ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி மாணவர்கள் / இளைஞர்கள் தொடங்கிய போராட்டம் தமிழகம் முழுவதும் பரவியது. இதன் வீச்சு உலக நாடுகளில் தமிழர்கள் வசிக்கும் இடமெங்கும் பரவியது. லட்சக்கணக்கான மாணவர்களும் இளைஞர்களும் ஓரணியாகத் திரண்டதால் ஆங்காங்கு ஆதரவாக பெற்றோர், பொதுமக்கள் குடும்பங்களுடன் கலந்து கொண்டனர். நாளுக்கு நாள் போராட்டம் விரிவடைந்தது. ஒருகட்டத்தில் நாற்பது லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள், இளைஞர்கள், பென்கள், குழந்தைகள் வந்ததாலும் இந்த அறவழிப் போராட்டம் இரவு – பகல் என ஒரு வாரம் எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் நடந்தது உலகின் பார்வையையே போராட்டத்தின் பக்கம் திருப்பியது.
உலகம் வியந்த இந்த அறப் போராட்டத்தின் காரணமாகவே ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், இவ்வளவு பெருமையும் இளைய சமுதாயத்துக்குச் சென்று விடக்கூடாது என்பதால், அவர்கள் கலைந்து செல்வதற்குக் கூட கால அவகாசம் தராமல் கடுமையான தாக்குதல் அவர்கள் மீதும், மெரீனாவைச் சுற்றியிருந்த குடியிருப்புப் பகுதிகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. சென்னை மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் வன்முறை அவிழ்த்து விடப்பட்டது.
மாணவர்களும் அவர்களுக்குப் பாதுகாப்பு அரணாக இருந்த உழைக்கும் மக்களும் கண்மூடித்தனமாகத் தாக்கப்பட்டனர். 6 நாட்கள் உலகம் வியக்க அமைதியாக நடந்த அறப்போராட்டம் சில மணி நேரத்தில் போராட்டக் களமாக மாறியதற்கு அரசும் காவல்துறையுமே காரணம். சட்ட மன்றத்தில் ஆளுநர் உரையின்போது, ’மாணவர்கள் அற வழியில் போராடினார்கள்’ என்று கூறினார். ஆனால், சில மணித்துளிகளில் போராட்டக் களத்தில் இருந்த மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அமைதி வழியில் போராடிய மாணவர்களுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்ளும் அதே நேரத்தில், கைது செய்யப்பட்ட மாணவர்கள், பொது மக்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். கண்மூடித்தனமான தாக்குதலை மாணவர்கள் மீதும் பொதுமக்கள் மீதும் கட்டவிழ்த்து விட்ட காவல்துறையை வன்மையாகக் கண்டிப்பதுடன், பணியிலிருக்கும் உயர்நீதி மன்ற நீதிபதியின் தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைக்கவும் கேட்டுக் கொள்கிறோம்.
மாணவர்கள் நடத்திய அறப்போராட்டத்துக்கு வாழ்த்து தெரிவிக்கவும் மாணவர்கள், பொதுமக்கள் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்கவும் மேற்கண்ட கோரிக்கைகளை எதிர்வரும் 27.01.2017 வெள்ளி அன்று பிற்பகல் 3 மணிக்கு சென்னை சேப்பாக்கம், அரசு விருந்தினர் மாளிகை எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. பாடலாக, கவிதையாக, இசையாக, சிறுகதையாக, உரைவீச்சாக நமது வாழ்த்தினையும், கண்டனங்களையும் கோரிக்கைகளையும் முழங்குவோம்.
(போராட்டக் குழு)