ஒருவரின் கருத்தை விமர்சிக்கவோ அல்லது அவரின் பதிவை மறுதலிக்கவோ இதனை எழுதவில்லை. நிலைமைகளை அலசி ஆராய்ந்து, நிதர்சனம் இது தான் என விளக்கம் தரும் எனது எண்ணமே இப்பதிவு. ஜெயலலிதா தனக்கு பின்னர் யார் அ தி மு க தலைமை என உருவாக்காதது போலவே, சம்மந்தர் அவர்களும் தனக்கு பின் த தே கூ வின் தலைமை யார் என தெரிவு செய்யாதது, அவரும் ஜெயலிதா போலவே தன்னை மட்டும் முன்னிலை படுத்தியே அரசியல் செய்வதாக, அந்தப் பதிவில் குறை கூறப்பட்டது. அவரின் கூற்று சரி பிழை என்பதற்கு அப்பால் ஒரு விடயம் உண்டு.
தமிழ் காங்கிரஸ், தமிழ் அரசு கட்சி, தமிழர் விடுதலை கூட்டணி என பரிணாமம் பெற்றபின், போதாது உங்கள் வேகம் என கூறி புறப்பட்ட இளையவர் இயக்கங்களில், எஞ்சியது ஐந்து அமைப்புகள் மட்டுமே. அவையும் கூட ஏக தலைமைத்துவ சிந்தனையால் செயல் இழந்த வேளை வந்தது, இலங்கை இந்திய ஒப்பந்தம். தப்பிப் பிழைத்தவர் எல்லாம் அரசியல் கட்சி தலைவர்கள் ஆகினர். அதுவரை இருந்த தலைமைகளை அரசியல் அமைப்பில் உருவான, ஆறாவது திருத்ததை ஏற்க கூடாது என கூக்குரல் எழுப்பி, கூண்டோடு பாராளுமன்ற பதவியை இராஜினாமா செய்ய தூண்டிய இளவல்கள், தங்கள் வேகத்தை இயக்க மோதல்களில் இழந்த பின், அதே பாராளுமன்றம் சென்றனர்.
ஆறாவது திருத்தத்தை ஜே ஆர் ஜயவர்த்தன நாட்டை பிரிவினைக்கு உட்படுத்தாதவர் எடுக்கும், சத்திய பிரமாணமாக வடிவமைத்தார். அவரைப் பொறுத்த வரை இது சிங்கள பௌத்த நாடு. தன் அரசியல் இருப்புக்காக தன் பிறப்பு மதத்தை கைவிட்டு, பௌத்த மதத்தை வரித்துக்கொண்டவர் அவர். மச்சவலி, சாணக்கியா இருவரின் மொத்த உருவம் அவர். அவரின் அரசியல் அபிலாசைகளை சட்டங்களை தனக்கு சாதகமாக வடிவமைத்து, நான் நினைத்தை முடிப்பவன் என்ற சாதனை படைத்தவர். தன்னை ஓய்வுக்கு பின்பும் சட்டம் தண்டிக்க முடியாதவாறு செயல்ப்பட்டு களனி ஆற்றில் சாம்பலாக கரைந்தவர்.
இத்தனை தந்திரோபாய மூளை கொண்டவரின் எதிர் அணியியில் அப்போது இருந்தவர் சாமானியர் அல்லர். சட்டம் படித்த பல அப்புக்காத்துக்கள். தமிழ் நாட்டு அரசியல் இவர்களையும் அடைமொழி கொண்டு அழைக்கும் நிலைக்கு உயர்த்தியது. தந்தை பெரியார் / தந்தை செல்வா. கல்லக்குடி கண்ட கருணாநிதி / தளபதி அமிர்தலிங்கம். நாவலர் நெடுஞ்செழியன் / சொல்லின் செல்வர் ராஜதுரை, இரும்பு மனிதன் நாகநாதன் உடுப்பிட்டி சிங்கம் சிவா, எல்லைக்காவலன் என நாமகரணம் கொண்டு ஜே ஆர் விரித்த வலையில் கூண்டோடு சிக்கி, அரசியல் மேடைகளில் மட்டும் முழக்கம் எழுப்பி, இளையவர் கைகளில் ஆயுதங்களை திணித்தவர்கள்.
1970 தேர்தலில் முக்கியமானவர்கள் அடைந்த தோல்வி ஒற்றுமைபற்றி எண்ணத்தூண்ட, அதுவரை எதிர் எதிர் மேடைகளில் முழங்கியவர் ஒரே மேடையில் தோன்றி தமிழர் விடுதலை கூட்டணி உதய சூரியன் சின்னம் என, தமிழ் அரசு கட்சியும், தமிழ் காங்கிரஸ் கட்சியும் தம் வீடு, சயிக்கிள் சின்னத்தை உறங்கு நிலையில் வைத்திருந்தனர். ஆயுத போராட்டம் உக்கிரமானது முதல் இந்திய இலங்கை ஒப்பந்தம் வரை உதயசூரியன் கிரகணம் பிடித்தது போலவே இருந்தது. மீண்டும் 1989 தேர்தலில் உதயசூரியன் வெளிப்பட்டும், அதற்குள் ஈபி ஆர் எல் எப், டெலோ புகுந்து ஆசனங்களை கைப்பற்றிவிட்டன. தமிழர் விடுதலை கூட்டணி தலைவர் அமிர்தலிங்கம் மட்டும் தேசிய பட்டியல் மூலமே பாராளுமன்றம் சென்றார்.
தொடர்ந்துவந்த தேர்தல்களில் தமிழர் விடுதலை கூட்டணி உட்பட, கட்சிகளாக மாறிய இயக்க தலைமைகளும் தனித்து தேர்தலை சந்தித்து, தமிழர் பிரதிநிதித்துவத்தை மற்ற இனங்களுக்கு தாரை வார்துக்கொடுக்கும் செயலை புரிந்தன. இந்த நிலைமையை மாற்றி அமைக்க முயன்ற கிழக்கு மாகாண பத்திரிகையாளரின் விடா முயற்சியால் உருவானதே, தமிழ் தேசிய கூட்டமைப்பு. அதற்கு புலிகளின் ஆசீர்வாதமும் அவர்களாலேயே பெற்றுக்கொடுக்கப்பட்டது. புலிகளும் தமக்கு ஒரு ஜனநாயக முகம் தேவை என்பதற்காக இவர்களை பயன் படுத்தினர். அதே போல இவர்களும் பதவி ஒன்றே இலக்காக கொண்டு அதுவரை இரத்த கறை படிந்தவர்கள் என ஒதுக்கியவரோடு ஒன்றுகலந்தனர்.
தமிழர் விடுதலை கூட்டணி, ஈபிஆர்எல்எப், டெலோ இணைந்த கூட்டமைப்பில், தமிழர் விடுதலை கூட்டணி தலைவர் ஆனந்தசங்கரி, தேர்தல் ஆணையத்தில் உதய சூரியன் சின்னத்தை முடக்கியதால் தமிழ் தேசிய கூட்டமைப்பு தேர்தல்களில், தமிழ் அரசு கட்சி என அதன் சின்னமான வீட்டு சின்னத்தில் களம் கண்டுவருகிறது. பல தடவைகள் தமிழ் தேசிய கூட்டமைப்பை பதிவு செய்யவும் அதற்கான சின்னத்தை பெறவும் முன்முயற்சிகள் எடுக்கப்பட்ட போதும் அது நிறைவேறவில்லை. கூட்டமைப்பில் இருக்கும் முன்னாள் போராட்ட இயக்கங்களின் விருப்பாக அது இருந்த போதும் தமிழ் அரசு கட்சிக்கு அது உவப்பானதாக இல்லை.
தமிழ் தேசிய கூட்டமைப்பில் தனக்கு இருக்கும் பிடிமானத்தை இழக்காது இருக்க, வெளிப்பார்வைக்கு கூட்டமைப்பாகவும் தேர்தல் செயல்பாட்டில் தமிழ் அரசு கட்சிக்கு முக்கியத்துவமும் கொடுப்பதுமே அவர்களின் சூத்திரம். தொகுதிப் பங்கீடு மட்டும் ஏனைய கட்சிகளுக்கு கணிசமாக வழங்கப்படும். வாக்குகள் சிதறடிக்கப்படாமல் இருக்கவும், பாராளுமன்ற ஆசனங்கள் பறிபோகாமல் இருக்கவுமே தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற போர்வை. மற்றப்படி கூட்டுத்தலைமை என்பது ஏட்டுச்சுரக்காய். ஆகவே தமிழ் தேசிய கூட்டமிப்பின் தலைமை என்பது தமிழ் அரசு கட்சி. தமிழ் அரசு கட்சியின் தலைவர் தான் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்.
அண்மையில் தமிழரசு கட்சி தலைவர் பதவியை துறந்த சம்மந்தர் அதனை, மாவை சேனாதிராஜா வசமாக்கி விட்டு, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆகினார். இங்கு அந்த கட்டுரையாளரின் கேள்வி சம்மந்தருக்கு பின் யார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் என்பதே. தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பது ஒரு தேர்தல் கூட்டு மட்டுமே. இதுவரை காலமும் அவர்களின் செயப்பாடுகள் அவ்வாறே தொடர்கின்றன. தமிழ் அரசு கட்சி காரியாலயம் மற்றும் கிளைகள் போலவே ஈபிஆர்எல்எப், டெலோ, புளட் காரியாலயங்களும் கிளைகளும் பரவலாக திறக்கப்படுகின்றன. அவரவர் கட்சி மாநாடுகள் தனித்தனியே தான் நடைபெறுகின்றன.
கூட்டமைப்பை பதிவிடும் தேவை தமிழ் அரசு கட்சிக்கு அவசியமற்றது. ஆனால் ஏனையவர்களுக்கு அது மட்டுமே அவர்களின் தொடர் இருப்பை தக்கவைக்கும். பிரபாகரனின் மறைவிற்கு பின்னர் தட்டிக்கேட்க ஆளில்லா நிலைக்கு தன்னை தயார்ப்படுத்திவருகிறது தமிழ் அரசு கட்சி. அதன் வீட்டு சின்னம் மட்டுமே வாக்காளரின் கண்ணுக்குத் தெரியும் அளவிற்கு, நிலமை உருவாகி வருகின்றது. கூட்டை விட்டு வெளியேறி தங்கள் சொந்த கட்சியிலோ அல்லது சின்னத்திலோ போட்டியிட்டு வெற்றி பெறக்கூடிய பலம் மற்ற கட்சிகளுக்கு இல்லை. கூட்டமைப்பில் இருந்தபடி தமிழ் அரசு கட்சி ஒதுக்கும் ஆசனங்களில் வீட்டு சின்னத்தில் போட்டியிட்டால் மட்டுமே வெற்றி கிடக்கும் என்பதே நிதர்சனம்.
இந்த நிலைமையில் கூட்டமைப்பின் அடுத்த தலைமை யார் என்பதை சம்மந்தர் வெளிப்படுத்த வில்லை என எப்படிக் கூறுவது?. சம்மந்தர் அதனை பூடகமாக செய்து முடித்துவிட்டார். தமிழ் தேசிய கூட்டமைப்பை அவர் பதிவு செய்யவோ அதற்கான சின்னத்தை உருவாக்கவோ முயலவில்லை என்பதில் இருந்தே எமக்கு புரிதல் வேண்டும். ஆலமரத்தில் கூடுகட்டும் பறவைகள் போல தமிழ் அரசு கட்சியுடன் இணையும் கட்சிகள் தம்மை கூட்டமைப்பு என்று அழைக்கலாம். தேர்தல்களில் வீட்டுச் சின்னத்தில் போட்டியிடலாம், பகிரப்படும் ஆசனங்களை பெற்றுக்கொள்ளலாம். ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை கட்சியாக தமிழ் அரசு கட்சியும், அதன் தலைவராக தமிழ் அரசு கட்சியின் தலைவரும் வழி வழி தொடர்வர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பை பதிவிட வேண்டும் என வீம்புக்கு முழக்கமிடும் எவருமே, தேர்தல் என வந்தவுடன் தமிழ் அரசு கட்சிக்கு வெளியே செல்ல முற்படமாட்டார்கள். தேர்தலில் தாம் வீட்டை விட்டு வெளியேறி போட்டியிட்டால் பட்டுவேட்டி கனவில் மிதந்தவன் நிலைதான் தமக்கு வரும் என்பதற்கு, கடந்த காலத்தில் நடந்த தேர்தலில் அடிபட்டவர்களே முன்னுதாரணம் ஆவார்கள். புலம் பெயர் தேசத்து பெரு நிதிகளும், முன்னாள் புலி போராளிகளும் களம் காண வந்தும் அவர்கள் பட்ட படிப்பினை இவர்களுக்கும் அனுபவப் பாடமாகலாம். கூடியவரை கூட்டமைப்பில் இருந்தபடியே குழம்புவார்கள். விட்டு விலத்தவோ அன்றி தலைமத்துவத்தை தீர்மானிக்கவோ இவர்களால் முடியவே முடியாது. தமிழ் அரசு கட்சியும் அதன் வீட்டு சின்னமும் மட்டுமே வாக்காளரின் கவனத்தை ஈர்க்கும். சம்மந்தருக்கு பின் யார் என்பதையும் அதுவே தீர்மானிக்கும்.
(ராம்)