இவ்வமைப்பானது சமூக அரசியலை இலக்காகக்கொண்டு ‘உரிமைசார்’ பயணத்தை மேற்கொள்ளவுள்ளது. “அறிவார்ந்த அரசியல் உரையாடலை மலையக அரசியல் தளத்தில் உருவாக்குதல், மாவட்ட எல்லைகளைக் கடந்த மலையக அரசியலை முன்னெடுத்தல், கல்வி, சுகாதாரம், அரசியல்சார் உரிமைகளுக்காக குரல் கொடுத்தல் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக்கொண்டே அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது என அதன் தலைமை ஒருங்கிணைப்பாளரான திலகர் தெரிவித்துள்ளார்.
தலவாக்கலையில் இன்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், அமைப்பானது அரசியல் கட்சியாகவோ அல்லது தொழிற்சங்கமாகவோ அல்லாது சமூக அரசியலை முன்னெடுப்பதற்கான அமைப்பு என்பதால் அதில் எவரும் இணையலாம் எனவும் திலகர் அழைப்பு விடுத்துள்ளார்.
மலையக சமூகத்தின் எழுச்சிக்காக எல்லா வழிகளிலும் பாடுபட்ட மலையக தேசப்பிதா நடேசய்யர், அவரின் பாரியார் மீனாட்சியம்மாள் ஆகியோரின் படங்களை இந்த அமைப்பு இலட்சினையாகப் பயன்படுத்தும் எனவும் திலகர் அறிவித்துள்ளார்.