சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸின் தாக்குதல் உலகம் முழுவதும் பரவிவிட்டது. உலக சுகாதார அமைப்பின் அதிகாரபூர்வமான அறிக்கையின்படி நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை லட்சத்தை தாண்டி, நாலாயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமலுக்கு வந்துவிட்டது. போர் மூளாத காலகட்டத்தில் ஒரு ஐரோப்பிய நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்படுவது இதுவே முதல்முறை. பிரான்ஸ் நாட்டில் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்படுகின்றன.
மூன்றே மாதங்களில் உலகம் முழுமைக்கும் ஒரு நோய் பரவிவிட்டது மனிதகுல வரலாற்றிலேயே இதுதான் முதல்முறையாகும். மனிதகுலம் மொத்தமும் பாதிப்புக்குள்ளாகும் அபாயத்தினால் இந்தச் சூழலை மூன்றாம் உலகப்போர் எனக் குறிப்பிட்டாலும் அது மிகையாகாது. கத்தி, ரத்தம், சப்தமின்றி மூண்டிருக்கும் இந்தப்போர் மனிதனுக்கும் கிருமிக்குமான போர்!
புதிய நோய்கள் அறியப்படும்போதெல்லாம் உலக சுகாதார அமைப்புகளின் கவனம் ஜெர்மன் நாட்டின் வடபகுதியில், பால்டிக் பெருங்கடலில் அமைந்திருக்கும் சின்னஞ்சிறு தீவான ரெம்ஸ் தீவுக்குத் திரும்பும். இங்குதான் உலகின் மிகப் பழைமையான கிருமி ஆராய்ச்சி மையங்களில் ஒன்றான பிரெடெரிக் லோப்லர் ஆராய்ச்சி மையம் அமைந்திருக்கிறது.
ஹிட்லரின் நாஜி அரசாங்கத்தால் ரசாயனப்போர் ஆராய்ச்சிக்காக ஆரம்பிக்கப்பட்ட இந்த மையம் இன்று புதிய நோய்க்கிருமிகளின் தன்மையையும், அவை மிருகங்களின் மீது ஏற்படுத்தும் பாதிப்புகளையும் ஆராய்வதில் முக்கியப் பங்காற்றுகிறது! மஞ்சள் காமாலை, ரேபீஸ், காலரா தொடங்கி எய்ட்ஸ் எபோலா வரை நூற்றுக்கணக்கான கொடிய நோய்க்கிருமிகளுடன், மனிதனுக்கு நோயை பரப்பும் கொசுக்கள், வவ்வால் போன்ற உயிரினங்களும், ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்படும் வளர்ப்பு பிராணிகளும் இத்தீவில் அடக்கம்.
மனிதனுக்கு பரவும் நோய்க்கிருமிகளை வளர்ப்பு பிராணிகளுக்கு செலுத்தி இங்கு செய்யப்படும் ஆராய்ச்சிகள் நோய்த்தடுப்பு மருந்து கண்டுபிடிப்புக்கு மட்டுமல்லாது வருங்காலங்களில் புதிதாய் பரவும் நோய்களை விரைவாகக் கட்டுப்படுத்தவும் இன்றியமையாதவைகளாகும்.
உதாரணமாக, கொரோனா வைரஸ் ஆடு மாடு கோழி போன்ற வளர்ப்பு பிராணிகளுக்கும் பரவுமா? கிருமி தாக்கிய பிராணிகளை நெருங்குவதாலோ அல்லது அவற்றின் மாமிசத்தை உண்பதாலோ மனிதனுக்கு தொற்றுமா? வளர்ப்பு பிராணிகளின் தொழுவங்களிலும் கொட்டகைகளிலும் கிருமிகள் தேங்குவதின் மூலம் அவற்றைப் பராமரிக்கும் மனிதனுக்கு பரவும் வாய்ப்புகள் உண்டா என்பது போன்ற கேள்விகளுக்கான விடைகளுக்கு இங்கு நிகழும் ஆராய்ச்சிகள் மிகவும் அவசியமானதாகும்.
இத்தீவில் நூற்றுக்கணக்கான வைரஸ் கிருமிகள் அவற்றின் தன்மையைப் பொறுத்து நான்கு வகைகளாய் பிரிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன. இரண்டாம் வகையிலிருந்து நான்காம் வகை வரையிலான ஆபத்தான கிருமிகள் பல கதவுகளை கொண்ட காற்று புகாத அறைகளில், மைனஸ் எண்பதிலிருந்து மைனஸ் நூற்று தொன்னூறு டிகிரி குளிரூட்டப்பட்ட கலன்களில் உறைநிலையில் சேமித்து வைக்கப்பட்டிருக்கின்றன.
இரும்புக் கம்பி வேலி, முள் கம்பி சுருள் பாதுகாப்பு போன்ற பல அடுக்கு பாதுகாப்புடன் திகழும் இத்தீவில் உயிரியல் விஞ்ஞானிகள், மருத்துவர்கள் என நானூற்றுக்கும் அதிகமானோர் பணிபுரிந்தாலும், எபோலா, ஹென்ரா போன்ற மிகக்கொடிய நான்காம் வகை கிருமிகள் சிறை வைக்கப்பட்டிருக்கும் எல்லைக்குள் நுழையும் அனுமதி இந்த ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் தொடங்கி ஒரு பத்து பேருக்கு மட்டுமே உண்டு.
அவர்களும் தனியாகச் செல்ல முடியாது. பாதுகாப்பு காரணங்களுக்காக ஜோடியாய் செல்பவர்களுக்கு காற்றழுத்தத்துடன் கூடிய கவச உடை, அந்த உடையை கழற்றுவதற்கு முன்னால் வெளியேறும்போது பெனோல் எனப்படும் கார்போலிக் ஆசிட் கலந்த குளியல் என பல கட்டாயங்கள் உண்டு.
இத்தீவில் உபயோகப்படுத்தப்பட்ட எந்த ஒரு பொருளும் முழுமையான கிருமி நீக்கத்துக்குப் பிறகே வெளியே அனுப்பப்படும். கிருமி நீக்கத்தில் சிறு சந்தேகம் எழுந்தாலும் அந்தப் பொருள் அத்தீவிலேயே மின்சாரத்தின் மூலம் பொசுக்கப்பட்டுவிடும் !
இத்தனை பாதுகாப்புகள் மற்றும் கெடுபிடிகளுடன் திகழ்வதால் இத்தீவுக்கு “வைரஸ்களின் அல்கட்ராஸ் சிறைச்சாலை” என்ற பெயரும் உண்டு !
ஜெர்மனியில் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களிடமிருந்து எடுக்கப்பட்ட வைரஸ் கிருமிகளை சோதனைச் சாலையில் செயற்கை முறையில் பெருக்கி, ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்படும் மிருகங்களின் உடல்களில் செலுத்தி சோதனைகளை ஆரம்பித்துவிட்டது பிரெடெரிக் லோப்லர் ஆராய்ச்சி மையம்! காதலர் தினமான பிப்ரவரி 14-ம் தேதிதான் கொரோனா வைரஸ் இத்தீவுக்கு கொண்டுவரப்பட்டது என்பது ஒரு தகவல்.
சில மாதங்கள் நீடிக்கப்போகும் இந்தச் சோதனைகளின் அறிக்கை, தடுப்பு மருந்து கண்டுபிடிப்பில் முக்கிய பங்காற்றப்போவதுடன் நம்முடைய வருங்கால உணவுப் பழக்கங்கள் மற்றும் பிராணிகள் வளர்ப்பு முறைகளை நிர்ணயம் செய்வதிலும் உதவும்.
கொரோனா வைரஸ் மூன்றே மாதங்களில் உலகம் முழுமைக்கும் பரவியது பயமுறுத்தும் விஷயம் என்றாலும், அதைக் கட்டுப்படுத்தும் திறமைகளைக் கொண்ட சுகாதார அமைப்பு மற்றும் ஆராய்ச்சி மையங்களுடன் இன்றைய மனிதகுலம் திகழ்வது நம்பிக்கை கொடுக்கும் செய்தி.
பிணி, பஞ்சம், போர் என எத்தனையோ அவநம்பிக்கைகளை போராடி எதிர்த்து ஒழித்ததினால்தான் மனிதகுலம் இன்றும் காலூன்றி நிற்கிறது. கொரோனாவைக் கட்டுப்படுத்துவதுடன் நில்லாமல் இனி இதுபோன்ற நிகழ்வுகளை எதிர்கொண்டு முறியடிக்கும் திறன் கொண்ட மருத்துவ வசதி உலகின் கடைக்கோடி மனிதனுக்கும் கிடைக்கும் வசதியை ஏற்படுத்துவதில்தான் ஒட்டுமொத்த மனித குலத்தின் எதிர்காலமும் அடங்கியிருக்கிறது.