மாணவி வித்தியா படுகொலை காரணமான சுவிஸ் குமாரை காப்பாற்ற பின்னனியில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சரமான விஜயகலா மகேஸ்வரனுக்குள்ள தொடர்பு
மாணவி வித்தியா படுகொலை வழக்கின் பிரதான சந்தேக நபரான சுவிஸ்குமார் கொழும்புக்கு தப்பிச் செல்ல உதவியமை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறிய லில் வைக்கப்பட்டுள்ள மத்திய, ஊவா மாகாணங்களுக்கு பொறுப்பான முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவின் வங்கிக்கணக்குகள் சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளன. இதற்கான அனுமதியை குற்றப் புலனாய்வுப் பிரிவின் சமூக கொள்ளை தொடர்பிலான விசா ரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிசந்த சில்வா ஊர்காவற்றுறை பிரதான நீதிவான் மொஹம்மட் ரியாழிடம் நேற்று பெற்றுக்கொண்டுள்ளார்.
அத்துடன், வித்தியா படுகொலை இடம்பெற்ற காலப்பகுதியில், பிரதான சந்தேக நபர் சுவிஸ் குமாரை பொது மக்கள் பிடித்து கட்டி வைத்து தாக்கிய போது, அவ்விடத்துக்கு சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜேகலா மகேஸ்வரன் வருகைத் தந்து, பொது மக்களின் தாக்குதல்களை நிறுத்தக் கோரும் காணொளி ஒன்று நேற்று சந்தேக நபரான பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவின் சட்டத்தரணிகளால் நீதிமன்றில் சமர்பிக்கப்பட்டது.
சிரேஷ்ட சட்டத்தரணி சமிந்த அத்துகோரல தலைமையிலான சம்பத் விதானகே, துஷித் ஜோன் தாஸ் உள்ளிட்ட மூவர் கொண்ட சட்டத்தரணிகள் குழு இந்த காணொளியை சமர்பித்துள்ளது. இந்த காணொளி தொடர்பில் விசாரணை நடத்தி அடுத்த வழக்கு தவணையின்போது மன்றுக்கு அறிக்கை சமர்பிக்க நீதிமன்றம் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளது.
வித்தியா படுகொலை விவகாரத்தில் பிரதான சந்தேக நபரை கொழும்புக்கு தப்பிச் செல்ல உதவிய குற்றச்சாட்டில் தண்டனை சட்டக் கோவையின் 209 ஆவது அத்தியாயத்துக்கு அமைய கைது செய்யப்பட்ட முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க நேற்று அனுராதபுரம் சிறையில் இருந்து கடும் பாதுகாப்புடன் ஊர்காவற்றுறை நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டார்.
இந் நிலையில் வழக்கு விசாரணைகள் ஆரம்பமான போது, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சார்பில் பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வாவும், சந்தேக நபர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி சமிந்த அத்துகோரல தலைமையிலான குழுவினரும் மன்றில் ஆஜராகினர்.
இதன் போது சந்தேக நபரான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க தொடர்பில் அவர் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணிகளால் பிணைக் கோரப்பட்டது.
‘ கனம் நீதிவான் அவர்களே, எனது சேவைப் பெறுநரான சந்தேகநபருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை. வித்தியா விவகாரம் இடம்பெற்று இரு வருடங்கள் ஆகின்றன. இந்த இரு வருடங்களில் ஒரு ஆதாரமேனும் எனது சேவைப் பெறுநருக்கு எதிராக இல்லை. இந் நிலையில் எந்த அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க கூறியதாலேயே தான் சுவிஸ் குமாரை விடுவித்ததாக பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கூறியுள்ளாராம். அப்படியானால் லலித் ஜயசிங்க சொல்லித் தான் அவரை விட்டேன் என அந்த பொலிஸ் உத்தியோகத்தர் குறைந்தபட்சம் ஒரு பதிவொன்றையேனும் இட்டுள்ளாரா?
எனவே எனது சேவைப் பெறுநருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லாத நிலையில் அவருக்கு பிணை வழங்க வேண்டும் என’ சட்டத்தரணி சமிந்த அத்துகோரலவினால் விண்ணப்பம் செய்யப்பட்டது.
எனினும் இதற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவு எதிர்ப்பு வெளியிட்டது. பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா, சந்தேக நபருக்கு பிணை அளிக்கப்படுமாயின் பொது மக்களிடையே கொந்தளிப்பு ஏற்படும். அத்துடன் அவர் ஒரு பொலிஸ் அதிகாரி என்பதால் விசாரணைகளுக்கும் பாதிப்புகள் ஏற்படும். எனவே பிணை வழங்குவதை எதிர்க்கின்றோம். என தெரிவித்தார்.
இந் நிலையிலேயே சந்தேக நபரான லலித் ஜயசிங்கவின் வங்கிக்கணக்குகளை சோதனை இடுவதற்கான நீதிமன்ற உத்தரவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் பெற்றுக்கொள்ளப்பட்டது.
இதன் போது மீளவும் கருத்துக்களை சட்டத்தரணி சமிந்த அத்துகோரல தலைமையிலான லலித் ஜயசிங்கவின் சட்டத்தரணிகள் குழு முன்வைத்தது.
‘ இந்த சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகம் தமிழ் மாறன் எனும் நபர் மீது உள்ள நிலையில் ஏன் அவர் தொடர்பில் நடவடிக்கை இல்லை.
இந்த விவகாரத்தில் பெயர் குறிப்பிடப்பட்ட உப பொலிஸ் பரிசோதகர் ஸ்ரீ கஜன் ஒரு முறை இந்தியாவுக்கும் செல்ல முற்பட்டுள்ளார். இந் நிலையில் அவரை ஏன் இன்னும் கைது செய்யவில்லை. அவரை குற்றப் புலனாய்வுப் பிரிவு மறைத்து வைத்துள்ளதா என அந்த சட்டத்தரணிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதன் போது இதற்கு பதிலளித்துள்ள பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா, உப பொலிஸ் பரிசோதகர் ஸ்ரீ கஜனை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அவரது கடவுச் சீட்டும் முடக்கப்பட்டுள்ளது. அவர் தலைமறைவாகியுள்ள நிலையில் மிக விரைவில் கைது செய்து மன்றில் ஆஜர் படுத்துவோம் என தெரிவித்துள்ளார்.
இந் நிலையிலேயே திறந்த மன்றில் நீதிவான் மொஹம்மட் ரியாழிடம் , லலித் ஜயசிங்கவின் சட்டத்தரணிகள் யூ ரியூப்பில் உள்ள வீடியோ ஒன்றினை சமர்பித்துள்ளனர். வித்தியா கொலை இடம்பெற்ற காலப்பகுதியில் பிரதான சந்தேக நபர் சுவிஸ் குமாரை பொது மக்கள் கட்டி வைத்து தாக்குவதும், அதன் போது அவ்விடத்துக்கு வரும் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அதனை பார்வையிடுவதும் தெரிவதாக சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டினர்.
இராஜாங்க அமைச்சர் அவ்விடத்துக்கு ஏன் வந்தார் என்பது தொடர்பில் ஆராயப்படல் வேண்டும். இந்த விடயம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இதுவரை விசாரணை செய்யவில்லை. எனவே இது தொடர்பிலும் விசாரணை நடத்தப்படல் வேண்டும் என கோரினார்.
சுமார் ஒரு மணி நேரம் வரை நீடித்த வாதப் பிரதிவாதங்களைத் தொடர்ந்து, முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க தொடர்பிலான பிணை கோரிக்கையை எழுத்து மூலம் சமர்பிக்க நீதிவான் அவரது சட்டத்தரணிகளுக்கு உத்தரவிட்டார். அத்துடன் குற்றப் புலனாய்வுப் பிரிவின் கோரிக்கைகளுக்கும் அனுமதி வழங்கி, இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தொடர்புபட்ட வீடியோ தொடர்பில் விசாரணை செய்து மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்கவும் கட்டளையிட்டார். இதனையடுத்து லலித் ஜயசிங்கவின் விளக்கமறியலை எதிர்வரும் ஆகஸ்ட் 8 ஆம் திகதிவரை நீடித்த நீதிவான் மொஹம்மட் ரியாழ் அதுவரை வழக்கை ஒத்தி வைத்தார்.