புதிய அரசமைப்பும் சிறுபான்மையினரின் எதிர்காலமும்

புதிய அரசமைப்பு எவ்வாறு அமையப்போகிறது என்பதைக் கூறுவது கடினம். அதில், சிறுபான்மையினரின் குரல்கள் எடுபடப்போவதில்லை என்பதை மட்டும் நம்பலாம். அரசின் தயவிலேயே, சிறுபான்மையினர் தங்கியிருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதன் பின்புலத்திலேயே, ‘வீராவேசப்’ பேச்சுகளைச் சில தமிழ் நாடாளுமன்றப் பிரதிநிதிகள் நிகழ்த்தியதைக் கடந்தவாரம் கண்டோம். அது வேண்டுமாயின், சமூக வலைத்தளங்களில் ‘கிளுகிளுப்பு’ ஊட்டுவதற்கு அப்பால், பயனேதும் அற்றது.

அரசியல் என்பது, இயலுமானவர்களுக்கானது; நடைமுறை யதார்த்தம் பற்றியது. அரைநூற்றாண்டு கால இலங்கை அரசியலில், ஈழத்தமிழ் அரசியல் செய்தது கிட்டத்தட்ட இதுதான். ‘அப்புக்காத்து அரசியலை’ விட்டுவிட்டு, இனியாவது நடைமுறை குறித்து, இலங்கையில் வாழும் மிகச் சாதாரணமான தமிழ் மக்கள் பற்றியும் அவர்கள் எதிர்காலம் குறித்தும் கவனம் செலுத்துவது பிரதானமானது.

தேசிய பிரச்சினை, இன்னமும் இலங்கையின் பிரதான முரண்பாடாக உள்ளது. அதில் பகுதியையேனும் தீர்க்காமல், அதிலும் அடிப்படையான பிற பிரச்சினைகளைப் பயனுற விளிக்க இயலாது. பொருளாதாரமும் சமூக நீதியும் ஜனநாயகமும் மனித உரிமைகளும் அடிப்படை உரிமைகளும் சட்டமும் ஒழுங்கும் தேசிய பிரச்சினையுடன் தவிர்க்க இயலாதவாறு பிணைந்துள்ளன.

ஒட்டுமொத்தமாக, அனைத்து மக்களும் சிறுபான்மைத் தேசிய இனங்களும் இன, மதக் குழுக்களும் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளையும் விளிக்குமாறு ஒரு பரந்துபட்ட வெகுசன அமைப்புக்கான குறுகியகால, நீண்டகால வேலைத் திட்டங்களை விருத்தி செய்யாமல், எவ்வகையிலும் பேரினவாதத்துக்குச் சவால்விட இயலாது.

தம்மைப் பாதிக்கும் ஒவ்வொரு பிரச்சினையின் தீர்வும், அப்பிரச்சினையுடன் நேரடியாக உறவற்ற வேறு பிரச்சினைகளின் தீர்வுகளையும் வேண்டுகிறது என்பதை மக்கள் உணருமாறு, பிரச்சினைகள் பற்றி மட்டுமன்றி, அவற்றிடையிலான பிணைப்புகளைப் பற்றியும் நல்ல விளக்கத்தை இது வேண்டுகிறது.

இதைச் சாத்தியமாக்கப் பரந்துபட்ட கூட்டணி ஒன்றின் உருவாக்கம் அவசியம். அதற்குப் பொது இலக்குகளும் குறுகிய கால வேலைத்திட்டங்களும் தேவை. எனினும், ஒடுக்கப்பட்ட தமிழ்த் தேசிய இனத்தை அதன் பிற்போக்குத் தன்மையிலிருந்து விலக்க வேண்டியுள்ளது.

இப்போது, தமது சுய முன்னேற்றத்தைத் தவிர வேறெந்த நோக்குமற்ற தலைவர்கள் வழிநடத்தும் முஸ்லிம்கள் மத்தியிலும் மலையகத் தமிழர் மத்தியிலும் ஆற்ற வேண்டிய பணிகள் உள்ளன. இவற்றைத் தெளிவான அடையாளம்கண்ட பரந்துபட்ட மக்கள் கூட்டணி ஒன்று தேவையாகிறது.

பரந்துபட்ட கூட்டணியின் உருவாக்கம், பிறவற்றை உள்ளடக்கும் அணுகுமுறையொன்றையும் அடிப்படை வேறுபாடுகளிலிருந்தும் பொது வேலைத்திட்டம் ஒன்றுக்காக ஒன்றுபடும் ஆற்றலையும் வேண்டுகிறது. சிறுபான்மைத் தேசிய இனங்களின் அடையாள, பிரதேச உரிமைகளை மதிப்பதுடன் அதிகாரப் பரவலாக்கல் பற்றித் திறந்த மனமுடைய சிங்களத் தேசியவாதிகளும் கூட்டாளிகளாக வல்லோரே.

முஸ்லிம், மலையகத் தமிழ்த் தேசியவாதிகள், நாட்டில் பிற ஒடுக்கப்பட்ட மக்களுடன் பொதுநோக்கம் காண ஊக்குவிக்கப்பட வேண்டும். குறுகிய தேசியவாத அரசியலாலும் தேசிய ஒடுக்குதலாலும் போராலும் தேசிய இனங்களிடையே பல தசாப்தங்களாகக் கட்டப்பட்ட அவநம்பிக்கைத் தடைகளை நீக்குவதே நாம் எதிர்நோக்கும் அதி அவசரமான பணியாகும்.

நாடாளுமன்றப் பாதை பற்றிய ஒரு மாயை, தொடர்ந்து சிறுபான்மையினரிடம் இருந்து வந்துள்ளது. பெரும்பான்மை-நிலை, இன-மய்ய அரசியல் ஆதிக்கத்தை நோக்கிய வலூன போக்கைக் கொண்ட தேர்தல் அரசியலில் தங்கியிருப்பதைக் குறைக்கும் மூலோபாயங்களின் சேர்க்கை தேவை.

இலங்கையில் மோசமாகிவரும் பொருளாதாரமும் ஜனநாயகத்துக்கு எதிரான மிரட்டல்களும், முற்போக்கு, ஜனநாயகச் சக்திகளின் தலைமையில் தேசிய விமோசனம் அல்லது, பேரினவாதச் சக்திகளின் தலைமையிவான பாசிசமும் இராணுவ ஒடுக்குமுறையும் எனும் இரு பாரிய தெரிவுகளை, மக்கள் முன் முன்வைக்கின்றன. இதுதான் இன்று எம்முன்னுள்ள யதார்த்தம்.

இந்தநிலையை எவ்வாறு வந்தடைந்தோம் என்பது பற்றிச் சிந்திக்க வேண்டியுள்ளது. இதுகுறித்துப் பேராசிரியர் ஜெயதேவ உயன்கொட பின்வருமாறு சொல்கிறார்: “மூன்று தசாப்தங்களாக நீடித்த உள்நாட்டுப் போரை முன்னே உந்தியது இனத்துவத் தேசிய சித்தாந்தங்களேயன்றிச் ஜனநாயக இலட்சியங்களல்ல என நாம் உணரும் போது, அது மேலும் அச்சமூட்டுகிறது. இனத்துவத்தின் வெற்றி, ஜனநாயகத்தின் தோல்வியாகியது. இச் செயற்பாங்கை மறுதலையாக்கி, இனத்துவத்தினதும் இனத்துவ தேசியவாதங்களினதும் பிரிவுசார்ந்த, விலக்கி நிற்கும் உறுதிமொழியை மழுங்கடிக்கும் ஆற்றலுடையதோர் அரசியல் சக்தியாக ஜனநாயகத்தை மீளக் கொணர்வதே உள் நாட்டுப் போருக்குப் பிந்திய இலங்கையின் சவால்”.

சிங்கள, தமிழ்த் தேசியவாதங்கள் தொடர்பாக, இலங்கையின் சொந்த அனுபவத்தை எடுப்பின், ஆதிக்கத்திலுள்ள இவ்விரு குழு அரசியல் கற்பனைகளும் உண்மையில் தம்மிடையோ தாம் பெயராண்மைப்படுத்தும் சமூகங்களிடையோ ஆக்கமான அரசியல் உரையாடல் எதையும் வசதிப்படுத்தவில்லை.

ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிகளின் தலைமையிலான அரசாங்கப் பிரதிநிதிகளுக்கும் தமிழரசுக் கட்சி, தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு போன்ற தமிழ்ச் சமூகப் பிரதிநிதிகளுக்கு இடையிலான அமைதிப் பேச்சுகளின் போது, உரையாடலின் இயலாமை எனும் பிரச்சினை, மனதில் பதியுமாறு நிகழ்ந்தது.

சிங்கள, தமிழச் சமூகங்களிடையே, பெரும்பான்மை, சிறுபான்மைச் சமூகங்கள், இலங்கை எனும் தேச அரசுக்குள் சமமானோராக வாழ்வதற்கு, ஒரு பொது அரசியல் களத்தைக் கண்டறியும் நோக்கிலான பேச்சுவார்த்தைகள் 1950களின் நடுப்பகுதி தொட்டு, இன்று வரை முன்னெடுக்கப்பட்டன. அத்தகைய பேச்சுவார்த்தைகள் யாவுமே, ஒரு பொதுக் களத்தையன்றி வேறுபாடுகளையும் இணங்க இயலாதவற்றையும் பகைமைகளையுமே கண்டறிந்தன. இதன் தொடர்ச்சியையே இன்றைய புதிய அரசமைப்பு பற்றிய கதையாடல்களிலும் காண்கிறோம்.

பேரினவாதம் இப்போது, சிங்கள மக்களின் அரசியலில், குறிப்பாகப் படித்த, நடுத்தர வர்க்கத்தினரில் கணிசமானோரிடையே, ஆழ வேரூன்றி உள்ளது. சாதாரண சிங்கள மக்கள், சிறுபான்மையினர் குறித்த அச்சங்களுடன் உள்ளனர். போர்க்காலத்தில் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளும் பின்னர் தமிழ்த் தலைமைகள் எடுத்ததற்கெல்லாம் இந்திய, அமெரிக்க, ஐ.நா, சர்வ தேசக் குறுக்கீடுகளை – அவை அசாத்தியமானவையாயினும் – விடாது வேண்டுவதையும் பற்றியன. சிங்களப் பேரினவாதத்தின் ஆதரவுத் தளம் அந்த அச்சமே. சிங்கள மக்களின் நியாயமற்ற அச்சங்களைப் போக்கும் அக்கறை, தமிழ் அரசியல் தலைவர்களிடம் இருந்ததில்லை.

இன்றைய நிலையில், இந்த அச்சங்களைக் களைவதும் பரந்துபட்ட ஒற்றுமையின் அடிப்படையில் ஒன்றிணைவதும் அவசியமாகிறது. ஓன்றிணைவதற்கான தொடக்கப்புள்ளியாக, எதிர்பார்த்திருக்கும் புதிய அரசமைப்பு அமையவியலும். இதற்கு மூன்று விடயங்கள் முன்நிபந்தனையால் வேண்டும்.

  1. புதிய ஜனநாயக அரச கட்டமைப்பில், இலங்கையின் தேசிய இனங்கள் அவற்றின் சுயவிருப்பின் அடிப்படையில் உயர்ந்தபட்ச சுயநிர்ணய உரிமையை நிலைநாட்டிக் கொள்ளும் பிரிந்துபோகும் உரிமையுடனான சுயாட்சியுடன் கூட்டிணைவான (Confederation) ஐக்கிய இலங்கை மக்கள் குடியரசைக் கட்டியமைப்பதை இலக்காகக் கொள்ளுதல்.
  2. இவற்றை வென்றெடுக்கத் தேசிய இனங்களிடையே ஐக்கியம் அவசியமாவதால் தேசிய இனங்களிடையேயான அடக்கப்படுகின்ற, சுரண்டப்படுகின்ற தொழிலாளர்கள், விவசாயிகள், சிறு உற்பத்தியாளர்கள், பெண்கள், சாதிரீதியாக அடக்கப்பட்டோர் ஆகியோரை இணைத்தும் அவர்களின் பொது உடன்பாட்டுடனும் வெகு ஜனப் போராட்டங்களை அந்தந்தத் தளங்களிலும் கூட்டிணைந்தவையாக முன்னெடுத்தல்.
  3. சிறுபான்மையினர் தமது உரிமைகளைத் தக்கவைக்கவும் நலன்களைக் காப்பதற்குமான ஐக்கிய முன்னணி ஒன்றைக் கட்டியெழுப்பல்.