(கா.சு. வேலாயுதன்)
என் மகள் அப்போது மூன்று வயதுக் குழந்தை. அவளை கக்கத்தில் போட்டுக் கொண்டு சிங்கநல்லூர் பேருந்து நிறுத்தத்தில் பஸ்ஸுக்காக நிற்கிறார் என் மனைவி. திடிரென்று போலீசார் சாரிசாரியாக வாகனங்களை ஓரங்கட்டி நிறுத்தச் சொல்கிறார்கள். யாரோ விவிஐபி வரப்போகிற பரபரப்பு. சாலையோரம் காங்கிரஸ் கொடி தாங்கி தொண்டர்கள். தூரத்தில் பயலட் வண்டி முன்வர சயரன் சத்தத்துடன் வாகன வரிசை. சிகப்பு விளக்குகள் சுற்றல். மூன்றாவது வாகனத்தில் பளிச்சென்று தங்க ஜொலிப்பில் அந்த முகம். மனைவியின் முகத்தில் பிரகாசம். ‘அங்கே பாரு சாமி. ராஜீவ் காந்தி மாமா. டாட்டா சொல்லு’ குழந்தைக்கு கை காட்டுகிறாள் தாய். மகளும் கை காட்டி சிரித்து, டாட்டா காட்டுகிறார்கள். சாலையோரம் கைகாட்டியவர், கை கொடுத்தவர்கள், சால்வை, சந்தன மாலை தந்தவர்கள்…