போருக்குப் பிந்தைய அனுசரணை அரசியல்

போருக்குப் பிறகு, ஜனாதிபதி ராஜபக்‌ஷ, கிராமப்புறங்களில் இருந்து பெருமளவிலான சிங்கள ஆண் இளைஞர்களைத் தேசிய அரசியலிலும், தனது அரசியல் ஆதரவுத் தளத்திலும் வெற்றிகரமாக மீண்டும் இணைத்து, அவர்களுக்கு அரச நிதியைப் பயன்படுத்தி வேலைவாய்ப்பை அளித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சனத்தொகையின் இந்தப் பிரிவினர் முக்கியமாக 18-30 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் அவர்கள் தங்களைச் சிங்கள-பௌத்த அடையாளத்துடன் வலுவாக அடையாளப்படுத்துகின்றனர்.

பெரும்பாலானோர் கிராமப்புறங்கள், குறைந்த அளவிலான கல்வித் தகுதியைக் கொண்டவர்கள் மற்றும் அம்பாறை, திருகோணமலை, பொலன்னறுவை, அனுராதபுரம் மற்றும் மொனராகலை ஆகிய வறிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். அவர்களில் கால் பகுதியினர் – கிழக்கு மாகாணத்தில் உள்ளவர்கள். 

அங்கு பெரும்பாலான சிங்களவர்கள் கல்-ஓயா மற்றும் கந்தளாய் போன்ற நீர்ப்பாசன அடிப்படையிலான குடியேற்றங்களில் இரண்டாம் அல்லது மூன்றாம் தலைமுறை குடியேறிகளாக வாழ்பவர்கள். எனவே, சிறுபான்மையினருக்கு எதிரான செயற்பாடுகளுக்கான ஆதரவுத் தளத்தையும் ராஜபக்‌ஷ உருவாக்கினார்.

இராணுவம், அரச நிர்வாகம் ஆகியவற்றின் அனுசரணையோடு, சிறுபான்மையினரின் நிலங்கள் பறிமுதலுக்குள்ளாகின. சிறுபான்மையினர் பெரும்பான்மையினராக வாழ்ந்த நாட்டின் வடக்குக் கிழக்கில் இனப்பரம்பலை மாற்றுவதில் அனுசரணை அரசியல் முக்கிய பங்கு வகித்தது.

மற்ற முந்தைய ஆட்சிகளைப் போலவே, ராஜபக்‌ஷ ஆட்சியும் அரசியல் அதிகாரத்திற்கான மையத்தில் ஏற்பட்ட நெருக்கடிகளைப் பொருளாதார வளர்ச்சிக்கான போராட்டங்களுடன் ஒத்திசைக்கும் முயன்றது.

நாட்டில் நிலவுவது இனப்பிரச்சினை அல்ல, அபிவிருத்திக்கான தேவையுள்ள பொருளாதாரப் பிரச்சினையே என்று வாதிட்டது.

முன்பு போலவே அனுசரணை அமைப்புகளைப் பேணுகையில், ஜனாதிபதியும் அவரது பரிவாரங்களும் புதிய நிதி ஆதாரங்கள் மூலம் தங்கள் ஆதரவாளர் வலையமைப்புகளை மீண்டும் உருவாக்க முயன்றனர். இராணுவம் மற்றும் ‘போர் தொழில்கள்’ மிகவும் நம்பிக்கைக்குரிய வழிகளாக மாறியது. மற்ற நிதி ஆதாரங்கள் இல்லாத நிலையில், மகாவலி நிதி மற்றும் தனியார் மயமாக்கல் என முன்னர் கிடைத்த அனைத்தும் தீர்ந்துவிட்டமையால்), இராணுவம் அவரது திட்டங்களில் நேரடியாக ஒருங்கிணைக்கப்பட்டது, இது கிட்டத்தட்டத் தவிர்க்க முடியாததாகத் தோன்றியது.

ராஜபக்‌ஷவுக்கு மட்டுமல்ல, அரசியலில் எதிர்கால அரசியல் தலைமைகளுக்கு, அவர்களின் ஆதிக்கம் மற்றும் மேலாதிக்க அரசியல் திட்டங்களை முன்னெடுப்பதற்குப் புலிகளைத் தோற்கடிப்பது மிக முக்கியமானது.

நீண்ட காலமாக, விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் காரணமாக, சிங்கள அரசியல் பிரமுகர்களால், தமது மேலாதிக்கத்தைக் கட்டியெழுப்பும் திட்டங்களில் தமிழ்ச் சமூகத்தை வெற்றிகரமாக இணைத்துக் கொள்ள முடியவில்லை.

விடுதலைப் புலிகளைத் தோற்கடித்ததன் மூலம் ராஜபக்‌ஷ இந்தத் தடையை முறியடித்தார். இறுதிக் கட்டப் போரில் அவர் பயன்படுத்திய மற்றும் வெளிப்படுத்திய இராணுவ வலிமை மற்ற எதிர்க்கட்சிகளுக்குத் தெளிவான செய்தியை அனுப்பப் பயன்படுத்தப்பட்டது.

இந்தப் பின்னணியில், ராஜபக்‌ஷவின் கீழ், சிங்களப் பெரும்பான்மையினர் பல்வேறு வழிகளில் அரச அனுசரணையைப் பெற்றனர். ராஜபக்‌ஷவின் கீழ் புதுப்பிக்கப்பட்ட சிங்கள-பௌத்த தேசியவாத அரசத் திட்டமும் அவரது தலைமையின் கீழ் அரசின் ஆதரவின் கருத்தியல் தன்மையும் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தவை.

இராணுவ வேலைவாய்ப்பு மூலம் சிங்கள இளைஞர்களுக்கு வழங்கப்பட்ட பொருளுதவி, மேலாதிக்கத்தைக் கட்டியெழுப்பும் ஆட்சியின் கருத்தியல் அம்சத்தை நிறைவு செய்தது.

புலிகளுக்கு எதிரான இராணுவ வெற்றியானது பெரும்பான்மையான சிங்கள வாக்காளர்களுக்குத் தனது சொந்த கருத்தியல் பாதையை நியாயப்படுத்த ஆட்சிக்கு உதவியது. இதன் விளைவாக, விடுதலைப் புலிகள் மற்றும் அதன் இராணுவ நடவடிக்கைகள் இல்லாவிட்டாலும், ராஜபக்‌ஷ ஆட்சியால் சிங்கள வாக்காளர்கள் மத்தியில் தனது ஆதரவுத் தளங்களை மீள் கட்டமைக்க முடிந்தது.

போருக்குப் பிந்தைய இலங்கையின் அரசியல் முன்னேற்றங்கள், சிறுபான்மை சமூகங்களிலிருந்து சில உயரடுக்கினருக்கும் பயனளிக்கும் தனிப்பட்ட அனுசரணையின் விரிவாக்கத்தின் மூலம் உயரடுக்கு அரசியலில் சிறுபான்மை சமூகப் பிரிவுகளை இலக்கு வைத்து வெற்றிகரமான ஒருங்கிணைப்பு மற்றும் அணிதிரட்டல் உத்திகளைப் பரிந்துரைக்கின்றன.

இந்த மூலோபாயம் பல உயரடுக்கு பிரிவினரின் வர்க்கத்தைப் பொருட்படுத்தாமல், ஒருங்கிணைக்க முடிந்தது. ஏற்கெனவே, கருத்தியல் மற்றும் பொருள் வெகுமதிகளின் வடிவங்களில் பயன்படுத்தப்படும் அதிகப்படியான அனுசரணையானது, அரசியல் வட்டாரங்களில் உள்ள பலரை ராஜபக்‌ஷவின் நேசவாத ஆட்சிக்கு உள்வாங்குவதில் வெற்றிகண்டது.

இந்தக் கூட்டணியால் பிரசாரம் செய்யப்பட்ட வலதுசாரி அரசியல், எந்த வகையான தீவிரமான அல்லது சமத்துவ அரசியல் பார்வையிலிருந்தும் மேலும் மேலும் அரச கட்டமைப்பை நகர்த்தியுள்ளது.

தற்போதைய அரசியல்-கட்சித் தலைமையிலான ஆதரவாளர் முறையின் உத்வேகம், கிராமப்புறங்களில் சமூக உறவுகளை வடிவமைப்பதில் ஒரு முக்கிய அங்கமாக இருந்த கொலனித்துவ காலத்திற்கு முந்தைய காலகட்டத்தை மீண்டும் காணலாம்.

கொலனித்துவ ஆட்சியின் கீழ், அரசியல் மற்றும் பொருளாதார நவீனமயமாக்கலின் சில கூறுகள் இருந்தபோதிலும், சமமற்ற முறையில் பின்பற்றப்பட்டாலும், பாரம்பரிய ஆதரவு உறவுகள் ஆறு நூற்றாண்டுகள் ஐரோப்பியக் கொலனித்துவ ஆக்கிரமிப்பில் தொடர்ந்து இயங்கின.

கொலனித்துவ பிரித்தெடுக்கும் பொருளாதார நடவடிக்கைகளின் விளைவாக புதிய வாய்ப்புகள், ஒரு புதிய வர்க்கம், காலனித்துவ முதலாளித்துவம் மற்றும் ஒரு புதிய தொழிலாள வர்க்கத்தின் எழுச்சி ஆகியவற்றுக்கு வழி வகுத்தன.

வணிகப் பொருளாதாரத்தில் தொழிலாள வர்க்கத்தின் மீது செல்வாக்கைப் பெறுவதற்கு ஈடாகப் பொருள் நலன்களை வழங்குவதன் மூலம் கொலனித்துவம் மற்றும் முதலாளித்துவம் அதன் சொந்த ஆதரவின் வடிவங்களை வழங்க முடிந்தது.

சுதந்திரத்திற்குப் பிந்தைய காலத்தில், இத்தகைய பழைய மற்றும் மிக சமீபத்திய ஆதரவாளர் வலையமைப்புகள் மறுசுழற்சி செய்யப்பட்டு மீண்டும் ஒருங்கிணைக்கப்பட்டன.

1930களில் இருந்து அரசியல் கட்சி அமைப்பின் நிறுவன மயமாக்கலுக்கு இணையாக அனுசரணை அமைப்பின் நிறுவன மயமாக்கல் சமகால அரசு-சமூக உறவுகளில் குறிப்பிடத்தக்க எதிர்மறை மரபுகளை விட்டுச்சென்றதோடு அரசியலில் வலதுசாரி மேலாதிக்கத்தின் எழுச்சிக்கு பங்களித்தது. 

இன்று, அதன் மேலாதிக்கம் மற்றும் விளைவுகள் பெரும்பாலும் சமூகத்தின் அன்றாட வெளிப்பாடுகளில் தெளிவாகப் புலப்படுகின்றன. ‘பந்தம் பிடிக்கிறாயா’, ‘தெரிந்த ஒருவரும் இல்லையா’, ‘உள்ளே யாரையாவது பிடிப்போமா’  ஆகியன இன்றைய அரசியல் நிர்வாகத்துடனான சாமானியனின் உறவில் பயன்படுத்தப்படும் இயல்பான சொல்லாடல்கள். இவையே அனுசரணை அரசியலின் நவீன வடிவங்கள். 

பல தசாப்தங்களாக, சிங்கள கீழ்த்தட்டு வர்க்க மக்களை இணைத்துக்கொள்ள அனுசரணை அரசியல் அமைப்புமுறையின் சீரான பயன்பாடானது சிங்கள உயரடுக்கின் போட்டி அரசியல் திட்டங்களின் விளைவால் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது.

இது சிறுபான்மை இனக் குழுக்களை அரச அனுசரணை விநியோகத்தில் விளிம்பு நிலைக்குத் தள்ளியதுடன் அவர்களைச் சமமற்ற முறையில் நடத்துகிறது. 1970களின் முற்பகுதியில் அரசின் பொருளாதார மற்றும் சமூகப் பங்கை விரிவுபடுத்தியது மற்றும் ஒரு விரிவான சமூகநல அரசை அறிமுகப்படுத்தியது, ஆளும் சிங்கள-பௌத்த உயரடுக்கிற்கு, கீழ்-வர்க்க சிங்கள மக்களிடம் இருந்து தங்கள் ஆட்சிக்கான சம்மதத்தைப் பெறுவதற்கு இது உதவியது.

ஆனால், காலப்போக்கில் திறந்த சந்தைப் பொருளாதாரத்தின் வருகை சமூக நல அரசைச் சீரழித்தது.

இதனால் கீழ் வர்க்க சிங்கள மக்களின் ஆதரவைத் திரட்டுவதற்காகச் சிங்கள-பௌத்த தேசியவாதத்தின் கருத்தியல் கூறுகள் முன்னிலைக்கு வந்தன. பொருளாதாரத்தோடு, சிங்கள-பௌத்த பேரினவாதம் இணைக்கப்பட்டது.

சிறுபான்மையினரின் பொருளாதாரச் சீரழிவுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வழிகோலப்பட்டது. 

இந்த பொருள், சித்தாந்த உறவின் முக்கிய பயனாளிகள் பெரும்பான்மை சிங்களவர்கள், அவர்கள் இந்த கருத்தியல் அமைப்புமுறைக்கு ஆதரவான ஆதரவாளர் முறைக்கு அதிகளவில் பாதுகாப்பு அளித்தனர். 1977 முதல் திறந்த பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் ஒரு புதிய நகர்ப்புற மையப் பொருளாதாரம் தோன்றியதன் மூலம், முழு ஆதரவாளர் அமைப்பும் அதன் கருத்தியல் அடித்தளங்களும் மிகப்பெரிய மாற்றத்தைச் சந்தித்தன.

இந்த பின்னணியில், ஆதரவாளர் விசுவாசத்தை அப்படியே தக்கவைக்கப் பொருள் வளங்கள் போதுமானதாக இல்லாத போதெல்லாம், போட்டியிடும் உயரடுக்கு பிரிவுகள் வலதுசாரிகளுடன் தொடர்புடைய இன, மத கருத்தியல் உணர்வுகளை ஈர்க்கும் நடவடிக்கைகளில் இறங்கினர்.

ஆளும் உயரடுக்குகள் தமக்கெதிரான எதிர்ப்புச் சக்திகளைக் கையாள்வதற்காக அரசியல் மையத்தில் வலதுசாரி சக்திகளை வளர்க்கிறது. இது பொதுபல சேனா, இராவண பலய, சிங்கலே எனப் பல வடிவங்களை எடுத்தது