புலிகளின் சிறைச்சாலையில் தமிழ்ப்பெண்கள் (Part 2)

இம்முகாமிலிருந்த பெண் கைதிகள் எதிர்பாராத சமயங்களில் நித்திரையிலிருந்து அடித்து எழுப்பப்பட்டு சுரங்க அறைகளுள் இழுத்துச் செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டனர். வெளியே துப்பாக்கிச்சூட்டுச் சத்தங்கள் கேட்கும். அடுத்தது நீ தானென கைதிக்கு சொல்லப்படும். கடுமையான சித்திரவதைக்கென தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்கள், சிறிய முகாம்களுக்கு – பெரும்பாலும் தென்மராட்சிக்கு மாற்றப்படுவர். தென்னந்தோப்புக்குள் அமைந்த இம்முகாமில் ஒரே சமயத்தில் 50 பேர் வரை சிறை வைக்கப்படுவர். இங்கு சித்திரவதை செய்வதில் இன்பம் காண்பதன் உச்சக்கட்டம் ஆரம்பத்தில் இருந்தே தொடங்கும்.
வேறு முகாம்களிலும் பெண் கைதிகள் சிறை வைக்கப்பட்டிருந்தனர்.

கோப்பாய் பெண்கள் முகாம் இதில் ஒன்று. இங்கு பல நூற்றுக்கணக்கான பெண்கள் கொண்டு செல்லப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர். பலர் இறுதியாக விடுதலை செய்யப்பட்டனர். செல்வி தியாகராஜா போன்ற வெளியுலகுக்கு தெரிந்தவர்களும் இங்கு சிறைப்பட்டிருந்தனர். செல்வி விடுதலையாகவில்லை. மிகவும் மோசமான சித்திரவதைக்கு உள்ளானவர்கள் புதைகுழிக்கு அனுப்பப்பட்டதாக கைதிகள் தெரிவித்தனர்.

சிறைக்காவலர்கள்

ஈவா எனும் ஜம்பது வயது மதிக்கத்தக்க பெண்ணொருத்தி மட்டுவில் முகாமிற்கு பொறுப்பாயிருந்தார். சித்திரவதையாளர்களின் வயது 14ல் இருந்து தொடங்குகிறது. ஒரு கைதியை தடியால் அடிப்பதற்கு சிலவேளைகளில் ஓரே சமயத்தில் பத்து பேர் தேவைப்படும். வயதைப் பொறுத்து அடிக்கும் வேகமும் அதிகரிக்கும். ஈவா வேறு சில முகாம்களுக்கும் பொறுப்பாயிருந்தாரென தெரிய வருகின்றது.
சிறிய முகாம்களில் இருந்த பெண்புலிகளில் அஷாந்தி, அகலி, ஆனந்தி, மோகனா, பைரவி, மாதங்கி ஆகியோர் சிலர். ஒவ்வொருவரும் விசித்திர குணாம்சங்களைக் கொண்டவர்கள். ஆனாலும் ஈவிரக்கமற்ற தன்மையில் இவர்களிடையே வேறுபாடு காண்பது அரிது.
அகலி பெண்களை இரத்தம் சிந்தும் வரை அடித்து விட்டு அவர்கள் தண்ணீர் தருமாறு இரங்கும் வரை வெய்யிலில் நிற்க விடுவார்.

மலகூடத்துக்கு பயன்படுத்தப்படும் தண்ணீர் கோப்பையொன்று அக்கைதி முன் வைக்கப்படும். அகலி கைதியை அடிப்பதற்கு தடியொன்றை தயார் நிலையில் வைத்துக் கொண்டு கைதியை நையாண்டி செய்தவாறு கைதி கோப்பையில் கை வைக்கும் வரை காத்திருப்பார். சிலவேளைகளில் கைதியை தனது சப்பாத்து கால்களால் உதைத்து நிலத்தில் உருட்டி எடுப்பார். கைதியின் கண்கள் பெரும்பாலும் கட்டப்பட்டிருக்கும். கண் கட்டை அவிழ்க்கும் நேரத்தில் கைதியின் தலையில் அடித்து மாதங்கி கைதிகளை வரவேற்பார்.
சிலவேளைகளில் புலிகளின் ஆண் உறுப்பினர்கள் முகாம்களுக்கு வாகனங்களில் விஜயம் செய்வர். அச்சமயங்களில் கைதிகள் நேரத்துடனேயே அடைக்கப்படுவர். அதன் பின் பெரும் கொண்டாட்டம் தொடரும். மறுநாள் காலை ” மாதங்கி, நீ மொறிஸ் மைனர் வாங்கினாயாக்கும்” என்பது போன்ற பகடிகள் – அன்றிரவு அவர் தங்கியிருந்த வாகனத்தைக் குறிப்பிட்டுச் சொல்லப்படும். நாங்கள் ஈபிஆர்எல்எவ் மாதிரி கதைத்ததை நீங்கள் கேட்டீர்களா என்று இகழ்வாக பெண்புலிகள் கைதிகiளைப் பார்த்து கேட்பர். முகாம்களில் பெண்களை மட்டுமே கண்டதாக சொல்லுமாறு கைதிகளுக்கு பின்னர் கட்டளையிடப்படும்.

மாத்தையா கோஷ்டியினருக்கு எதிரான திடீர் சதி காரணமாக இருக்கலாம். ஆகஸ்ட் 91ல் சலீம் திடீரென பதவியிறக்கம் செய்யப்பட்டார். அதுவரை இவர் பெண்கள் முகாமுக்கு தினமும் வருவார். இவரது வார்த்தைப் பிரயோகம் கைதிகளால் சகிக்க முடியாத அளவுக்கு மோசமாக இருக்கும். பெண்களை மிக இழிவுபடுத்தும் இவரது கெட்ட வார்த்தைகள் பல வருடங்களுக்கு அவர்களால் மறக்க முடியாத அளவுக்கு கேவலமாக இருக்கும். இளையவர், முதியவர் என்ற பேதமின்றி அவரது வார்த்தைப் பிரயோகங்கள் அசிங்கமாக அமைந்திருக்கும்.

ஏதாவது சிறிதளவு இரக்கம் இம்முகாம்களில் காட்டப்படும் என்றால் அது ஒரு தற்செயல் நிகழ்வே. ஏதாவது உறவுமுறை அல்லது முன்னைய தொடர்புகள் காவலர்களுக்கும் கைதிக்கும் இருந்திருப்பின் இது ஓரளவு சாத்தியம்.

(தொடரும்….)