தமிழர்களின் அபிலாஷைகளை, ‘பொங்கு தமிழ்” தமிழர்ப் போராட்டத்தின்பால் ஈடுபாடுள்ள அனைவரையும் ஒன்றிணைத்து, சிங்கள தேசத்துக்கும் சர்வதேசத்துக்கும் பிரகடனப்படுத்தினர்.
இந்த ‘பொங்கு தமிழ்” பிரகடனத்துக்கு நிகராக ஆயுதப் போராட்டம் மௌனித்த பின்னர், அந்தப் பணியை, தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுக்கவில்லை என்றும் ஆதலால், தமிழர்களின் அபிலாஷைகள் தொடர்பான கருத்தியலும் உணர்வும், இன்னும் நீறுபூத்த நெருப்பாக இருக்கிறது என்பதை உலகுக்கு அறிவிக்கும் நோக்குடன், தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டு, அதன்மூலம் “நமது தலைவிதியை நாமே தீர்மானிப்போம்; போராட்ட வடிவங்கள் மாறலாம், போராட்டம் மாறாது” என்பதைத் தெளிவாகச் சொல்வதற்காக, ‘எழுக தமிழ்” நிகழ்வு முன்னெடுக்கப்படுகின்றது.
இந்தக் கருத்தியலுடன், தமிழர் விடுதலைப் போரில் நலிவுற்ற எமது பண்பாடு, வரலாறு, அரசியல், கல்வி, பொருளாதாரம், அபிவிருத்தி என்று மீளக் கட்டமைக்கப்படுவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்தல் போன்ற நோக்கங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. ஓர் அரசியல் கட்சியாக இல்லாமல் தமிழர் தாயகக் கோட்பாடுசார் வேலைத்திட்டங்களை முன்னெடுத்தல், நியாயபூர்வமான அரசியல் கோட்பாடுகளுக்கு வழிசமைத்து, தமிழர் அபிலாஷைகளை நிறைவேற்ற, தமிழ் அரசியல் சக்திகளுக்கு வழிகாட்டுதல் என்ற கருத்தியல்களையும், தமிழ் மக்கள் பேரவை கொண்டிருந்தது. ஆரம்பகால இந்தக் கருத்தியல்கள், எந்தளவுக்கு யதார்த்தமானவை, செயற்றிறனுடையவை என்பது கேள்விக்குறியாகும்.
அமைப்பு ரீதியாக கொள்கைத் திட்டங்கள் பற்றியும் கருத்தாடல்கள் பற்றியும் கருத்துகள் தெரிவிக்கப்பட்ட போதும்கூட, இதுவரை ஒரு முறையான ஒழுங்குபடுத்தப்பட்ட நிகழ்ச்சித் திட்டங்களை, இவ்வமைப்பு கொண்டிருக்கவில்லை என்றே கருதலாம்.
ஏனெனில், முதற்றடவையாக வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் நடந்த எழுக தமிழில், வடபகுதியில் நிகழ்ந்த அணிதிரட்டல்களானவை, கிழக்கைப் பொறுத்தவரையில் வெற்றியளிக்கவில்லை. கிழக்கில், முறையான ஆயத்தமும் செயற்றிறன்வாய்ந்த முன்னெடுப்புகளும், அதற்கான வேலைத்திட்டங்களும் இருக்கவில்லை. இதனால், ஒன்றுக்கு இரண்டுமுறை பிற்போடப்பட்ட நிலையிலேயே, “எழுக தமிழ்” நிகழ்வு நடைபெற்றது. அதன்பின், கிழக்கில் பேரவையின் வேலைத்திட்டம் என்ன என்பது எவருக்கும் புரியாத புதிராகவே இருக்கிறது. மேலும், இந்த “எழுக தமிழ்” நிகழ்வு கிழக்கில் நடைபெற்ற பின்பே, தமிழ் காங்கிரஸ் கட்சி, தனது அரசியல் நடவடிக்கைகளுக்காக கிழக்கில் அலுவலகம் ஒன்றைத் தொடர்ந்து செயற்படுத்தத் தொடங்கியது. அதற்கு முன், அக்கட்சிக்கு இங்கு முகவரியே இருக்கவில்லை.
இவ்வாறான சூழ்நிலையில், அன்றைய எழுக தமிழில் ஒன்றுபட்டிருந்த காட்சிகள் தற்போது முன்னாள் வடமாகாண முதலமைச்சர் ஓய்வுபெற்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனால் ஏற்பாடு செய்யப்படும் எழுக தமிழில் ஒன்றாக இல்லை. இதற்குக் காரணம், அவரவர் சுயநல அரசியல் செயற்பாடுகள்தான்.
இந்த இலட்சணத்தில் ஒன்றுபட்டு இருக்கும் தமிழ் மக்களைத் துரோகிகளாகவும் தியாகிகளாகவும், பிரதேசவாதிகளாகவும், சாதியவாதிகளாகவும், மதவாதிகளாகவும் பிரிப்பவர்கள், இந்தத் தமிழ் அரசியல் கட்சித் தலைவர்களேயாவர். ஏனெனில், தமிழருடைய போராட்டமும் அதன் இழப்புகளும், தியாகங்களும், ஒட்டுமொத்தமாக அது தமிழருடையதே. அதை எவரும் விலைபேசிக் கூறுபோட்டு ஆதாயம்பெற முடியாது.
தமிழர்கள், தங்கள் உரிமைகளையும் அபிலாஷைகளையும், அஹிம்சை வழியில் பெற்றுக்கொள்ள முயன்று அது பொய்த்ததை அடுத்தே, ஆயுதம் ஏந்தினர். இதனால், போராட்டத்தின் துரித வளர்ச்சி, கருத்துச் சுதந்திரம், போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு, ஜனநாயக அடிப்படையில் பல்வேறு போராட்டச் சக்திகள் கிளம்பின. தனிநாடு, சமஷ்டி என்ற அடிப்படையில், தந்தை செல்வாவின் கருத்தியலை அடிநாதமாக அவை கொண்டிருந்தன. இதன் பின்புலத்தில், ஆயுதமும் அதன் வன்மமும், அதனால் விளைந்த ஆதிக்கப் போக்குகளும் கட்டுற்றன எனலாம். இதன் காரணமாக, இயக்க மோதல்கள், தடைகள், சகோதரப் படுகொலைகள் அரங்கேறின.
இந்தப் பாதிப்புகளின் தாக்கம் உணரப்பட்ட வேளையில், தமிழ் மக்களின் இயல்பெழுச்சியாகத் தோன்றிய பொங்கு தமிழ், தமிழர் பலத்தை உலகுக்கு சொல்லிற்று. ஆனால், இந்தச் சிந்தனை இன்று இல்லை. அதற்கான நோக்கமும் வேலைத்திட்டமும்கூட இல்லை. மகுடவாசகம் மாத்திரம் ‘எழுக தமிழ்’ என்று கூறினாலும், பழைய குத்து, வெட்டுகள், ஜனநாயக விரோத முடிவுகளையே, தற்போதைய ஏற்பாட்டாளர் சி.வி. விக்னேஸ்வரனின் கருத்து வெளிப்பாடு காட்டி நிற்கிறது எனலாம்.
ஏனெனில், ‘எழுக தமிழ்’ என்பது தமிழர்களின் இயல்பு எழுச்சி என்றால், தமிழர் அனைவரும் ஒன்றுபட்டு, ஒரே குரலாகத் தமது உணர்வுகளைப் பிரகடனப்படுத்துவதாகும். அப்படியிருக்கையில், சில கட்சிகளை மக்கள் வெறுக்கின்றனர் என்ற காரணம் ஏன் கூறப்படுகிறது? அக்கட்சிகள் பங்குபற்ற முடியாதென்று தடை விதிப்பது, ஜனநாயக விரோதச் செயலாக விக்கி ஐயாவுக்கு புரியவில்லையா? இங்கு, கருத்தியல், எழுத்தியல், சுதந்திரம் என்பன மறுக்கப்படுகின்றனவா? அப்படி இருக்கையில், ‘இங்குள்ள தமிழர்கள் ஒன்றாவது கண்டு, எங்கோ எம் எதிரிகள் ஓடி மறைந்தனர்” என வீரவசனம் பேசுவது எந்தவகையில் பொருத்தமாகும்?
‘எழுக தமிழ்’ எனும் உணர்வுப் போராட்டத்தில், எல்லாத் தமிழர்களும் கலந்துகொள்ள வேண்டும். அவர்களின் அபிலாஷை ஒன்று என்றால், ஏன் இதற்கு தடை விதிக்க வேண்டும்? தமிழ் மக்கள் தமிழ் மக்கள்தான். யாரும் யாரையும் தீர்ப்பிட முடியாது. இது, ஜனநாயக நாடு. அதுவும் சோஷலிச ஜனநாயக நாடு. அந்த வகையில், தமிழர்கள் ஒன்றுபட்டு, கருத்துச் சொல்லும் உரிமையைப் பிரகடனப்படுத்த உரிமையுண்டு. இதைக்கொண்டு அரசியல் செய்வதற்காக, ஒருபோதும் தடை விதிக்க முடியாது. ‘துரோகிகளைப் பங்குகொள்ள மக்கள் விடமாட்டார்கள்’ என்றுக் காரணங்கூறி, கட்சி அரசியலுக்காக அப்பாவி மக்களைத் தூண்டி, முரண்பாடுகளை ஏற்படுத்தி, தங்களால் தடை செய்யப்பட்ட கட்சிகளை மக்களின் துரோகிக் கட்சிகளாக பிரகடனப்படுத்த முனைவது எந்த வகையிலும் நியாயமானல்ல.
இந்த முரண்பட்ட கொள்கை அரசியல், இன்னுமின்னும் தமிழர்களை அழிக்கும். இறுதியில், அழிவே தமிழர்களுக்கு தீர்வாகும். எனவே, நோக்கம் எதுவோ அதுவே சரியாக அமையவேண்டும். சொந்த நலன்களை அரசியல் வியாபாரம் ஆக்குதல், தமிழர்களின் அபிலாஷைகளை வென்றெடுக்கும் முயற்சிக்கு சிறப்பல்ல.
முடிந்தால், பொங்கு தமிழ் போல் ‘எழுக தமிழ்’ நிகழ்வும், வடக்கிலும் கிழக்கிலுமுள்ள இலட்சக்கணக்கான தமிழர்களை ஒரே வெளியில் அணிதிரள வைக்கட்டும்.எங்கள் பிரகடனங்களை ஒன்றாக உரத்துச் சொல்வோம்.
சுயநல அரசியலுக்கான பயணமாக, ‘எழுக தமிழ்’ ஒருபோதும் இருக்கக்கூடாது. அது, பொதுநல அரசியலாக, தமிழர்களின் ஒரே குரலாக ஒலிக்க வேண்டும். அதற்கான ஜனநாயகப் பாதையை, ஏற்பாட்டாளர்கள் திறக்க வேண்டும். இதுவே, தமிழ் மக்களது பொதுநிலைப்பட்ட வேண்டுகோளாகவும் இருக்கிறது. இலங்கையின் சுதந்திரத்துக்குப் பின்னரான 70 வருடங்களில், இன்னமும் தமிழர்கள், தங்களது அபிலாஷை நிறைவேற்றத்துக்காக அஹிம்சை, ஆயுதம், அறிவு எனப் பல வழிகளைக் கையாண்டிருக்கிறனர். இருந்தாலும், மக்கள் போராட்டங்கள் வேறுபாடுகள் இன்றி நடைபெற வேண்டுமென்றே தமிழ் மக்களின் தலைவர்கள் விரும்பினார்கள்.
போராட்டங்கள் பல வடிவங்களில் இருந்தாலும், அவற்றின் நோக்கம் என்னவோ ஒன்றுதான். இந்த நோக்கத்தை அடைந்து கொள்வதற்காக, எதற்காக பாகப்பிரிப்புகள் நடைபெற வேண்டும்?
ஒவ்வொரு வகையான எண்ணங்களைக் கொண்ட அரசியல் தரப்புகள், தங்கள் தங்கள் சுயநல அரசியல் நிரூபணங்களுக்காக மக்களைப் பிரித்தொதுக்கி, திசை திருப்பி, நீண்டுபோயுள்ள தமிழர்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தைக் காலங்கடந்தியிருப்பதே யதார்த்தமாகும்.
இது இன்னமும் நீண்டதாக மாறுவதும் மாறாதிருப்பதும் அரசியல் தலைவர்களின் கைகளிலேயே இருக்கிறது. எவ்வாறாயினும், அரசியல் தலைவர்களை நம்பியுள்ள மக்களின் ஒருமித்த நோக்கத்துக்கு பங்கம் விளைவிக்காததாகவே, இம்முறை ‘எழுக தமிழ்’ நடைபெற்றாக வேண்டும். தமிழ் மக்களது பொதுநிலைப்பட்ட வேண்டுகோளுக்கு, அதுவே சரியான பதிலாகவும் இருக்கும்.