தமிழில் யாழ் இசைக்கருவியை ஒத்த இக்கருவிகளில் சில மறைந்தும், வேறு உருவம் தாங்கியும் நிலை பெற்றுள்ளன.
ஒன்றிலிருந்து ஆயிரம் தந்திகள் கொண்ட யாழ் வகைகள் பூர்வ காலத்திலிருந்ததாகவும் அவற்றில் பலாமரத்தில் செய்யப்பட்ட செங்கோட்டி யாழ் என்பதே தற்காலம் வீணை என அழைக்கப்படுகிறது எனவும் மருத்துவ யாழ், சுந்தரி , கின்னரி போன்ற இரண்டு , மூன்று தந்திகள் உள்ள யாழ்கள் அக்காலத்திலேயே வழக்கத்திலிருந்ததாகவும் , மிக இனிமை தரக்கூடியதுமானவையாகவும் இருந்தன என ஆபிரகாம் பண்டிதர் “கர்ணாமிர்தசாகரம் ” என்ற தனது ஆராய்ச்சிநூலில் குறிப்பிடுகிறார்.
இந்திய இசையின் நுட்பமான கமகங்களை அச்சொட்டாக வாசிக்கக்கூடிய இசைக்கருவி வீணையாகும். மனிதக்குரல் எழுப்பும் மிக நுணுக்கமான சங்கதிகளை வீணையைப் போல வேறுவாத்தியங்களால் ஜீவனுடன் அப்படியே பிரதிபலிக்க முடியாது.
இதில் ஆச்சரியம் என்னவென்றால் வீணை என்ற இசைக்கருவி மனித உடலின் அடிப்படையை முன்மாதிரியாகக் கொண்டே செய்யப்பட்டுள்ளது. இதை இசைப்பேரறிஞர் ஆப்ரகாம் பண்டிதர் தனது நூலில் பின்வருமாறு எழுதுகிறார்.
” எப்படி மானுட சாரீரம் தோல், எலும்பு. தசை, மூளை, சுக்கிலம் , இரத்தம், மச்சை எனும் ஏழு தாதுக்கள் பெற்று பூரணமாகிறதோ அப்படியே வீணையும் ஏழு தந்திகளினால் பூரணமடைகிறது. ஏழு தாதுக்களுடன் ஜீவன் பெற்று நல்லறிவுள்ள மனிதனே இனிய செயல்களுக்கும் இனிய ஓசைகளுக்கும் சிறந்தவனாக எண்ணப்படுவது போலவே ஏழு தந்திகளுள்ள வீணையும் மெட்டில் ஜில் உடையதாக இருக்க வேண்டும். அப்படியில்லாதிருந்தால் வீணையின் நாதம் இனிமை கொடுக்காமல் கட்டையாய் நிற்கும். இது வீணை மெட்டின் மேல்வைக்கும் ரேக்குத் தகடுகளில் வெகு நுட்பமாய் செய்து வைக்கப்பட வேண்டும். அப்படியில்லாதிருந்தால் தம்புராவுக்குப் பட்டுக்கயிறுகள் வைப்பது போல வீணைக்கும் வைக்க நேரிடும். இந்த ரேக்கு வைக்கும் இடத்தில் பாதியிலிருந்து நாதம் உண்டாகிறது. ஆகையினால் ஓசையின் கணக்கறிய வீணையின் தந்தியை அளக்கும் பொழுது மெட்டில் தந்தி பொருந்துமிடத்தை நுட்பமாக அளந்து அதில் சரிபாதியில் மத்திய ஸ்தாய் சட்சம் வைக்க வேண்டும். அப்படி செய்யாவிட்டால் சுரஸ்தானங்களின் கணக்கு சற்று பேதப்படும்.
ஒரு சாண், பன்னிரண்டு விரற்கடை என்று நாம் அறிவோ. இதனால் மேரு முதல் மீட்டுவரையுமுள்ள நீளம் 48 அங்குலமாகும். அதுபோலவே ஒருமனிதனின் புருவ மத்திமுதல் மூலாதாரத்தின் சுருஸ்தானம் வரை 48 அங்குலமாயிருக்கும்.
மூலாதாரம் தொட்டு எப்படி முதுகெலும்புகள் மேல் போகப் போக இயற்கை அமைப்பின்படி குறுகிய அளவுடையதாயிருக்கின்றனவோ அதுபோலவே வீணையின் மேருமுதல் மெட்டுவரை செல்லும் சுரஸ்தானங்களின் அளவும் Geometrical Progression படி போகப்போக குறைந்த இடை வெளிகளுள்ளனவாயிருக்கின்றனவென்று நாம் பிரத்தியட்சமாய்ப் பார்க்கிறோம். மேலும் மேருமுதல் படிப்படியாய் எப்படி மெட்டுக்களின் இடைவெளிகள் குறைந்து போகின்றனவோ அப்படியே நாதமானது மேல்போகப் போகப் படிப்படியாக உயர்ந்து ஒன்றுக்கொன்று தீவிரமாய் இடையில் வேறு நாதமுண்டாகாமல் வருகிறதென்று நாம் அறிவோம். மெருஸ்தானத்தில் ஒரு விரற்கடையுள்ள ரேக்கின் மத்தியில் நின்று இசை எழும் என்பதை இதன்பின் வரும் சில வரிகளால் காண்போம்.
இதுபோலவே தூலத்தில் அசைவாடும் பிராணவாயுவை மூலாதாரம் தொட்டு இத்தனை அங்குலத்தில் அசைவாடுகிற தென்றும் அதனின்றே இசை பிறக்குமென்றும் சொல்லுவதை அடியில் வரும் செய்யுள்களால் அறியலாம்…. என்று சிலப்பதிகார அரங்கேற்றுகாதை பாடலை பண்டிதர் உதாரணம் காட்டுகிறார்