(கலாநிதி இரா. ரமேஷ்)
1980களின் இறுதிப்பகுதியில் இருந்து, மலையக மக்கள் படிப்படியாக சட்டரீதியாக பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொண்ட போதும், அதன் உண்மையான பயன்களை, முழுமையாக அனுபவிக்க முடியாதவர்களாகவே வாழ்ந்து வருகின்றனர். அதற்கு, அம்மக்களின் சமூகப் பொருளாதார நிலை, பெரிதும் சான்றாகக் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய சமூகங்களின் சமூக அபிவிருத்தி மற்றும் பொருளாதார நிலைமைகளுடன் ஒப்பிடும்போது, இது மேலும் புலனாகிறது.
கல்வி, சுகாதாரம், வீட்டுரிமை, காணியுரிமை, அரச தொழில் வாய்ப்பு, உட்கட்டமைப்பு வசதிகள் என்பன, இம்மக்கள் தொடர்ந்தும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளாகும். 1980களில் இருந்து மாறி மாறி வந்த அரசாங்கங்கள் ஆட்சியமைப்பதற்கு, மலையக அரசியல் கட்சிகள் பங்களிப்புச் செய்துள்ளன. ஆயினும், அதன் மூலம் மேற்கூறிய பிரச்சினைகளில் பெரியளவிலான மாற்றங்கள் ஏற்படவில்லை. ஒரு சில முன்னேற்றங்கள் ஏற்பட்டாலும், அவற்றை தேசிய ரீதியான அபிவிருத்தியுடன் எவ்வகையிலும் ஒப்பிட முடியாது.
இதன் பின்புலத்திலேயே, 2015ஆம் ஆண்டு நல்லாட்சி எனும் தொனிப்பொருளை முன்னிருத்தி, ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம், பதவிக்கு வந்தது. 2015ஆம் ஆண்டு அடுத்தடுத்து இரு பிரதான தேர்தல்கள் (ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற) இடம்பெற்றன. இவ்விரண்டு தேர்தல்களிலும், மலையக மக்கள், ஐக்கிய தேசியக் கட்சிக்கே வாக்களித்ததுடன், தேர்தல் வெற்றியைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்காற்றினார்கள் என்பது, யாவரும் அறிந்த விடயமாகும்.
இத்தேர்தலின் போது, மலையக மக்களின் பிரதான கோரிக்கையாக, தனி வீடு காணப்பட்டது. அதன்படி, தேர்தலில் வெற்றி பெற்ற ஐக்கிய தேசியக் கட்சி, தேசிய அரசாங்கத்தை தாபித்ததுடன், மலையக மக்களின் வீட்டுரிமை மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வேலைத்திட்டங்களை மேற்கொள்வதற்காக, புதிய அமைச்சு ஒன்றையும் உருவாக்கியதுடன், அதற்கான நிதியையும் ஒதுக்கீடு செய்தது.
அதன் மூலம் இன்று, தனி வீட்டுத்திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், முதல் தடவையாக காணி உரித்தும் வழங்கப்பட்டுள்ளது. பல வருடங்களாக, பெருந்தோட்ட மக்கள் எதிர்ப்பார்த்த தனிவீடு என்ற கனவு, படிப்படியாக நிறைவேறி வருகின்றமை பெரிதும் மகழ்ச்சிதரும் விடயமாகும். மலையக மக்களின் வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்தும் ஒரு செயற்பாடாக இதனை நோக்க முடியும்.
பிரித்தானியர் காலத்தில் வழங்கப்பட்ட லயன் அறைகள், அப்போது தற்காலிக வதிவடங்களாகவே கருதப்பட்டன. ஆயினும் அவை, காலஓட்டத்தில் பெருந்தோட்ட மக்களின் நிரந்தர வதிவிடங்களாகவே மாறின. இதற்கு, தோட்டங்களை முகாமைச் செய்த வெள்ளையர்களிடம், பெருந்தோட்ட மக்களின் சமூகப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் ஒரு திட்டம் காணப்படாமை, முக்கிய காரணமாகும். லயன் வாழ்க்கைமுறையானது, பெருந்தோட்ட மக்களின் சமூக அடையாளத்திலும் அவர்கள் குறித்த வெளியுலகப் பார்வையிலும், பெரிதும் எதிர்மறையான தாக்கத்தையே ஏற்படுத்தி வந்துள்ளதென்பது மறுப்பதற்கில்லை.
வீடு என்பது, தனி மனிதனின் வாழ்க்கை முறை அவனது சமூக அடையாளத்தில் பெரிதும் செல்வாக்குச் செலுத்துகின்றது. உண்மையில், வீட்டுரிமை என்பது, சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட அடிப்படை மனித உரிமையாகவும் மனித கௌரவத்தை ஏற்படுத்தும் ஒரு கூறாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. தற்போதைய குடியிருப்பு முறை, பெருந்தோட்ட மக்கள் மத்தியில் எண்ணப்பாங்கு ரீதியான முரண்பாட்டை ஏற்படுத்தியுள்ளது.
2003ஆம் ஆண்டு, பெருந்தோட்ட மக்களின் வீடமைப்பு முறை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றின் மூலம், லயன் வீடுகளில் இருப்பவர்களை விட, தனி வீடுகளில் வாழ்பவர்களின் ஆளுமை விருத்தி, ஒப்பீட்டளவில் மேம்பட்டிருப்பதாகக் குறிப்பிடப்படுகின்றது.
தனிவீட்டுச் சூழலானது, சமூக அந்தஸ்து, ஏற்புடமை மற்றும் சமூக மாற்றங்களைத் தோற்றுவிக்கின்றது. இது, சமூக அசைவியக்கத்துக்கு வழிசெய்கின்றது. அதனால், புதிய வீடமைப்பானது, அவர்களின் சமூக அடையாளம் மற்றும் அங்கிகாரத்தை மாற்றியமைக்க வேண்டும் என்பதில், ஒருமித்தக் கருத்து காணப்படுகின்றது.
கார்ல் மார்க்ஸ் முதலாளித்துவ சமூகத்தில், வீட்டுரிமை என்பது நாணய பெறுமதியைக் கொண்ட சொத்து எனக் குறிப்பிடப்பட்டு இருக்கின்றது. அது, அவர்களிடத்தில் சொத்துரிமை என்ற எண்ணத்தை ஏற்படுத்துகின்றது. பெருந்தோட்ட மக்களைப் பொருத்தவரை, தனிவீடு மற்றும் காணி உரிமை இன்மையானது, அவர்கள் குறித்த மதிப்பீடு மற்றும் கௌரவத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தனி வீட்டை உரித்தாக்கிக் கொள்ளல் என்பது, ஏனையவர்களின் கட்டுப்பாடு மற்றும் அறிவுறுத்தல்களிலிருந்து விடுபட்டு, சுதந்திரமாக வாழ்வதற்கு வழிசெய்கின்றது. மிக முக்கியமாக, தமக்கான வீடொன்றில் வாழும் போது, தமக்கென ஏதாவது செய்யவேண்டும் என்ற எண்ணம் மற்றும் தனிப்பட்டவர் என்றவகையில் சுயபூர்த்தியை அடைதல் ஆகிய மனப்பாங்கில் மாற்றம் ஏற்படும்.
ஆகவே, புதிய வீடமைப்புத் திட்டமானது, ஒட்டுமொத்த பெருந்தோட்ட மக்களின் சமூக வாழ்விலும் அவர்கள் குறித்த சமூக அடையாளத்திலும் மாற்றம் ஏற்படுத்துவதாக அமைய வேண்டும். அது, பெருந்தோட்ட மக்களை, ஓரளவேனும் வறுமையில் இருந்து விடுபடுவதற்கு வழிசெய்யும்.
வறுமை ஒழிப்பானது, வெறுமனே வருமானம் மற்றும் போஷனை மட்டத்தை அதிகரிப்பதன் ஊடாக மாத்திரமே மேற்கொள்ள முடியாது. அது, குறிப்பாக பிற்பட்ட சமூகங்களுக்கு உரித்துடமையை வழங்கல் மற்றும் ஆற்றலை விருத்தி செய்தல் என்பனவற்றிலேயே தங்கியுள்ளது. இக்கருத்து, பெருந்தோட்ட மக்களுக்கு பெரிதும் பொருந்தும். உண்மையில் இம்மக்களின் வறுமை நிலைக்கு, வீடு, காணியுரிமை இன்மை, அரச நிர்வாகக் கட்டமைப்பில் முழுமையாக உள்வாங்கப்படாமை, உரிமை மறுப்பு என்பன முக்கிய காரணங்களாகின்றன.
இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்களின் பிரஜாவுரிமைப் பிரச்சினை, முழுமையாக 2003ஆம் ஆண்டு தீர்க்கப்பட்டாலும், அவர்கள் இன்றும் சமூகப் பிரஜாவுரிமையின் பயன்களை முழுமையாக அனுபவிக்க முடியாதவர்களாகவே உள்ளனர். மிக முக்கியமாக, சமூகப் பிரஜாவுரிமை என்பது, கல்வி, சுகாதாரம், வீட்டுரிமை, காணியுரிமை, பேர்ககுவரத்துத் தொழில், ஓய்வூதியம் மற்றும் அரச பொதுச்சேவைகளைப் பெறுவதற்குள்ள உரிமையை வலியுறுத்துகின்றது. இவை, சமூக உரிமைகள் என்று அழைக்கப்படுகின்றன.
ஒரு மனிதன், சமூகப் பிரஜாவுரிமையை அனுபவிக்கும் பொழுதே, ஏனைய சிவில், அரசியல், கலாசார உரிமைகளை அனுபவிக்கமுடியுமென்;பது, பல ஆய்வுகளின் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
அந்தவகையில், தற்போதைய அரசாங்கத்தின் தலைமைத்துவங்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள், புத்திஜீவிகள், பெருந்தோட்ட மக்களின் சமூகப் பிரஜாவுரிமை குறித்த பெரியளவிலான கலந்துரையாடல்களை ஏற்படுத்த வேண்டும். அதற்கான நியாயப் பிரசாரங்களை மேற்கொள்ளவேண்டும். இதன் மூலம், ஏனைய பிரஜைகளைப் போன்று, பெருந்தோட்ட மக்களும் சமூகப் பிரஜாவுரிமையை அனுபவிக்க, கொள்கை ரீதியான மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்.
தற்போதைய அரசாங்கத்தின் தனி வீட்டுத்திட்டத்தை வரவேற்கின்ற அதேவேளை, அதில் காணப்படும் குறைப்பாடுகளையும் குறிப்பிட வேண்டும். குறிப்பாக, வழங்கப்படுகின்ற உரித்துகளில் குறைப்பாடுகள் காணப்படுவதாகவும் உண்மையான உரித்தொன்றில் காணப்படும் அம்சங்கள் காணப்படுவதில்லையெனவும் வலியுறுத்தப்படுகிறது. மேலும், வீடுகள் இலவசமாக வழங்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டாலும், தொழிலாளர்களிடம் இருந்து, மாதாந்தம் பணம் அறவிடப்படுவதாக விமர்சிக்கப்படுகின்றது. அத்துடன், கட்டப்படுகின்ற வீடுகளின் தரம் தொடர்பாகவும் விமர்சனங்கள் உள்ளன. ஆகவே, உண்மையான, வேறொரு நபருக்கு மாற்றக்கூடிய சட்டத்தன்மையைக் கொண்ட உரித்துகளை வழங்க வேண்டும். அவ்வாறன்றில், இது ஒரு அரசியல் நிகழ்ச்சித்திட்டமாக மாறிவிடும்.
அத்துடன், இந்தப் புதிய வீடமைப்புத் திட்டமானது, போதிய வீட்டு வசதிகளை உறுதிசெய்ய வேண்டும். அன்றில், அவை மீண்டும் அவர்களை பழைய வாழ்க்கை முறைமைக்குள் தள்ளுவதாக அமைந்துவிடும். எல்லாவற்றிற்கும் அப்பால் அரசாங்கம் பெருந்தோட்ட மக்களின் வீட்டுரிமை மற்றும் காணியுரிமையினை மதிக்கவேண்டும். அதற்கிணங்க தேவையான சட்ட, நீதி, நிர்வாக மற்றும் ஊக்குவிப்பு ஏற்பாடுகளை அல்லது சட்டத்தை உருவாக்க வேண்டும். இது தொடர்பில். மலையக அரசியல் தலைவர்களின் தூரநோக்குச் சிந்தனை மற்றும் அறிவுசார் செயற்பாடு அவசியமாகும். மேற்கொள்ளப்படும் வீடமைப்புத் திட்டம் வெறுமனமே தேர்தல் காலபணியாக அமைந்துவிடக்கூடாது. அது சமூகத்தின் நலன் மற்றும் கௌரவம் என்பனவற்றை மனங்கொண்டு மேற்கொள்ளப்படவேண்டும்.
நல்லாட்சி அரசாங்கத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற பிரிதொரு நன்மை யாதெனில், பிரதேச சபைகளுக்கான சட்டமூலம் திருத்தப்பட்டமையாகும். பிரதேச சபைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியின் பயனை, இம்மக்கள் அனுபவிப்பதில் இருந்து, சட்டரீதியாக விலக்களிக்கப்பட்டிருந்தார்கள். அதற்கு இச்சட்டம் முக்கிய காரணமாகும். இப்புதிய அரசாங்கம் பதவிக்கு வந்தப்பின்னர் தொடர்ச்சியான அரசியல் மற்றும் சிவில் அழுத்தங்களின் காரணமாக அன்மையில் இச்சட்டம் திருத்தப்பட்டது. அதன் மூலம், பிரதேச சபைகளின் சேவைகளை பெற்றுகொள்வதற்கான வாய்ப்பு இன்று கிட்டியுள்ளது. ஆயினும், திருத்தப்பட்ட சட்டத்திலும் பெருந்தோட்ட முகாமைத்துவத்தின் அனுமதியுடனேயே, பிரதேச சபைகள் அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற ஏற்பாடு தொடர்ந்தும் பேணப்பட்டு வருகின்றமை குறிப்பிடதக்கதாகும். இவ்வேற்பாட்டையும் திருத்துவதற்கான நடவடிக்கைகளை, எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டும்.
மேலும், பிரதேச சபைகளின் எண்ணிக்கை நுவரெலியா மாவட்டத்தில் அதிகரிக்கப்பட்டமையானது, மிக நீண்டகால போராட்டத்தின் விளைவால் கிடைக்கப்பெற்றதாகும். அந்தவகையில், புதிதாக நான்கு பிரதேச சபைகளை உருவாக்க முன்மொழியப்பட்டுள்ளது. அம்பகமுவ பிரதேச சபையை அம்பகமுவ, நோர்வூட், மஸ்கெலியா எனவும் நுவரெலியா பிரதேச சபையை நுவரெலியா, கொட்டகலை, அக்கரபத்தனை எனப் பிரிக்கப்பட்டுள்ளன. இது பெரிதும் வரவேற்கதக்க விடயமாகும். அதபோல் கொத்மலை மற்றும் வலப்பனை ஆகிய பிரதேச சபைகளும் இரண்டாகப் பிரிக்கப்பட வேண்டும் என்பதை, அரசாங்கம் கவனத்திற்கொள்ள வேண்டும். புதிய பிரதேச சபைகள் விரைவில் செயல்வடிவம் பெறவேண்டும், அவற்றில் மலையகத் தமிழ் இளைஞர்களை அதிகளவில் உள்வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உண்மையில், பிரதேச செயலகங்கள் பிரிக்கப்பட்டமையானது, மலையக மக்களின் வாழ்வில் பெரியளவிலான மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது பலரின் கருத்தாகும். அதேபோல், பிரதேச செயலகங்களையும் அதிகரிக்க வேண்டும். இது, கொள்கை ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது. அதன் மூலமே, பெருந்தோட்ட மக்களை தேசிய நீரோட்டத்தில் இணைக்க முடியும். அரச நிர்வாக நிறுவனங்களை அதிகரிக்கும் பணியை, மலையக மக்கள் வாழும் சகல மாவட்டங்களிலும் மேற்கொள்ள வேண்டும்.
மலையகப் பிரதேசங்களில், பிரதேச செயலகங்களை அதிகரிக்கும் போது, அது கிராம சேவகர் பிரிவுகளையும் அதிகரிக்க உதவும். அதன்மூலம், அரச நிர்வாக இயந்திரம் சமூகத்தின் சகல மட்டங்களிலும் செல்வதற்கும் அதன்மூலம் மக்கள் பயனடைவதற்கும் வாய்ப்பு கிட்டும்.
எல்லாவற்றுக்கும் அப்பால், மலையக மக்களின் புத்திஜீவிகள் மற்றும் சிவில் அமைப்புகளின் நீண்டகால கோரிக்கையாகக் காணப்பட்ட மலையக அபிவிருத்திக்கான அதிகாரசபை ஒன்றை தாபிப்பதற்கான அனுமதி, தற்போது கிடைக்கப்பெற்றுள்ளது. இது, பெரிதும் வரவேற்கதக்க விடயமாகும். அதிகார சபையொன்று தாபிக்கப்படும் பட்சத்தில், அது அபிவிருத்திப் பணிகளைச் சீராகவும் செம்மையாகவும் மேற்கொள்ள உதவும். எந்த அரசாங்கம் பதிவிக்கு வந்தாலும், அதனை அழிக்க முடியாது. அது ஒரு நிரந்தர நிறுவனமாகக் காணப்படும்.
இன்று, மலையக மக்களுக்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மேற்கொள்வதற்கென்ற அரச நிறுவனக் கட்டமைப்பொன்று காணப்படாமையானது, மிகப்பெரிய குறைப்பாடாகும்.
தற்போது இருக்கின்ற பெருந்தோட்ட மனித அபிவிருத்தி நிதியம் (Pர்னுவு), மிக மோசமான ஊழல் மோசடிகள் மலிந்த இடமாகக் காணப்படுகின்றது. இவ்வமைப்பின் மூலம் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள், குறைந்த தரததைக் கொண்டதாகவும் மக்களை ஏமாற்றும் செயற்பாடாகவும் காணப்படுகின்றதென்பது, பொதுவான விமர்சனமாகும்.
ஆகவே, இந்நிறுவனத்தை அழிக்க வேண்டும் என்ற பொதுவான கருத்தும், பரவலாகவே காணப்படுகின்றது. ஆகவே, அதிகார சபையொன்று வரும் பட்சத்தில், நிச்சயமாக பல சாதகமான மாற்றங்களை அது ஏற்படுத்தும். இவ்வாதிகாரச் சபையில், மலையகத்தைச் சேர்ந்தவர்கள் உயர் பதவிகளில் அமர்த்தப்பட வேண்டும் – அதேபோல், ஏனைய பதவி நிலைகளிலும் மலையக இளைஞர் – யுவதிகள் நியமிக்கப்பட வேண்டும். அதன்மூலம், மலையக மக்களின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மேற்கொள்ளும் ஏகபோக உரிமையைக் கொண்ட அமைப்பாக இது விளங்கும்.
எதிர்காலத்தில் அரச தொழில் வாய்ப்புகளை வழங்கும் போது மலையக சமூகத்துக்கான கோட்டா முறையொன்றின் மூலம் நன்மையளிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். அதன் மூலம், எதிர்காலத்தில் இச்சமூகத்தைச் சேர்ந்த பலர், நிர்வாக உயர் பதவிகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
அதேபோல், மலையகப் பகுதிகளில் கைத்தொழிற்பேட்டைகளை அமைப்பதற்கான யோசனைகளை, பிரதமர் முன்வைத்துள்ளார். இது பெரிதும் வரவேற்கதக்க விடயமாகும். இதன்மூலம், எண்ணற்ற மலையக இளைஞர் – யுவதிகள் நன்மைபெற முடியும். அதேபோல், மலையகத்துக்கான தனியான பல்கலைக்கழகம் ஒன்றை உருவாக்குவது தொடர்பான முன்மொழிவும் தற்போது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அது, விரைவில் செயல் வடிவம் பெறவேண்டும். அதன் மூலம், இச்சமூகம் பல வழிகளிலும் நன்மையடையும் என்பதில் ஐயமில்லை.
மேற்கூறிய அப்படையில், மலையக மக்களுக்கு பல நன்மைகள் வழங்கப்பட்டு வந்தாலும், இன்னும் இம்மக்களின் நிறைவேறாத பல கோரிக்கைகள் காணப்படுகின்றன. அவற்றுக்கான சட்டத்திட்டங்களையும் கொள்கைத் திட்டங்களையும், இவ்வரசாங்கம் உருவாக்க வேண்டும்.
1980களில் இருந்து பதவிக்கு வந்த அரசாங்கங்கள், இம்மக்களுக்கான சட்டப் பிரஜாவுரிமையை வழங்கிய போதும், அதன் பயன்களை முழுமையாக அனுபவிப்பதற்கேற்ற சட்ட, நிர்வாக, கொள்கை ரீதியான சீர்த்திருத்தங்களைச் செய்வதிலிருந்து விலகிக்கொண்டன எனலாம். நீண்டகாலம் அரச சட்டங்கள் மற்றும் நிர்வாக நிறுவனங்களின் மூலம் பாகுபாடுகளை அனுபவித்த ஒரு சமூகப்பிரவினர், சட்ட குடியுரிமையைப் பெறும்போது, அவர்கள் காலம் காலமாக பாகுபாடுகளை அனுபவிப்பதற்கு காரணமாகவிருந்த சட்டங்கள், கொள்கைகளை மறுசீரமைப்பது, நிர்வாக மறுசீரமைப்புகளை மேற்கொண்டு அம்மக்களை ஆட்சிமுறையில் உள்வாங்க நடவடிக்கை எடுப்பதென்பது, பெரிதும் அவசியமாகும். அத்தகைய ஏற்பாடுகளை, இலங்கையில் மாறி மாறி வந்த அரசாங்கங்கள் மேற்கொள்ளவில்லை என்பது, வருந்ததக்க விடயமாகும்.
இன்று இந்நாட்டில், அரச மறுசீரமைப்புக்கான முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன. இவை, மலையக மக்களை ஆட்சிமுறைக் கட்டமைப்பில் முழுமையாக உள்வாங்குவதற்கான சட்டகத்தை உருவாக்குவதாக அமைய வேண்டும். அரசியல் அதிகாரப் பரவலாக்கத்துடன் இணைந்த வகையில், நிர்வாக அதிகாரப்பரவலாக்கத்தை மேற்கொள்ள வேண்டும். இம்மக்களின் அபிவிருத்தி, உரிமை மேம்பாடு, சமத்துவம், சமூக நீதி என்பவற்றை அடையும் வகையில், விசேட கொள்கைத் திட்டங்களை உருவாக்க வேண்டும். இத்தகைய உபாயங்களின் மூலம், மலையக மக்களும் முழுமையாகச் சமூகப் பிரஜாவுரிமையின் பயன்களை அனுபவிக்க வாய்ப்புண்டு.