முதற்கட்டமாக திங்கள், புதன், சனிக்கிழமைகளில் சென்னை- யாழ்ப்பாணம் இடையிலான விமான சேவையை நடத்தவுள்ளதாக அலையன்ஸ் எயார் நிறுவனம் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கூடிய விரைவில் இந்த சேவை, வாரத்தில் ஏழு நாட்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று அலையன்ஸ் எயர் நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து காலை 10.35 மணிக்குப் புறப்படும், 9I 102 இலக்க விமானம், மதியம் 12 மணிக்கு யாழ்ப்பாணம் விமான நிலையத்தை சென்றடையும்.
பிற்பகல் 12.45 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்படும் 9I 102 இலக்க விமானம், பிற்பகல் 2.10 மணியளவில் சென்னையை வந்தடையும் என்றும் அலையன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் கடந்த மாதம் 17ஆம் திகதி திறந்துவைக்கப்பட்டதுடன், அலையன்ஸ் எயார் நிறுவனத்தின் விமானம் முதல் பயணத்தை மேற்கொண்டிருந்தது.
சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கான விமானக் கட்டணமாக 3,990 இந்திய ரூபாயும், வரிகள் மற்றும் ஏனைய கட்டணங்கள் தனியாகவும் அறவிடப்படவுள்ளன.
யாழ்ப்பாணத்தில் இருந்து சென்னைக்கான விமானக் கட்டணமாக 45 அமெரிக்க டொலர் மற்றும் வரிகள், கட்டணங்களும் அறவிடப்படும் என்றும் அலையன்ஸ் நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் ஊடகங்களுக்க தெரிவித்துள்ளார்.