன்று சிங்கள தேசிய வாதம், சிங்கள தேசம், பௌத்த தேசம், பௌத்த தேசிய உணர்வு, தானாகக் குறுகிய பார்வையைத் தன்னகத்தே வரையறுத்துக் கொண்டுள்ளமை பிழை என்பதை உணரும் காலம், அதை வடிவமைத்தவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
அஹிம்சை போதிக்கும் பிரிவினரிலிருந்து துவம்சமும் துவேசமும் தீவிரமாக வெளிப்பட முடியாது; எங்கு கோளாறு ஏற்பட்டது என்பதை, இந்தச் சுதந்திர தினத்தில் சிந்தித்து, போக்கைச் சரிசெய்ய முன்வருவது, உள்ளக சுதந்திரத்தின் அர்த்தத்தை யதார்த்தமாக்கும்.
மக்கள் நலன் சார்ந்த கொள்கைகளாலும் சமூக மேம்பாட்டு கரிசனையாலும் மனிதாபிமான உணர்வாலுமே ஒருமதத் தலைவரின் சமூக அடையாளம் வடிவம் பெற வேண்டும்.
பெரும்பான்மை, சிறுபான்மை இன அரசியல்வாதிகள், சாதாரண மக்களுக்குள் இருக்கும் அடிப்படையான நிலைப்பாடுகளை, நேர்மையாக வளர்த்தெடுத்து, சமூக மேம்பாட்டை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்க வேண்டும். சமூக விழிப்பியல் மேலோங்கிய நாட்டுப் பிரஜைகளாகத் தங்களைத் தாமே தகவமைப்படுத்திக் கொள்ள, இன்றைய சுதந்திர தினத்தில் உறுதி பூண்டு, ஐக்கியமான தேசிய உணர்வை வெளிப்படுத்த, எம்மாலான முயற்சிகளை மேற்கொள்ளுவோம்.
ஐக்கிய இலங்கைக்குள், ஏனைய இனத்தவர்களுக்கு பாதுகாப்பற்ற தேசியவாதமாக, மேலெளும் தேசியவாதங்களைத் தோற்கடிப்போம். இந்நாட்டில் புத்திஜிவித்துவ முற்போக்கு பௌத்த தேரர்கள் உள்ளிட்ட சமய தலைவர்கள், இது பற்றித் தீவிரமாகச் சிந்திக்க வேண்டும்.
இல்லையெனில், இந்நாட்டின் கிராமப்புற சாதாரண குடிமகனிலிருந்து, திட்டமிடப்படாத இனவாத செயற்பாடுகள் வெளிவருவதைத் தடுக்க முடியாமல் போகும்.
இனவாத அரசியலின் தீவிரப் போக்கைத் தணிப்பது, சாதாரண பொது மக்கள் சார்ந்த விடயம். வாக்களிக்கும் மக்கள், தங்கள் வாக்குரிமைகளை விழிப்பு நிலையில் பிரயோகிக்க வேண்டும். இனத்துவ ரீதியான சிந்தனைகளிலிருந்து வெளிவந்து, பொதுவெளியில் சகல இனமக்களும் திறந்த மனப்பான்மையுடன் சிந்திக்க வேண்டும்.
சந்தர்ப்பவாதம் என்பது, மிகப் பெரிய ஆபத்தான விடயம். இது பல சந்தர்ப்பங்களில் பௌத்த சமூகத்திலிருந்து வெளிப்பட்டாலும் அவ்வப்போது தமிழ், முஸ்லிம் சமூகங்களில் இருந்தும் வெளிப்பட்டும் வருகின்றது. இதிலிருந்தும் நாங்கள் மிக அவசரமாக விடுபட வேண்டும்.
74ஆவது சுதந்திர தின வருடம், தொடர்ச்சியான சவால் நிறைந்த வருடமாக இருக்கப்போகிறது. ஒருபுறம், ஏலவே உள்ள கோவிட்-19 பெருந்தொற்று சவாலும் உள்ளக ஆட்சி நிர்வாகத்தால் ஏற்படும் சவாலும் என்று இவை தொடரப் போகின்றன.
குடிமக்களாக எமது கடமைகளையும் பொறுப்புகளையும் யதார்த்தமான பங்கேற்புடன் முழுமனதாக நிறைவேற்றுவோம்; ஒன்றினைந்து தேசிய வலுவை சக்திப்படுத்துவோம்.
‘சுதந்திரம் இல்லாத வாழ்க்கை, உயிர் இல்லாத உடல் போன்றது’ -கலீல் ஜிப்ரான்.