புலிகள் எப்படி ஏன் தோற்கடிக்கப்பட்டார்கள் (Part13)

புலம்பெயர் மக்களின் போராட்டம் நிச்சயமாக ஏதாவது நல்விளைவுகளைத் தரும் என்று பிரபாகரன் நம்பினார். முதல் தடவையாக அவர் துப்பாக்கிகளிலும் பீரங்கிகளிலும் நம்பிக்கை இழந்த நிகழ்ச்சி இது. அதுவரையும் எப்படியும் இராணுவத்தை ஏதாவது ஒரு புள்ளியில் வைத்து முறியடித்துத் தோல்வியைத் தழுவச் செய்யலாம் என்று இருந்த நம்பிக்கையைப் பிரபாகரன் மெல்ல மெல்ல இழந்திருந்தார்.

பிரபாகரன் எத்தகைய இராணுவத் தாக்குதல்களைத் தொடுப்பார் என்று தெரியாத ஒரு அச்சம் நிறைந்த புதிர் சிறிலங்கா அரசுக்கும், படைத் தரப்புக்கும் இருந்தது உண்மை. அதனால் அவர்கள் தமது நடவடிக்கையை முதலில் மந்தகதியிலேயே நடத்தினர். ஆனால் புலிகளின் பலவீனமான அம்சங்களை அடையாளம் கண்ட பின்னர் படை நகர்வின் வேகம் யாரும் எதிர்பார்த்திராத அளவிற்கு வளர்ச்சியடைந்திருந்தது. ஆனாலும் தமது இறுதிக் கணம் வரையிலும் புலிகளின் தாக்குதல்கள் நடந்துகொண்டே இருந்தன என்பதையும் இங்கே நாம் கவனிக்க வேண்டும். இருந்தபோதும் பிரபாகரன் தன்னுடைய போரின் மூலம்யுத்தத்தின் மூலம்இனிமேல் எதையும் சாதிக்க முடியாது என்ற உண்மையை வந்தடைந்தார். பிரபாகரனைப் போலவே ஏனைய புலிகளின் உறுப்பினர்களும் இந்த உண்மைக்கு வந்து சேர்ந்திருந்தனர். குறிப்பாக மேற்குலகம் இந்தச் சந்தர்ப்பத்தில் சிறிலங்கா அரசுக்கு ஏதாவது அழுத்தங்களைக் கொடுக்கும்; யுத்த நிறுத்தமோ நிபந்தனையுடன் கூடிய பேச்சுவார்த்தைச் சூழலோ உருவாக்கப்படலாம் என்று அவர்கள் நம்பினர்.

இதற்கு முன்னர் கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் தமிழகத்தில் நடந்த போராட்டங்களும், கட்சிகளால் முன்னெடுக்கப்பட்ட தீர்மானங்களும் குறிப்பாகத் தமிழக முதல்வர் மு. கருணாநிதியின் தமிழ்நாடு அரசு எடுத்த முயற்சிகளும் இந்திய மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த எதிர்பார்ப்பு தனியே புலிகளுக்கு மட்டும் இருக்கவில்லை. சகல தமிழ் மக்களுக்கும் தமிழ்க் கட்சிகளுக்கும் இருந்தது. இந்திய மத்திய அரசு தன்னுடைய தீர்மானங்களில் அல்லது நிலைப்பாட்டில் மாற்றங்களை ஏற்படுத்தினால் நிலைமை சாதகமாக மாறும் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. ஆனால் இந்த எதிர்பார்ப்புக்கு எதிராகவே நிகழ்ச்சிகள் நடந்தன. ராஜீவின் படுகொலையைப் புலிகள் சாதாரணமாகக் கருதினார்கள். இந்தியா அப்படி அதைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்திய யதார்த்தத்தின்படி இந்தியாவால் அந்தக் கொலையைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என்பதும் பிரபாகரனுக்குத் தெரியாமல் இல்லை. ஆனால், அவ்வாறு அவர் நம்ப விரும்பினார். தமிழக எழுச்சி நிச்சயம் மாற்றங்களை ஏற்படுத்தும் என்று அரசியல் துறைப் பொறுப்பாளர் நடேசன் பிரபாகரனுக்கு நம்பிக்கையூட்டினார். இந்தியாவின் தேசியக் கட்சிகளான இடதுசாரிகளும் பாரதீய ஜனதாவும் ஈழத்தமிழர் ஆதரவு நிலைப்பாட்டையும் சிறிலங்கா அரசுக்கெதிர் போக்கையும் வெளிப்படுத்தியிருந்தமை பிரபாகரனுக்கும் நடேசனுக்கும் அதிக நம்பிக்கையளித்தது. ஆனால், இந்திய மத்திய அரசின் போக்கில் எந்த மாற்றத்தையும் காண முடியவில்லை. மாற்றம் ஏற்பட வாய்ப்புமில்லை. தமிழக அரசுக்கும் இந்திய அரசுக்கும் இடையிலான உறவும் அவற்றின் இணைந்த நிலைப்பாடுகளும் எவ்வாறு இருக்கும் என்பதெல்லாம் பிந்தியே புலிகளுக்கு விளங்கியது. நீண்டகால ஈழப்போராட்ட ஆதரவாளர்களாக இருக்கும் நெடுமாறன் போன்றோர், மக்கள் திரட்சியை ஓரளவுக்குக் கொண்ட ராமதாஸ், திருமாவளவன் போன்றோரின் செல்வாக்குகளுக்கும் ஒரு எல்லையுண்டு. அதிகாரத்திலிருக்கும் தரப்பைத் தவிர பிற சக்திகளின் ஆதரவுகளுக்கு ஒரு வரையறை உண்டு என்ற விசயங்களையெல்லாம் பிரபாகரன் பிந்தியே புரிந்துகொண்டார். இதேவேளை மாற்று நடவடிக்கைக்கான அவகாசமே இல்லாமல் அரசு அரசியல் நடவடிக்கைகளையும் இராணுவத் தாக்குதல்களையும் தீவிரப்படுத்தியது.

சர்வதேசத் தரப்பை ஒரே முகப்படுத்திய சிங்கள இராசதந்திரம் பாகிஸ்தான், அமெரிக்கா, சீனா, ரஷ்யா, இந்தியா, இஸ்ரேல், பிரித்தானியா எனச் சகல நாடுகளில் இருந்தும் ஆயுத உதவிகளையும் போர்த்தொழில் நுட்பத்தையும் அரசியல் ஆதரவையும் பெற்றுக்கொண்டது. மகிந்த ராஜபக்சே எந்த விளைவுகளுக்கும் முகம் கொடுக்கத் தயார் என்ற நிலையில் தீர்மானங்களை எடுத்தார். ஏற்கனவே பெற்றிருந்த வெற்றிகள் சிங்களத் தரப்புகள் அத்தனையையும் போருக்கு ஆதரவாகத் திரட்டின. பிரபாகரன் எல்லோருடைய வெறுப்புக்கும் கோபத்துக்கும் ஆளானவர் என்ற அடிப்படையில் தமக்குள் முரண்கொண்ட சக்திகளும் இந்த விவகாரத்தில் ஒன்றுபட்டன. தமிழர்களோ புலிகளோ நெருக்கடியில் இருந்து தம்மைக் காத்துக்கொள்ள எந்த நண்பர்களும் இல்லாத நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தனர்.

(அருண் நடேசன்)

(தொடரும்….)